Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் தாயக இறைமையைப் பாதுகாக்கச் சனநாயக வழிகளில் இலக்குகளை உருவாக்கிச் செயற்பட அழைக்கும் மாவீரர்கள்! | ஆசிரியர் தலையங்கம்...

தாயக இறைமையைப் பாதுகாக்கச் சனநாயக வழிகளில் இலக்குகளை உருவாக்கிச் செயற்பட அழைக்கும் மாவீரர்கள்! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 261

தாயக இறைமையைப் பாதுகாக்கச் சனநாயக வழிகளில் இலக்குகளை உருவாக்கிச் செயற்பட அழைக்கும் மாவீரர்கள்! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 261

ஈழத்தமிழர்களின் தாயகத்தின் தேசிய நாள் அதன் மாவீரர் நாளான கார்த்திகை 27. தேசிய நாள் என்பது மக்கள் தேசமாக எழுந்து தங்கள் தாயக இருப்பையும் மக்களின் இறைமையையும் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் எந்நாளும் காப்போம் என உறுதிமொழியெடுக்கும் நாளாகவே உலகெங்கும் முன்னெடுக்கப்படுவது வழக்கு. அதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கல்ல. எனவே இந்நாளில் தங்கள் தாயகத்திற்காகவும் தங்கள் தேசமக்களுக்காகவும் இன்னுயிர் ஈந்த மாவீரர்களைத் தேசிய வீரர்களாக உலகின் முன்நிறுத்தி நன்றியோடு வீரவணக்கம் செய்யும்  தேசக்கடமையாக உலகு முன்னெடுக்கும் உலகப்பண்பாட்டுக்கு அமைய 1978 முதல் 2009 வரை தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைமுறையரசாக விளங்கிய ஈழத்தமிழர்களின் ஆட்சிக்காலத்தில் 1989 முதல் இன்று வரை ஈழத்தமிழர்களின் மாவீரர்களை  நெஞ்சிருத்தி கார்த்திகை 27ம் நாள் உலகத் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  மாலை ஆறுமணிக்கு  மாவீரப் பொதுச்சுடர்த் தீபமேற்றப்பட்டதும்  அவர்களின் துயிலகங்களிலும் தமிழர்தாயகம் எங்கும் மக்கள் தீபமேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்வது ஈழத்தமிழர் தேசக்கடமையாகி அந்நாள் ஈழத்தமிழரின் தாயகத்தின் தேசிய நாளாக உலகின்முன் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அதே வேளை 2009ம் ஆண்டு மே 17 இல் சிறிலங்கா தேசமாகவே ஈழத்தமிழர்களில் 176000 பேரை இனஅழிப்பு செய்த வரலாற்றின் பின்னர் மாவீரர்நாள் தாயகத்திலும் உலகமெங்கும் தாயக இறைமையைப் பாதுகாக்க சனநாயகவழிகளில் இலக்குகளை உருவாக்கிச் செயற்பட, மாவீர்கள் மக்களை அழைக்கும் நாளாக இந்நாள் உணரப்படுகிறது. இதனால் மரணத்தை வென்ற மனிதகுலமான மாவீரர்கள் வாழுகின்ற மக்களுக்கு ஒளியுடம்பு தாங்கி அறிவுத் தெளிவும் ஆக்க சத்தியும் அளிக்கும் வாழ்கின்ற தன்மை கொண்டவர்களாக,  ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் இல்லத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் மிகையாகாது.   எங்களுக்காக எங்களின் மண்ணையும் எங்களையும் பாதுகாக்கும் பெருநோக்கில் தங்கள் வாழ்வையும் வளங்களையும் இன்னுயிர்களையும் ஈகம் செய்து எம் மக்களுக்கு அன்றாடம் வாழ்வதற்கான சத்தி அளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த எம்மோடு வாழுகின்ற மாவீரர்களுக்கான வீரவணக்கம் என்பது அவர்களின் நோக்கான ஈழத்தமிழர் தாயகத்தின் இறைமையையும் மக்கள் ஒருமைப்பாட்டையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்க உழைப்பது ஒன்றே என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழரும் உணர்ந்து செயற்பட வேண்டும். ஈழத்தமிழரின் ஒருமைப்பாடு என்பது ஈழத்தமிழரில்தான் உண்டு என்பது இவ்விடத்தில் முக்கியமான விடயம். இதனை ஊக்குவிக்க என்ன இலக்குகளை உருவாக்கி வருகின்றோம்?
இன்று 34வது ஆண்டு மாவீரர்நாளும் தேசிய நாளும் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நேரத்தில் ஈழத்தமிழர் தாயகத்தில் படைபல ஆக்கிரமிப்புச் செய்து இனஅழிப்பாலும் மண் ஆக்கிரமிப்பாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை மறுத்து அவர்களை தாயகத்தில் இருந்து வெளியேற வைக்கும் அளவுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை அனைத்துலக சட்டங்களுக்கு எதிரானவகையில் சிறிலங்கா விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்கான இலக்குகள் எவற்றை எவ்வாறு உருவாக்கி வருகின்றோம்? மறுபுறத்தில் இளையோர் வாழ்வை வரட்சியும் வெறுமையும் கொண்டதாக மாற்ற அவர்களின் உடல் உள இருப்பை நாள்தோறும் சீர்குலைக்கக் கூடிய போதைப்பொருள்கள் வழக்கத்தையும் கட்டற்ற பாலியல் பழக்கத்தையும் அவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுக்குத் தெரியாதவாறு இலகுவில் பழகுவதற்குரிய அத்தனையையும் அனைத்துலகச் சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டங்களை மீறி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை மாற்றுவதற்கான இலக்குகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றன.
பெண்களுக்குரிய நாளாந்த வாழ்வுக்கான அத்தனை பாதுகாப்புச் சட்டங்களும் ஒழுங்குகளும் மீறப்பட்ட இடமாக ஈழத்தமிழர் தாயகம் மாற்றப்பட்டு வருவது மட்டுமல்லாமல் கூலி அடிமைகளாகப் பெண்களை பிறரில் தங்கிவாழ வைக்கும் அளவுக்கு அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் கல்வி பயிற்சிகள் இல்லாத நிலை ஈழத்தமிழர் தாயகப் பகுதிகளில் நாளாந்த வாழ்வாக்கப்ட்டு வருகிறது. இதனை மாற்றுவதற்கான இலக்குகளை எவ்வாறு உருவாக்கி வருகின்றோம்? அதே வேளை அனைத்துலக வல்லாண்மைகளுக்கும் பிராந்திய மேலாண்மைக்கும் ஈழத்தமிழர் தாயகத்தின் நிலமும் கடலும் சிறிலங்காவால் விற்கப்பட்டு ஈழத்தமிழர்களின்  மண்ணும் கடலும் அவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவதால் தேசம் என்ற நிலையில் ஈழத்தமிழர்களின் இருப்பு சீர்குலைக்கப்பட்டு அவர்களின் தேசஇனம் என்ற நிலை கரும்பு தேய்ந்து கட்டெறும்பான கதையாகக் கரும்பாக இருந்த ஈழத்தமிழரின் வாழ்வு இன்று முற்றிலும் சுரண்டப்பட்டு சுரண்டுகின்ற கட்டெறும்பான சிறிலங்காப் படைகள் உயிர்வாழும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை நிறுத்துவதற்கான இலக்குகள் எவற்றை செயற்படுத்தி வருகின்றோம்? ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தப்படும் இருப்புக்குலைப்பைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பாளராகத் தன்னைத் தானே 1987 இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலம் நியமித்துக் கொண்ட  பிராந்திய மேலாண்மையான இந்தியா இதனை ஏறெடுத்தும் பார்க்காது சிறிலங்கா இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கும் அரசாக 9வது ஆண்டாக நண்பர்களின் சத்தி எனத் தமிழில் பொருள் பெறும்  “மித்திரசக்தி 2023” என்னும் இந்திய சிறிலங்கா கூட்டு இராணுவப்பயிற்சியால் சிறிலங்காப்படைகளுக்கு வலுவூட்டலை     பூனேயில் அளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்காகச் சீனாவுடன் பேசவே கூடாது என்னும் அளவுக்கு இந்தியாவைப் போற்றும் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் இத்தகைய செயல்களை மாற்ற என்ன இலக்குகளைச் செயற்படுத்தி வருகின்றனர்? ஆசிய வல்லாண்மையான சீனா தன்னை தெற்காசியாவின் மேலாண்மையாக முன்னிறுத்தி புதிய அரசியல் ஒழுங்குமுறையை முன்னெடுக்கும் தன் மண்டலங்கள் பாதைகள் திட்டத்தில் தனது அடுத்த ஆராய்வுக்கப்பலை சனவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கைக் கடலில் நிலைப்படுத்துவதற்கான அறிவிப்பை இவ்வாரத்தில் விடுத்துள்ளது. அதனுடன் கூட வடக்கிலும் கிழக்கிலும் சீன முதலீடுகள் உண்டென்பதை உறுதிப்படுத்தி தமிழர்களை தங்களுடன் ஒத்துழைக்குமாறு சீனத்தூதுவரே தனக்குப் பிடித்த சுற்றுலாத் தளமாகப் பருத்தித்துறைச் சக்கோட்டையைத் தெரிவு செய்து அங்குவந்து நின்று அழைப்பும் விடுத்துள்ளார். சீனாவுடன் போகர் காலம் முதலே நீண்ட வரலாற்றுத் தொடர்புடைய தமிழர்கள், சீனா சார்பு சண்முகதாசன் அவர்களால் தங்களின் சமுகவிடுதலைக்கான தளத்தையே அமைத்த ஈழத்தமிழர்கள் இன்று சீனாவுடன் எத்தகைய முறையில் ஈழத்தமிழரின் சமுக பொருளாதார வளத்தைப் பெருக்க இலக்குகளை உருவாக்கி வருகின்றனர்? அதே வேளை சன்பிரான்சிஸ்கோவில் சீன அமெரிக்கத் தலைவர்களின் ஆசிய பசுபிக் மாநாட்டையொட்டிய பேச்சுவார்த்தைக்குப் பின் சீனத் தலைவரை சர்வாதிகாரியென வெளியே வர்ணித்த அமெரிக்கத் தலைவரின் கூற்றுக்கு விளக்கமளித்துள்ள அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் அன்ரனி பிளிங்டன் “வேறு எந்த நாட்டையும் விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உறவு சீனாவெனவும்  இது உண்மையான போட்டியும் கூட. இது மோதலாக மாறாதிருக்க நாம் முயற்சிக்க வேண்டும்” எனவும் கூறி சீன அமெரிக் இன்றைய நடைமுறையின் உண்மை நிலையை உலகுக்கு தெளிவாக்கியுள்ளார்.
ஈழத்தமிழரின் தாயகப் பகுதியை இந்த சிக்கலான உறவு தரக்கூடிய விளைவுகளை அனுபவிக்கும் தளமாக மாற்றச் சிறிலங்கா சனாதிபதி செய்யும் முயற்சியானது எத்தகைய விளைவுகளைக் கொடுக்கும் என எண்ணிப்பார்க்கவே அச்சமாகவுள்ளது. முதன்முதலில் ஈழத்தமிழரின் கல்விக்குப் பாரிய உதவியாக மானிப்பாய் கிறின் நினைவு வைத்தியசாலையையே அமைத்து தமிழ்மொழி மூலம் மருத்துவக் கல்வியை உருவாக்கி 25 மருத்துவர்களுக்குப் பட்டம் பெற உதவிய அமெரிக்க மக்களுக்கு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியையே அமைத்து அறிவியல் வளர உதவிய அமெரிக்க மக்களுக்கு, இன்றைய சூழலில்  ஈழத்தமிழர் இன்றைய பிரச்சினைகள் எந்த அளவுக்கு விரைவாக விளக்கமாகக் கிடைக்கின்றன? இதற்கான இலக்குகள் என்ன? எனவே இலக்குகளை உருவாக்கிச் செயற்படுவதே மாவீரர்களுக்கான சிறப்பான வீரவணக்கமாகும் என்பதை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.

Exit mobile version