Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர் இறைமையின் பாதுகாப்பிலேயே முஸ்லீம் மலையக மக்களின் பாதுகாப்புண்டு | ஆசிரியர் தலையங்கம் | ...

ஈழத்தமிழர் இறைமையின் பாதுகாப்பிலேயே முஸ்லீம் மலையக மக்களின் பாதுகாப்புண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 268

ஈழத்தமிழர் இறைமையின் பாதுகாப்பிலேயே முஸ்லீம் மலையக மக்களின் பாதுகாப்புண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 268

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், மத்தியஸ்தசபை (திருத்தச் சட்ட மூலம்), மத்தியஸ்தத்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்று அங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்ட மூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் 04.01.24 இல் கூடிய பொழுது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் கிராம மட்ட முரண்பாடுகளைத் தீர்க்க சகவாழ்வு மையங்களும் கிராமங்களில் தொடங்கப்படவும் இக்குழு அனுமதி அளித்துள்ளது. கூடவே இந்த அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான இக்குழுவின் பரிந்துரைகளை நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருக்கு அனுப்பி வைப்பதெனவும் இந்தக் குழுவில் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இந்த ஆண்டு தொடங்கிய முதல் வாரத்திலேயே சிறிலங்கா சிங்களவருக்கு உரிய சிங்கள நாடு பௌத்த ஆகமயச் சட்டத்தைக் கொண்ட நாடு என்ற மகிந்த கோத்தபாய சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கான ரணிலின் திட்டம் ஆரம்பமாகி விட்டது. உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு என்பது இதனை ஏற்று சிங்களவருக்கான அடிமைச் சமுகமாக வாழ ஈழத்தமிழர்களையும் முஸ்லீம் மலையக மக்களையும் பழக்குவதாகவே அமையும். இதற்குத் துணையாக தென்னாபிரிக்கா சுவிஸ் யப்பான் ஆகிய நாடுகளையும் நல்லிணக்கமாக வாழப் பயிற்சி அளித்தல் என்ற பெயரில் இந்நாடுகளின் தூதுவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விட்டே அடுத்து சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய நாளாந்த வாழ்வுக்கான இனங்காணக்கூடிய அச்சத்தை அளிக்கும் விடயங்களில் அரசத்தலைவர் என்ற முறையில் ஏதாவது செய்வதாக யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறுவார் என்ற எதிர்பார்ப்பு பலரிடை இருந்தது. ஆனால் அவர் மக்களுக்குப் பாதிப்பு அளிக்கும் எந்த விடயத்திலும் தான் எதுவும் செய்ய நினைக்கக் கூட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தும் பலத்த மௌனத்தை யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் மாகாணங்களுக்கான பொருளாதாரப் பங்களிப்பைத் தமிழர்கள் செய்வதற்கு இப்போது அரசியலமைப்பில் உள்ள 13 வது திருத்தம் மற்றைய மாகாணங்களைப் போல் தமிழர்க்கும் போதும் என்கிற போதனையையும் யாழ்ப்பாணத்தில் வைத்தே செய்துள்ளார். இதன்வழி அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற கோத்தபாயாவின் கொள்கையே தனது கொள்கை என மொட்டுக்கட்சிக்காரர்களுக்கும் தெளிவுபடுத்தித் தனது ஜனாதிபதி பதவியைத் தக்கவைப்பதற்கான முயற்சியையும் வெற்றிகரமாக நிலைநாட்டியுள்ளார். அதே வேளை 13ம் திருத்தம் என்பது தமிழர்களுக்கான சிறப்பான ஒன்றல்ல எல்லா மாகாணங்களுக்கும் நிதி பகிர்வை ஒழுங்குபடுத்துகின்ற ஒன்று என்பதையும் ரணில் மீளவும் தெளிவுபடுத்தி 13ஐ தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகமாடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தலையிலடிகொடுத்துள்ளார். ரணிலின் நரித்தந்திரமான இந்த இராஜதந்திரத்தின் மற்றொரு செயற்பாடாக இஸ்ரேலிய கமாஸ் யுதத்தத்தில் செங்கடலில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக கட்டமைக்கப்பட்டு வரும் ஆபரேசன் ப்ரொஸ்பரிட்டி கார்டியன் கப்பல் படையணிக்குச் சிறிலங்காக் கடற்படைக் கப்பல்களையும் இணைத்துள்ளார். இதனால் இலங்கையில் முஸ்லீம் மக்களிடை பலத்த அதிருப்தி தோன்றியுள்ளது. இவ்வாண்டின் முதல் வார நிகழ்வுகள் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறைமையின் பாதுகாப்பிலேயே முஸ்லீம் மலையக மக்களின் பாதுகாப்புண்டு என்பதை அவர்கள் மனதிருத்த வேண்டுமென இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது. நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது போல 2024 இல் ஈழத்தமிழர்களும் மலையக முஸ்லீம் மக்களும் மனந்திறந்து பேச்சுக்களை நடாத்தித் தங்களிடை நல்லிணக்கம் மற்றும் இனத்துவ ஒற்றுமைக்கு வழிகாட்டக் கூடிய தங்களின் துறைசார் அனுபவசாலிகளின் பேரவையைத் தோற்றுவிக்க வேண்டும் இதுவே கூட்டாக ரணிலின் நரித்தந்திர அரசியலை எதிர்கொள்ளும் பலத்தைத் தரும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
மேலும் சிறிலங்காவின் பாதுகாப்புக்கான யூனியர் அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் 200000 ஆக உள்ள இராணுவத்தினரை 2024 இல் 135000 ஆகவும் 2030க்குள் 100000 ஆகவும் குறைத்தல் இன்றைய பொருளாதாரத்தின் தேவையாகக் கருதுகின்றார். இவ்வாறு இராணுவத்தினர் படையிலிருந்து விலக்கப்படுகையில் அவர்களைத் தமிழர் தாயகப்பகுதிகளில் குடியேற்றுவதன் மூலம் அவர்களுக்கான வாழ்வுக்கு உதவுகின்ற நேரத்தில் தமிழர் தாயகப்பகுதிகளின் நிலத்தைச் சிங்கள மயப்படுத்தும் நோக்கையும் சிறிலங்கா நிறைவேற்றிக் கொள்ளும். இத்தகைய வடக்கு கிழக்குச் சிங்களக் குடியேற்றங்களுக்குத் தொண்டர் அமைப்புக்கள் வழியான உதவிகளை அவர்களுக்குப் பெருக வைத்து அவ் உதவிகளுக்கான அனைத்துலக நிதிகளையும் பெறுதல் என்பது ரணிலின் மற்றொரு ராஜதந்திரச் செயல். இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலேயே “எனது யாழ்ப்பாணக் கனவு அறக்கட்டளை” (My Dream Jaffna Foundation) மசோதா சிறிலங்காப் பாராளுமன்றத்தில் கேகாலை மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதி சரதி டுஸ்மந்தவால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த எனது யாழ்ப்பாணக் கனவு அறக்கட்டளை யாழ்ப்பாணத்தில் நலிவடைந்தோரின் கல்வி மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கு உதவுதல் என்ற பெயரில் அங்கு குடியமர்த்தப்படும் சிங்களக் குடும்பங்களுக்கான நிதி உதவிகளை வழங்கி அவர்களை யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியமரச் செய்யும் என்பது உறுதி. இவ்வாறு சிங்கள ராஜதந்திரம் தன்னை பலவாறாக நிலைப்படுத்துகையில் தமிழரின் ராஜதந்திரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆசிய பசுபிக் பகுதியின் முக்கிய இதழான ‘ ராஜதந்திரம்’ ‘The Diplomat’ 03.01.2024 இல் யப்பான் பல்கலைக்கழகத்து அமைதிக்கும் முரண்பாடுகள் ஆய்வுக்குமான பேராசிரியர் மார்க் எஸ் கோகன் (Mark S Cogan) அவர்கள் வெளியிட்ட “இமாலயப் பிரகடனம் : தமிழ்க் குழுக்களிடை வெளிப்படையான ஆழமான பிளவை ஏற்படுத்தியுள்ளது-புலம்பெயர் குழுக்கள் உலகத் தமிழர் பேரவை பௌத்தத் துறவிகளுடனான உரையாடலில் தங்களைக் கலந்துரையாடாது தான்தோன்றித்தனமாக நடந்தமைக்கு முகத்தில் அறைந்துள்ளன” என்ற தலைப்பிலான கட்டுரை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. “உலகத் தமிழரமைப்பு உடன் சிங்களப் பௌத்த துறவிகள் உரையாடல் நடாத்திக் கூட்டாக வெளியிட்ட இமாலாயப் பிரகடனம் தமிழர்களிடை கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரகடனம் ஆறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. 01. ஒரு பன்முகச் சமுதாயத்தை உருவாக்கல் 02. பொருளாதார வீழ்ச்சியை மேற்கொள்ளுதல் 03. தனியார் உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் பொறுப்புறுதிப்படுத்தும் அரசியலமைப்பை உருவாக்கல் 04. சமய மற்றும் இனத்துவக் கூட்டங்களை ஏற்றுக்கொள்ளுதல் 05. நல்லிணக்கத்துக்கு உழைத்தல் 06. உடன்பாடான இருதரப்பு பலதரப்பு உடன்படிக்கைகளைச் செய்தல்.. இது உலகத் தமிழர் பேரவையின் ‘ தமிழர்களையும் அனைத்துலக சமுகத்தையும் ஏமாற்றுகின்ற செயல்நோக்கம் கொண்ட அரசியல் சூழ்ச்சி” எனவும் ” ‘நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் கொடுங்கோன்மையை தொடர்ந்தும் நிலைநிறுத்தும் முயற்சி’ எனவும் 70 தமிழர் அமைப்புக்கள் கருத்து வெளிப்படுத்தியுள்ளன. இந்தப் பிரகடனத்தின் முக்கியமான உள்ளடக்கங்களைப் பார்க்கின்ற பொழுது அவை பலத்த விமர்சனத்துக்குரியனவாகவுள்ளன.
முதலில் பன்முகச் சமுதாயத்தை உருவாக்கல் என்பது வெறுமனே இனங்களுக்கிடை சமத்துவமென எழுதுகிற அரசியலமைப்பில் அல்ல இனங்களுக்கான சமநிலையான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குழப்பிய முறைகள் மாற்றப்பட்டு மீள்கட்டமைக்கப்பட வேண்டும். சிங்கள இனத்துவச் சர்வாதிகாரத்தை முன்னெடுக்கும் சிங்களக் கட்சிகளைக் கொண்ட சிறிலங்காப் பாராளுமன்ற முறைமையானது சிங்களப் பெரும்பான்மையினரின் ஆட்சியை முன்னிலைப்படுத்தி சிங்கள இனத்துவ தேசியத்தை அரசியல் நிகழ்ச்சி நிரலாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கிறது. மிலேனியம் பிறந்த 2000ம் ஆண்டில் நீல் டீவோட்டா (Neil Devotta) அவர்கள் பிரிட்டிஸ் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் பசுபிக் விடயங்கள் (Pacific Affairs) இதழில் வெளியிட்ட சிறிலங்கா குறித்த “சனநாயக்தைக் கட்டுப்படுத்தல், சிதைவுகளை நிறுவனப்படுத்தல், ஈழத்திற்கான தாகம் – சிறிலங்காவில் இனத்துவ முரண்பாட்டை விளக்கல்” (Control Democracy, Institutional Decay and the Quest for Eelam : Explaining Ethnic Conflict in Sri Lanka) என்னும் ஆய்வில் கூறிய சிங்களப் பெரும்பான்மையினருக்குச் சாதகமான கட்டுப்பாடுகள் கொண்ட சனநாயகமே நிலவுகிறது. இதனால் மற்றைய இனங்களுடன் நல்லிணக்கத் தீர்வுகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் தவிர்ப்பது மட்டுமல்ல சமத்துவமின்மைகளை ஏற்படுத்தக் கூடிய அதிகார வலுவாண்மைக் கட்டமைப்புக்களை வேண்டுமென்றே கட்டமைத்து சிங்களப் பெரும்பான்மை ஆட்சியைக் கட்டமைத்து அதனை யாருமே மீறாதவாறு பாதுகாத்து வருகின்றனர். ஆனால் உண்மையான சமத்துவமான ஆட்சி முறைமையினை உருவாக்குவதற்கு நல்லிணக்கம் தேவை. இருப்பினும் சிங்கள இனத்துவத் தேசியத்தை முன்னெடுப்பவர்கள் தங்கள் அழுத்தங்கள் மூலம் தாங்கள் முன்னேற்றம் அடையச் செய்துள்ள அதிகாரவலுவாண்மைகைளக் கைவிடாதவாறு தடுப்பதினால் அரசியலில் நல்லிணக்கத் தீர்வுகள் நடைமுறைச் சாத்தியமற்றதாகவே உள்ளன” என்பது பேராசிரியர் மார்க் எஸ் கோகனின் கருத்தாகவுள்ளது. இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்களின் இறைமையைப் பலப்படுத்தல் மூலம் மலையக முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அனைவரும் செயற்படும் ஆண்டாக 2024 அமையட்டும்.

Exit mobile version