Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு! | ஆசிரியர் தலையங்கம் |...

மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 264

மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 264

உலகில் உள்ள அனைத்து மனிதர்களதும் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர நல்வாழ்வுக்கும்  பாதுகாப்புக்கும் அமைதிக்கும் வளர்ச்சிகளுக்குமான உலகின் முக்கிய நெறிப்படுத்தல் மரபு சாசனமாக 10.12.1948 இல் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு  இவ்வாண்டு டிசம்பர் 10ம்நாள் 75வது ஆண்டு. இதனை ‘மனித உரிமைகள் 75’ என்ற சுருக்கப் பெயருடன் 10.12.2023 இல் உலகப் பெருவிழாவாக ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்துள்ளது. இவ்வாண்டு  “அனைவருக்கும் விடுதலை, சமத்துவம், நீதி” என்ற மையக்கருவும் ஐக்கிய நாடுகள் சபையால்  மொழியப்பட்டுள்ளது. ஆயினும் மனித உரிமைகள் பிரகடனம் சட்டமாக அமைக்கப்படாது நெறிப்படுத்தல் ஆவணமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளதால் உலகநாடுகளில் மனித உரிமைகள் பிரகடனங்களை அனைத்துலகச் சட்டத்தின் வழி கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தவியலாத நிலையும் ஐக்கியநாடுகள் சபைக்கு உள்ளது. இந்நேரத்தில் ‘இலக்கு’, ஐக்கிய நாடுகள் சபை,  மனித உரிமைகளை மக்களுக்கு உறுதிப்படுத்தப்படும் பொழுது தான், அனைவருக்குமான விடுதலை சமத்துவம் நீதி நடைமுறைச் சாத்தியமாகுமென்ற நடைமுறை எதார்த்தத்தைத் தானும் வலியுறுத்திக் கூற விரும்புகிறது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த 75 ஆண்டுகளாக உண்மையுடனும் நேர்மையுடனும் செய்யாத காரணத்தாலேயே இன்று ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் வெளியாகிய 75வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கும் 75வது ஆண்டு என இணைத் தலையங்கம் இடவேண்டியுள்ளது.
குறிப்பாக ஐக்கியநாடுகள் சபை நன்கு அறிந்த நிலையிலேயே 2009 இல் 176000 ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா முள்ளிவாய்க்காலில் இனவழிப்புச் செய்தது. ஆயினும் கடந்த 14 ஆண்டுகளாக முப்பது ஆண்டுகால அனுபவம் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தாலும் அனைத்துலகச் சட்டங்களால் சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த இயலாதிருக்கிறது.  இதற்கு எவை காரணங்க ளாக உள்ளன? முதல் நிலையில் வெளியகக் காரணமாக  ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையைத் தனது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகத் தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்தி என்ற இந்தியாவின் தேவையற்ற அச்சம் உள்ளது. இதன் காரணமாக சிறிலங்காவின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இந்தியா முன்னுரிமை கொடுத்து ஈழத்தமிழர்களைச் சிறிலங்காவின் இறைமைக்குள் சிறைப்படுத்துவதையே தனது தலைமை அரசியல் நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. இதுவே ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக நாடுகளுக்கும் அனைத்துலக காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ள ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவின் சந்தை மற்றும் இராணுவ நிலையை மீற இயலாதவாறு பின்னடைவை ஏற்படுத்துகிறது. அடுத்து  ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் ஈழத்தமிழர் அரசியல் செயற்பாட்டாளர்களும் தாங்கள் இறைமையுள்ள தாயகமாக இலங்கையைக் கொண்டிருக்கும்  மக்கள் என்ற அடிப்படையில் தங்கள் சமூக அரசியல் பொருளாதார ஆன்மீக பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கோரிக்கைகளாக முன்வைப்பதில் காட்டி வரும் பின்னடைவு. இது சிறிலங்காவின் இறைமையை மீறிச் செயற்பட இயலாத நிலையை ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலகநாடுகளுக்கும் ஏற்படுத்துகிறது.
தாயகத்தில் மக்களின் கூட்டொருங்குத் தலைமை ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பைத் தங்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் சிறப்புற அளிக்க உதவும் என்றும் உண்மையானதும் நேர்மையானதுமான செயற்பாட்டுத் தலைமையின் விளைவாகச் சிறப்பான தலைமை மக்களின் எண்ணங்களைத் தேவைகளை வெளிப்படுத்தும் தலைமையாகத் தோன்றும் என்றும் கொண்ட எதிர்பார்ப்பே தனியான தலைமைத்துவம் ஒன்றின் தேவையின்மையை ஈழத்தமிழருடைய கட்சி அரசியல் அனுபவங்களின் பின்னணியில் உருவாக்கியது.  ஆனால் கூட்டொருங்கு மக்கள் தலைமைத்துவம் தோன்ற இயலாதவாறு ஈழத்தமிழர்களின் பாராளுமன்றக் கட்சியாளர்கள் 2009 முதல் இன்று வரை தடையாக உள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், நாட்டு வைத்தியர்கள், பௌத்ததேரர்கள் என்னும் ஐங்குழுவினரின் கூட்டொருங்குச் செயற்பாட்டின் மூலமான ஐங்குழுத்தலைமையின் மூலமே இலங்கையின் முன்னாள் பிரதமர் சொலமன் டயஸ் பண்டாரநயக்கா சிங்கள பௌத்த தலைமையினை தமிழர் தாயகத்தையே ஆக்கிரமிக்கும் பலம்படைத்த தலைமையாகச் சிங்கள அரசியலை மாற்றினார் என்பது வரலாறு. ஆனால் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளும் புலம்பெயர் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் மாணவர், ஆசிரியர், தொழிலாளர்கள் வர்த்தகர்கள் சமூகத் தலைவர்கள் ஒருங்கிணைப்புக்களை இதுவரை தோற்றுவிக்காததும் அதன் வழியான கூட்டொருங்குத் தலைமையினை வெளிப்படுத்தாததும் ஈழத்தமிழர்களின் ஒருங்கிணைப்புத் தலைமைத்துவத்தின் வலிமை வீறு கொண்டெழாமைக்கான மூலகாரணமாகவுள்ளது.
அதே வேளை ஈழத்தமிழர்களின் அனைத்துலக ஏற்புக்கான பின்னடைவுக்கு குழுநிலையில் தாயகத்திலும் புலத்திலும் தம்மை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளாகவும் அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் மக்களாணை எதுவுமின்றி தம் தன்னலங்களுக்காக வெளிப்படுத்தி வருபவர்களின் செயற்பாடுகள் விளங்குகின்றன என்பதே உண்மை. இவ்வாரத்தில் கூட ஒரு குழுத் தமிழர்கள் இலண்டனில் இருந்து கொழும்பு சென்று சிறிலங்காவின் ஜனாதிபதியையும் பௌத்த தேரர்களையும் எந்த நிபந்தனைகளையோ செயற்திட்டங்களையோ முன்வைக்காது ஈழத்தமிழர்களின் புலத்துப் பொருளாதார முதலீடுகளுக்கான முகவர்களாகத் தங்களை இணைத்துக் கொள்ளும் நோக்கிலேயே சந்தித்து தங்கள் தன்னலங்களுக்கு உலக மட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதியிலும் பௌத்த மகாசபையிலும் நம்பிக்கையும் அவர்களின் வழிப்படுத்தலில் ஆர்வமும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு உள்ளதெனக் காட்டியுள்ளனர்.  இது அனைத்துலக மட்டத்தில் இன்றைய சிறிலங்கா அரசை இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்குமான பலமான அரசாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் வழி சிறிலங்காவில் இனப்பிரச்சினையோ மொழிப்பிரச்சனையோ இலங்கைத் தீவில் இல்லை, எனவே அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற சிறிலங்காவின் பரப்புரையை உண்மையாக்கி அனைத்துலக நாடுகள் சிறிலங்கா இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் சிறிலங்காவுக்கு நிதி உதவி மூலம்
 அதனைப் பலமான அரசாக திடப்படுத்த உதவும் செயலாகவுள்ளது.   கூடவே இவ்வார இறுதியில் மற்றொரு அனைத்துலக நகர்வாக இலங்கையில் சீனாவின் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் வளர்ச்சிக்கான அனைத்துலக பரப்புரையாளராக பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் செயற்பட்டுத் தற்போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சராகப் பிரபுக்கள் சபை நியமனத்தின் மூலம் பதவியேற்றுள்ள டேவிட் கமரூன் அவர்களிடம் எட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் பாலியல் சித்திரவதைகள் உள்ளடங்கலாக மனிதச் சித்திரவதைக் கூடமாக 2009ம் ஆண்டு சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்புக்குப் பின் விளங்கிய யோசப் முகாமின் பொறுப்பாளராக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா  மற்றும் ஜகத் சூரியா போன்ற இலங்கையில் யுத்தக்குற்றங்கள் செய்தவர்களுக்கு பயணத் தடைகள் உட்பட்ட மக்னிட்ஸ்கி தடைகளை விதிக்கும் படி கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதற் கிடையே தாய்லாந்துக்கு இன்னொரு தமிழர் குழு சென்று இந்துத்துவாக் கொள்கைகளைப் பலப்படுத்தி இந்திய ஆதரவைப் பெற முயன்றுள்ளது. ஆயினும் யாரும் இனஅழிப்பு குறித்து எதுவும் பேசவில்லை. இவர்களுக்கு எல்லாம் ஈழத்தமிழர் இறைமையுடன் அவர்களின் இனஅழிப்பின் பின்னணியில் மண் மீட்கப்பட வேண்டுமென்பது பேசப்பட்டாலே அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தாலும் அனைத்துலகச் சட்டங்களாலும் ஈழத்தமிழரைப் பாதுகாக்க இயலும் என்பதை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.

Exit mobile version