Tamil News
Home செய்திகள் சட்டத்தரணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

சட்டத்தரணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பில் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களான சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிலையம் என்பன இணைந்து வாய்மொழிமூல அறிக்கையொன்றை வெளியிட்டன.  இவ்வமைப்புக்களின் சார்பில் பேரவையில் உரையாற்றிய ஜுலியா ஸ்மக்மென் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதன் அவசியம் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோன்று, சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை, சுயாதீனமான சட்டத்தொழில்வாண்மையாளர் ஊடாக சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இயலுமை என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் செயற்திறனாக இயங்கும் நீதிப்பொறிமுறை ஆகியவற்றின் அடிப்படைக்கூறுகளாகும்.

அதன்படி, எவ்வித இடையூறுகளோ, அத்துமீறல்களோ, அடக்குமுறைகளோ அல்லது முறையற்ற தலையீடுகளோ இன்றி தமது தொழில்சார் கடமைகளை முன்னெடுப்பதற்கான இடைவெளி சட்டத்தரணிகளுக்கு இருக்கவேண்டும்.

இருப்பினும், இலங்கையைப் பொறுத்தமட்டில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையின உரிமைகள் போன்ற அரசியல் ரீதியில் உணர்திறன்வாய்ந்த வழக்குகளில் இயங்கும் சட்டத்தரணிகள் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று, சட்டத்தரணி என்ற ரீதியில் தமது பணியை மேற்கொண்ட சட்டத்தரணிகள் அதனுடன் தொடர்புபட்ட வகையில் கைதுகளுக்கும் குற்றவியல் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வலுகட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவரது வழக்கு விசாரணைகளின் சுயாதீனத்தன்மை குறித்து நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், தொடர் தாமதமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று, சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக உரிய பாதுகாப்பை வழங்குமாறும் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

Exit mobile version