Home செய்திகள் காவல் நிலையங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறை

காவல் நிலையங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறை

காவல் நிலையங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறை – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

hrc welcome msg காவல் நிலையங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறை

இலங்கை  காவல் நிலையங்களில் இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் மக்கள் சக்தி அமைப்பு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

பாதுக்கை மற்றும் நெலுவ காவல் நிலையங்களில் அண்மையில், ஒரு தாய் மற்றும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் குறித்த முறைப்பாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 2, வெள்ளிக்கிழமை மக்கள் சக்தி அமைப்பின் சார்பில் அதன் நிர்வாக உறுப்பினர் அஷிலா தன்தெனியவால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டை மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளது.

குறித்த சம்பவங்களிலிருந்து, இலங்கை சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட சமிக்ஞையை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும், அவை நிகழாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த முறைப்பாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்குள் அரசமைப்பு உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமையை மீறுவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி பாதுக்கை காவல் நிலையத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.

இதன்போது சிறுமியின் தாய் சம்பவ இடத்தில் இருந்த ஒரு  காவல்துறை அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டார் என்று மக்கள் சக்தி அமைப்பின் முறைப்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூன் 29 ஆம் திகதி தனது தாயுடன் முறைப்பாடு ஒன்றைச் செய்வதற்காக, நெலுவ  காவல் நிலையத்துக்குச் சென்ற 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு காவல்துறை அதிகாரியால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை காவல் நிலையங்களில் இடம்பெற்ற இந்த இரண்டு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் காவல்துறையினர் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனவும் மக்கள் சக்தி அமைப்பு மேலும்  குறிப்பிட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version