Tamil News
Home செய்திகள் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வு இதுவாகும் எனவும் இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசமுள்ளதாக தெரிவித்த தமிழக முதல்வர், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version