Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் 2023 இன் நீதிக்கான சாதக நிலைகளை 2024 இல் இறைமைக்கான ஆதரவாக்குவோம் | ஆசிரியர்...

2023 இன் நீதிக்கான சாதக நிலைகளை 2024 இல் இறைமைக்கான ஆதரவாக்குவோம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 267

2023 இன் நீதிக்கான சாதக நிலைகளை
2024 இல் இறைமைக்கான ஆதரவாக்குவோம்| ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 267

முதலில் அனைவருக்கும் 2024 பாதுகாப்பான அமைதி வாழ்வு தரும் ஆண்டாக அமைய இலக்கு ஆசிரிய குழு 01.01.2024இல் தொடங்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. 2024 உலகப் போராண்டாக மாறலாம் என்னும் நியாயமான அச்சம் பலமாக உள்ள நிலையில் 2023ம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மேலான படையெடுப்பு 2024இல் ஏழுமுனை யுத்தமாகப் பரிணாமம் அடையும் என்னும் எதிர்பார்ப்பை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோகவ் காலன்ட் (Yoav Gallant) இஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். காசா, லெபனான், சிரியா, யூதா மற்றும் சமாரியா (வெஸ்ட் பாங்க்கு யூதப்பாரம்பரியப் பெயர்) ஈராக், யேமன், ஈரான் என்னும் ஏழு முனைவாக்கம் போரில் பரிணாமம் அடையலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் ஆறு பயமுறுத்தல்களுக்குத் தாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இஸ்ரேலிய மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். 20600 உயிர்களின் இழப்புக்கும் 55000 பேர் படுகாயமடைவதற்கும் பலஸ்தீனியர்களின் 85 வீதமான நிலப்பரப்பில் இருந்து 2.3 மில்லியன் மக்களை வெளியேற்றியும் 26.12.2023இல் உலகில் 21ம் நூற்றாண்டின் மிகப்பயங்கரமான யுத்தம் என பலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் மக்கள் மேலான யுத்தம் அமைந்துள்ளது. 07.10.2023இல் காமாசின் தாக்குதலால் 1140 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு 250 இஸ்ரேலியர் பணயக்கைதிகளாக்கப்பட்டுத் தொடங்கப் பெற்ற இந்த யுத்தக் களம் 2024இல் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்குமான அச்சமாக வளர்ச்சி பெற்று வருகிறது. கூடவே ரஸ்யா உக்ரேன் மேல் பன்நிலை தாக்குதல்களை அதிகரிப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அணுவாயுதத் தாக்குதல்களை அணுவாயுத இருப்பினைக் கொண்டிராத உக்ரேனுக்கு உதவியளிக்கும் நாடுகள் மேலும் விரிவுபடுத்தும் என எச்சரித்துள்ளமையும் 2024 உலகப்போராண்டாக மாறும் என்கின்ற அச்சத்தை மேலும் வளரச் செய்கிறது. மேலும் காலநிலை மாற்றப் பிரச்சினைகளால் அதிக பாதிப்புள்ள உலக நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இதில் அதிக பிரச்சினையைச் சந்திக்கும் என்ற அறிவார்ந்த அறிவிப்பை இப்பகுதி மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்ற ஆபத்து முன் முகாமைத்துவமின்றி, சிறிலங்கா தங்கள் நிலத்தைக் கடலை விற்றுப் பிழைக்கும் சூழலில் இம் மக்கள் தவிக்கின்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தின் இன்றைய வெளிவிவகாரக் கொள்கைகளால் வடக்கு கிழக்குக்கு இந்துமாக்கடல் பகுதி உலகப் போர்க்களமாக மாறும் அபாயத்தையும் உடையதாகிறது. இவற்றுக்கு முகங்கொடுக்க உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களின் அறிவையும் ஆற்றல்களையும் நிதிவளத்தையும் கூட் டொருங்குப் படுத்தும் ஈழத்தமிழர் கல்வித் தொழில்நுட்ப வர்த்தகப் பேரவை 2024இன் தேவையாகிறது என்பது இலக்கின் முதல் எண்ணமாகவுள்ளது.
மேலும் ஈழத்தில் தை பிறந்ததுமே புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிறிலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதன் மூலம் 1979ம் ஆண்டு முதல் இனஅழிப்புக்குச் சட்டத் தகுதியளிக்கும் தன் செயலை மீளுருவாக்கம் செய்யும் நேரத்தில், ‘இமாலயப் பிரகடனம்’ என்னும் உலகத் தமிழர் பேரவையினதும் கனடிய காங்கிரசினதும் பிரகடனம், ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள மோசமான விளைவுகளைத் ‘தமிழ் மக்கள் அடைய வேண்டிய இலக்குகளை குறைமதிப்பிற்கு உள்ளாக்குவதுடன் இலங்கையின் யுத்தக்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு உதவும் பிரகடனமாகவும் இது மாறியுள்ளது. இந்தப் பிரகடனம் சிறிலங்காவின் நீதி பொறுப்புக்கூறல் என்ற இலக்கில் ஒரு அடி பின்னோக்கிய நடவடிக்கை” என்னும் கனடாவின் பிரம்டன் மேயர் மதிப்புக்குரிய பட்ரிக் பிரவுன் அவர்களின் கடுமையான கண்டனம் உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. மேலும் அவர் “கனடாவின் பிரம்டன் நகரமும் அனைத்து நிர்வாகங்களும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளானர்கள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன. இங்கு வாழும் தமிழர்கள் இலங்கையில் நிகழும் இனப்படுகொலைகளில் இருந்து தப்பியோடி வந்துள்ளனர். 2009 இல் இனப்படுகொலை நடந்த காலம் முதலாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு நீதியும் பொறுப்புக் கூறலும் அவசியம் என நான் வலியுறுத்தி வருகின்றேன். இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் இன்றி அமைதி சமாதானம் என்பன சாத்தியமில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆதாரங்களைச் சேகரித்து வருவதுடன் இலங்கையின் யுத்தக்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைகள் உட்பட்ட சாத்தியமான மூலோபாயங்களை முன்வைக்கவுள்ளது. எனினும் உலகத் தமிழர் பேரவை கனடிய தமிழ்க் காங்கிரசின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஒருவருடன் இணைந்து தமிழ் மக்களின் அடைய வேண்டிய இலக்குகளை குறைமதிப்பிற்கு உள்ளாக்குவதுடன் இலங்கையின் யுத்தக்குற்றவாளிகளைக் காப்பாற்றும் யோசனை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதுடன் தமிழ் மக்களுக்கு எதிரான மிகமோசமான குற்றங்களுக்காகக் கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள யுத்தக் குறற்வாளியும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சாவுடன் இணைந்து படமெடுத்துக் கொண்டமை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது”, எனத் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் எதை உலகுக்குச் சொல்ல நினைத்தார்களோ அதனை கனடாவின் பிரம்டன் மேயர் மதிப்பிற்குரிய பட்ரிக் பிறவுண் அவர்கள் உண்மையும் நேர்மையும் மிக்க அவரது வார்த்தைகளால் உலகுக்குத் தெளிவாக்கியுள்ளார். அத்துடன் கனடாவில் கொன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மதிப்புக்குரிய பியர் பொலியர் தாங்கள் ஆட்சி அமைத்தால் அனைத்துலக நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகக் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளைப் பயன்படுத்துவோம். இதன் வழியாக சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையாளர்களை இனம் கண்டு அவர்களை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு உட்படுத்தலாம் என மிகத் தெளிவாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் கொன்சர்வேடிவ் முன்னாள் பிரதமர் மதிப்புக்குரிய பிரைன் முல்ரோனி அவர்கள் 1980களில் ஈழத்தமிழர்கள் பெருமளவில் கனடாவுக்கு அரசியல் புகலிடம் கோரி வந்த பொழுது அவர்களை வரவேற்றமையையும், அவ்வாறே கொன்சர்வேடிவ் முன்னாள் பிரதமர் மதிப்புக்குரிய கார்ப்பர் அவர்களே சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலகத் தடைகளை விதித்து அதன் தொடர்ச்சியாக கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாது மகிந்த ராஜபக்சா அரசாங்கத்தை உலகின் முன் அவமானப்படுத்தியது என்றும் கூறி தற்போதும் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறிலங்காவின் உறுப்பினர்களுக்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பது தன் திட்டமெனவும் அத்துடன் இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் கண்டனம் தெரிவித்துச் சிறிலங்காவை மேலும் தனிமைப்படுத்துவோம் எனவும் சொல்லில் உறுதிபடக் கூறினார்.
இவ்வாறாக 2023இல் ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான பல சாதகநிலைகள் வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ள நேரத்தில் 2024 ஐ இவற்றை ஈழத்தமிழர்களுடைய இறைமைக்கான உலக ஆதரவாக மாற்றுவதற்கான பொறிமுறைகளை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைப்பாகி கூட்டொருங்கு தலைமைத்துவத்துவத்தின் வழி முன்னெடுக்க வேண்டும் என்பதே இலக்கின் வேண்டுகோள். அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் 2024 ஐத் தேர்தல் ஆண்டாக அமைத்து ஈழத்தமிழர் இறைமையுடன் கூடிய தேசியப் பிரச்சினையை அதற்குரிய முறையிலில்லாது சிங்கள நாட்டில் பௌத்த ஆகமச் சட்டத்தின் கீழ் வாழும் ஒரு சமுதாயத்தின் பிரச்சினையாக 2026 இல் பார்க்கப்படும் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை உலகுக்குத் தெளிவுபடுத்த தேர்தலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. உலகளாவிய ஈழத்தமிழர் தேசமாக எழுந்தே இவற்றுக்கான உரிய செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.

Exit mobile version