Home செய்திகள் ரணில் பக்கம் தாவுகிறாா் விமலின் சகா – புதிய கூட்டணிக்கு நெருக்கடி

ரணில் பக்கம் தாவுகிறாா் விமலின் சகா – புதிய கூட்டணிக்கு நெருக்கடி

wimal ரணில் பக்கம் தாவுகிறாா் விமலின் சகா - புதிய கூட்டணிக்கு நெருக்கடிஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு கட்சிகள் தங்களுடைய கூட்டணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஜனாதிபதியுடன் இணைந்து புத்தாண்டை
கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் மே தினக் கூட்டம் கிருலப்பனையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மூலம் பாராளுமன்றம் சென்ற தயாசிறி ஜயசேகர, ரொஷான் ரணசிங்க ஆகியோருடன் வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வீரசுமன வீரசிங்க மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இணைந்து இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதியுடன் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதி பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் பியதிஸ்ஸ கலந்து கொண்டதன் மூலம் கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ளதாக பேசப்படுகின்றது.

இதேவேளை டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸில் அங்கம் வகித்த ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அக்கட்சியின் தலைமை பொறுப்பை வகித்த டலஸ் அழகப்பெரும அக்கூட்டணியில் இணையவில்லை.
முன்னதாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் இணைந்து மேலவை மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கிய போதும் அவற்றில் அங்கம் வகித்த பலர் தற்போது அவற்றிலிருந்து விலகி செயற்படுகின்றனர்.

இதனால் விமல் வீரவன்ச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியிலிருந்து பலர் எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை உருவாகக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version