Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் மாவீரர் நாளில் இறைமை கொண்டு தேசமாக எழுந்த ஈழத்தமிழ் மக்கள் | ஆசிரியர் தலையங்கம்...

மாவீரர் நாளில் இறைமை கொண்டு தேசமாக எழுந்த ஈழத்தமிழ் மக்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 263

மாவீரர் நாளில் இறைமை கொண்டு
தேசமாக எழுந்த ஈழத்தமிழ் மக்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 263

ஈழத்தமிழர்களின் தாயகத்தின் தேசிய நாளும் மாவீரர் நாளுமாகிய கார்த்திகை 27 இவ்வாண்டில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கிலும் 2009க்குப் பின் மீண்டும் தேசியத் தன்மையுடன் தேசமாக எழுந்த வரலாற்று நாளாகியுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலகத்தில் 70000 ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் நீதிமன்றத் தடைகளையும் தாண்டி மக்கள் வெள்ளத்தால் துயிலகத்தையே மூழ்கடித்தமை ஈழத்தமிழர்கள் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற இறைமையின் உறுதியின் உறைவிடமாகவே இன்றும் உள்ளனர் என்பதை உலகுக்கு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ஈழத்தமிழ் மக்கள், நீதிமன்றம் எவ்வாறு இறந்தவர்களை நினைவு கூறுவதைத் தடுக்க இயலாதெனச் சிறிலங்கா அரசின் சட்டத்தின் மூலம் மாவீரர் நினைவேந்தலை தடுக்க முயற்சித்ததை நிராகரித்துத் தீர்ப்பளித்து எவ்வாறு மாவீரர் நாள் அமைக்கப்பட வேண்டுமெனத் தெளிவாக விதந்துரைத்ததோ, அவ்வாறு சட்டபூர்வமாகக் கட்டிய மஞ்சள் சிவப்பு கொடிகளைச் சிறிலங்காப் பொலிசார் சீருடையில் வந்து அறுத் தெறிந்து மக்கள் தங்களின் வீரச்சாவடைந்தவர் நினைவாக நாட்டிய தென்னம்பிள்ளைகளையும் சப்பாத்துக்காலால் மிதித்து அவமானப்படுத்தி மனிதநாகரிகமற்ற முறையில் உலகே வெட்கப்படத்தக்க விதத்தில் நடந்த வரலாறுகளும் பதிவாகியுள்ளன.
ஆயினும் ஈழத்தமிழ் மக்கள் எந்த அடக்குமுறைக்கும் ஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது அதே துயிலரங்குகளில் வீரத்துணிவுடன் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை திட்டமிட்டபடி முழுமையாகச் செலுத்தி சிறிலங்காவால் ஆயுதப்படைபலம் கொண்டு இனியும் தங்களின் அடிப்படை மனித உரிமைகளை வன்முறைப்படுத்த இயலாது என்பதை மிகத் தெளிவாக உலகுக்கு நிரூபித்துள்ளனர். இவ்வாறாக ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் முழுவதையும் மாவீரர் தீப ஒளி வெள்ளத்தில் ஒளிரவைத்தமை விடுதலை வாழ்வு வெகுதூரத்தில் இல்லை. தங்களின் தேசியத் தலைமையே மீண்டு எழுந்து மக்களின் கூட்டுத் தலைமைத்துவத்தை நெறிப்படுத்தி வழிப்படுத்தி தங்களை விடுவிக்கும் என்ற நம்பிக்கை ஒளியை ஒவ்வொரு ஈழத்தமிழர் நெஞ்சிலும் ஆழப்பதித்துள்ளது.
இந்த ஈழத்தமிழர் விடுதலை வாழ்வுக்கான புதிய நம்பிக்கைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் உலகத் தமிழர்களாக உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தாயகமக்களுடன் ஒருங்கிணைந்து சூரியன் நியூசிலாந்தில் உதித்தது முதல் உலகில் இருந்து அது மறையும் வரை உலகக் கோளம் முழுவதும் தேசங்கடந்துறை மக்களாக வாழும் ஈழத்தமிழின மக்கள் தங்கள் மக்கள் சக்தியை வெளிப்படுத்தி மாவீரர் நாளை பெரும் உற்சாகத்துடன் அலைஅலையாக எல்லாநாடுகளிலும் முன்னெடுத்து ஈழத்தமிழர்கள் தேசங்கடந்த பெரும் சக்திபடைத்த மக்களினம் அதனுடைய தேச நிர்மாணத்தைச் சிறிலங்காவால் நீண்டகாலத்துக்குத் தடுக்க இயலாது என்பதை உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த நீண்டகாலத்தை குறுகிய காலமாக மாற்றுவதற்கு தடையாக தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழரின், உலக வல்லாண்மைகளாலும் பிராந்திய மேலாண்மைகளாலும் தங்கள் சந்தை இராணுவ நலன்களுக்காக ஈழத்தமிழரிடை தோற்றுவிக்கப்படும் பல்குழுக்கள் உள்ளன. இவ்விடத்தில் தான் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங்கொல்குறும்பு மில்லது நாடு என்ற வள்ளுவர் குறள் முக்கியமாகிறது. பல்குழத் தன்மை தோன்றினால், பாழ்செய்யும் உட்பகை உடன் பிறப்பாகும், உட்பகை தோன்றினால் அரசையே கொலைச் செயல்களால் தடுமாற வைத்து அழித்தொழிக்கும் என்பது வள்ளுவர் தந்துள்ள எச்சரிப்பு.
இந்த உத்தியைத்தான் 2009 முதல் பல வழிகளில் பல வடிவங்களில் சிறிலங்காவும் அதற்கு ஆதரவான அதன் நேசநாடுகளும் முன்னெடுத்து, இன்று வரை சிறிலங்காவை அதன் ஈழத்தமிழின இனஅழிப்புக்கான அனைத்துலக தண்டனை நீதியில் இருந்து தப்பவும் பாதிப்புற்ற ஈழத்தமிழ் மக்களுக்கு அனைத்துலக பரிகாரநீதி கிடைக்காது போகவும், இனஅழிப்பாளர்களே ஈழத்தமிழினத்தின் மேலான ஆட்சியாளர்களாகத் தொடரவும் வழிசெய்து வருகின்றனர்.
ஒரு மக்கள் இனத்தின் இறைமையும் ஒருமைப்பாடும் இணைகின்ற பொழுதே அந்த மக்களினம் தன் தாயக தேசியத் தன்னாட்சி தன்மைகள் கொண்ட தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கி
பாதுகாப்பான அமைதி வாழ்விலும் வளர்ச்சிகளிலும் பலம் பெற முடியும் என்பதே வரலாறு. ஈழத்தமிழர்களின் இறைமை மிகத் தெளிவான ஒன்று. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் இலங்கை முழுவதிலும் இறைமையுள்ள மக்களினம். அதனை யாராலும் எந்தக் காலத்திலும் மாற்ற இயலாது. இதனால் ஈழத்தமிழர்களின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதன் மூலமே ஈழத்தமிழர்களால் தங்களுக்கான இறைமையுடன் கூடிய ஆட்சியைத் தடுக்க முடியும். இதுவே பல்குழுவாக்க உத்தியை ஈழத்தமிழினப் பகைமைகள்
தங்கள் வெற்றிக்கான உத்தியாக முன்னெடுப்பதன் காரணம்.
28.11.23 இல் இலங்கையின் முன்னணித் தமிழ் ஊடகங்களில் ஒன்றான தினக்குரல் அதன் முதற்பக்கத்தில், “அரசியல் வழியில் இலட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும் – காணொளியில் துவாரகா பிரபாகரன் உரை?” என்னும் நிகழ்வு குறித்த சந்தேகத்திற்கான கேள்விக் குறியுடன் வெளியிட்ட செய்தியொன்று, ஈழத்தமிழர் விடுதலை உலகிலும் அரசியல் உலகிலும் இருக்கின்ற பல்குழுவாக்கத்தன்மை மேலும் விரிவுபடப் போகின்றதா? அல்லது புதிய அரசியல் பரிணாமமாக மாறப்போகிறதா? என்ற நடைமுறை அரசியல் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. சில மாதங்களாக சமூக ஊடகத்துறையில் இருந்து வந்த அரசியல் முனைவாக்கப் பிரச்சினை இப்பொழுது இலங்கை ஊடகத்துறையிலும் உள்வாங்கப்பட்ட நிலையில் இதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதிலேயே பல்குழுத்தன்மையின் விரிவாக்கமாகவா அல்லது புதிய அரசியல் பரிணாமம் ஒன்றின் உள்வாங்கலாகவா இது மாறும் என்பது தங்கியுள்ளது.
உணர்ச்சி வசப்படாத உரையாடல்கள் மூலமே ஈழத்தமிழர் ஒருங்கிணைப்பு முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் தெளிவாக்கப்பட்ட தேசியத்தன்மையைப் பலப்படுத்தப்பட வேண்டிய நேரமிது. ஒருங்கிணைப்பு என்பது சமுதாயத்தின் மாறுபட்ட வேறுபட்ட அனைத்தையும் அவற்றின் தேவைகளின் அடிப்படையிலும் தேடல்களின் அடிப்படையிலும் இணைத்து கூட்டொருங்கு நிலையில் அவற்றின் பலன் மக்களுக்கும் மண்ணுக்குமுரியதாக மாற்றும் பொதுவெளியை உருவாக்குவது. இதனை விடுத்து ஒருங்கிணைப்பை ஓரிணைப்பாக முன்னெடுக்கும் நேரமெல்லாம் அது பல்குழுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதையே இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. தேசியத் தலைவர் உடன் தேசியத்தன்மையுடன் விடுதலையை நோக்கிப் பயணித்த ஒவ்வொருவரது உழைப்பும் அர்ப்பணிப்புக்களும் நன்றியோடு கவனத்தில் எடுக்கப்பட்டு மாறுபட்ட விழுமியங்களை மதித்தல் என்பதன் வழி ஒழுங்குபடுத்தல் செய்யப்பட்டு மீண்டெழும் தேசியத்துடன் இணைக்கப்படுதல் முக்கியம் என்பது இன்றைய காலத்தின் தேவை என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.

Exit mobile version