Tamil News
Home உலகச் செய்திகள் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட உலக அளவில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர்.

இந்த சூழலில் ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

“குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் முறையான விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம். கடந்த சில நாட்களாக மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கையாளப்படும் விதம் கவலை அளிக்கிறது. தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக பேரணி சென்ற அவர்களை போலீஸார் கைது செய்தது கவலை தருகிறது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக அவர்கள் போராடி வந்த இடமும் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் கூட்டமைப்பை ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யும். அதன் பின்னர் வீரர்கள் தனி கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு.

Exit mobile version