Home செய்திகள் இலங்கையில் அதிகரிக்கும் பொருட்களின் விலை -வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் அதிகரிக்கும் பொருட்களின் விலை -வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

விலை அதிகரிப்பிற்கு கண்டனம்

இலங்கையில், பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்    பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாத்திப்புக்களை சந்தித்து வருகின்றனர். எமது குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எமது மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் நின்றே நாட்கள் கழிகின்றது. இந்த நிலை எப்போது மாறப்போகின்றதோ என்ற அச்சம் இன்று அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டையும், மக்களையும் படுகுழியில் தள்ளிய இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்” என மேலும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது பூந்தோட்டம் சந்தியில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன், கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் கடலுணவுகளே வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டும் நிலையில் தற்போது அதன் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் விலையுடன் தொடர்புபட்ட கட்டுமானப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் சுமார் 75% கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிகழ்வு மண்டபம் மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை 40% அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தெரிவித்துள்ளது.

அதே போன்று எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30 வீதமான உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version