Tamil News
Home செய்திகள் புலம்பெயா்ந்த இலங்கையா்களின் ஆதரவு ஜே.வி.பி.க்குத்தான் – சுவீடனில் அனுரகுமார

புலம்பெயா்ந்த இலங்கையா்களின் ஆதரவு ஜே.வி.பி.க்குத்தான் – சுவீடனில் அனுரகுமார

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை வெளிநாட்டு இலங்கையர்களின் பிரதான தெரிவாக தேசிய மக்கள் சக்தி இருப்பதாகத் தெரிவித்தார்.

சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க , வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது அமைப்பு மாற்றம் மற்றும் இலங்கைக்கான புதிய மாற்றத்திற்காக பிரசாரம் செய்து வருவதாகவும், அந்த மாற்றத்தை செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அவர்களின் விருப்பமாக இருப்பதாகவும் கூறினார்.

சுவீடனில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு வந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தேசிய மக்கள் சக்தி இங்கு ஆதரவைப் பெற “ஒன்லைன்’ மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “இலங்கையில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அவர்களுக்குக் இது பற்றிக் கூறுங்கள்” என்றும் அவர் தெரிவித்தாா்.

எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாகத் தெரிவித்த திஸாநாயக்க, அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

“கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றினர். ஆனால் அவர்,அந்த மக்களின் அபிலாஷைகளை தகர்த்தெறிந்த பின்னர், கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பொதுக் கருத்தை உருவாக்கினர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அமைப்பு மாற்றத்திற்கான பொதுக்கருத்தை தற்போது உருவாக்கியுள்ளனர். அவர்களின் முக்கிய தேர்வு இன்று தேசிய மக்கள் சக்தி ஆகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version