Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் சீனத் துணையால் முன்னெடுக்கப்படும் சிங்கள இறைமை ஈழத்தமிழர்களின் இறைமை இழப்பு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளாலும் அமைப்புக்களாலும் ஏற்படுகிறது...

சீனத் துணையால் முன்னெடுக்கப்படும் சிங்கள இறைமை ஈழத்தமிழர்களின் இறைமை இழப்பு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளாலும் அமைப்புக்களாலும் ஏற்படுகிறது | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 259

சீனத் துணையால் முன்னெடுக்கப்படும் சிங்கள இறைமை ஈழத்தமிழர்களின் இறைமை இழப்பு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளாலும் அமைப்புக்களாலும் ஏற்படுகிறது | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 258

சீனா கடந்த மாதத்தில் 17ம் 18ம் நாட்களில் தனது “மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின்” பத்தாவது ஆண்டு நிறைவில் 150க்கு மேற்பட்ட நாடுகளுடனும் 30க்கு மேற்பட்ட அனைத்துலக அமைப்புக்களுடனும் இருதரப்பு உடன்படிக்கைகளின் வழி உலகெங்கும் அகலக்கால் பதித்துள்ள சாதனையின் அடிப்படையில் மேலும் இதற்கான மூன்றாவது அனைத்துலக ஒத்துழைப்பை வளர்க்கும் மாநாட்டை 20 நாடுகளின் தலைவர்களினதும் 140 நாடுகளின் உறுப்பினர்களதும் வருகையுடன் முப்பதுக்கு மேற்பட்ட அனைத்துலக அமைப்புக்களின் பங்கேற்புடனும் வெற்றிகரமாக நிகழ்த்தியது மட்டுமல்லாமல் இந்த அனைத்துலகத் திட்டம் தொடர்பான தனது நோக்கிலும் போக்கிலும் காலத்துக்கு ஏற்ற புதிய கொள்கை வகுப்பையும் தெளிவாக்கியுள்ளது. இது குறித்து ஈழத்தமிழர்களுக்கு அறியப்படுத்துவது இலக்கின் கடமையாக உள்ளது.
இம்மாநாட்டின் மையப்பொருளாக “உயர்தர மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சிக்கான அனைத்துலக ஓத்துழைப்பு :  ஒருமித்த பொதுவான வளர்ச்சி மற்றும் வழமைகள்” என்பதனை கட்டமைத்ததின் மூலம் சீனா இத்திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொருநாட்டையும் மக்கள் இனங்களையும் அவர்களும் பயன்பட்டுத் தானும் பயன்பெறும் பங்காளர்களாக இப்பொழுது மாற்றியுள்ளதை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது.
1945ம் ஆண்டுக்குப்பின் தற்போது மீளுருப் பெறும் உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையில் ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்டு மற்றவரை அடக்குவதற்குப் பதிலாக அனைவருடனும் இணைந்து ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்களை வளர்ப்பதன் மூலம் இருதரப்பும் எழுச்சி பெறுவதையே சீனா ஒருமித்த பொதுவான வளர்ச்சி என்பதன் மூலம் நடைமுறைப்படுத்த முயல்கிறது. இதனை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் இன் மாநாட்டு உரையும் உறுதிப் படுத்தியுள்ளது. அவர் தமது உரையில் பிறருக்கு உதவி செய்பவர்க்கு அவருக்கும் நலன் கிட்டும் என்பதன் அடிப்படையிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அனைவருக்கும் பயனளிக்கும் முக்கிய முயற்சிகளைத் தொடங்குவதன் மூலம் இருதரப்பு வெற்றி இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியன பலம்பெற்று இருதரப்பும் தமது இலக்கை அடைவதற்கான வழியாக அமையும் எனத் தெரிவித்துள்ளமை சீனா தனது மேலாண்மையையும் உறுதிப்படுத்தி அதனை மற்றவர் செயற்கரிய செய்வதற்கான நட்பாக வெளிப்படுத்தும் என்கின்ற உறுதிமொழியையும் அளித்துள் ளார்.
அத்துடன் சீனாவின் தொன்மைச் சிந்தனையான பௌத்தம் எட்டு செயல் களை வாழ்வில் அமைதி பெறச் செய்ய வேண்டும் என்று வரையறுத்தது போல சீனாவின் பலம் வாய்ந்த தத்துவமான கொன்பியூசியசம் முதல் மாவோசியசம் வரையிலான சீன சிந்தனைகளின் வழி நின்று இன்றைய சீனாவின் உயர்தர மண்டலம் மற்றும் பாதை முன்னெடுப்பு முயற்சிக்கும் எட்டு கொள்கைப் பிரகடனங் களை வெளியிட்டுள்ளார்.
1. பல பரிமாண மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சி இணைப்பு வலய மைப்பை உருவாக்குதல்.
2. பொருளாதாரத்தில் உலக மயமாக்கலின் திறந்த சந்தைப் பொறிமுறையை ஊக்குவித்தல்
3. பொருளாதாரத்தில் கொள்கை பேசுவதுடன் நில்லாது நடைமுறை ஓத்துழைப்பை அளித்தல்.
4. உலகின் பசுமை நிலையையும் வளர்ச்சியையும் பேணுதல்
5. அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் பெருக உதவுதல்
6. மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பரிமாற்ற உறவுகளை இணைத்தல்
7. ஒருமைப்பாடு அடிப்படையிலான மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சிகளை ஊக்குவித்தல்
8. அனைத்துலக மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சி ஒத்துழைப்புக்கான நிறுவனத் தன்மையான உறுதிப்படுத்தல்களை ஊக்குவித்தல்
இந்த கொள்கைப் பிரகடனத்தின் மூலம் சீனா தனது இணைப்பில் உள்ள 150 நாடுகளுடனும் அதனது உள்ளக வெளியகச் செயற்பாடுகள் அனைத்திலும் நெறிப்படுத்தல் சக்தியாக அல்லாது வளப்படுத்தல் ஆற்றலாகத் தன்னை நாடுகள் பயன்படுத்தும் உரிமையினை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சீனாவின் உயர்தர மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சி என்பது புதிய உலக அரசியல் முறைமையில் எவ்வாறு அமெரிக்காவின் பிரிட்டன்வூட் கொள்கை உருவாக்கல் 1945 முதல் 2020 வரையான காலம் வரை உலகின் தலைமைத்துவத்தை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு உதவியதோ அதுபோல இன்றைய உலகின் புதிய அரசியல் முறைமைக்குச் சீனா தான் தலைமைத்துவத்தை முன்னெடுக்க உதவப்போகிறது.
இன்றைய இந்தப் புதிய அரசியல் முறைமையில் இலங்கையைச் சீனா தனது கடல்வழி வான்வழி நிலவழி வளர்ச்சிக்கான முக்கிய இடமாக வலிந்து கொண்டது. சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி தன்னளவில் அமெரிக்க இந்திய ஆதரவு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவராக இருப்பினும் அதனையும் மீறிச் சீனாவுடன் அதன் உயர்தர மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சிகளை முன்னெடுப்பதை ஏற்று ஊக்கப்படுத்தும் பத்து உடன்படிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
01. சீனாவின் உயர்தர மண்டல மற்றும் பாதை முன்முயற்சித் திட்டங்களை இலங்கை அதனுடன் இணைந்து கூட்டாக விரைவாகச் செயற்படுத்தும் புரிந்துணர்வு உடன்படிக்கை
02. சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணைக்குழுவுடனான அரசியல் தொடர்பாடல் மூலம் இலங்கையின் நிதி, பொருளாதாரம், தேசியக் கொள்கைள் என்பவற்றைச் சீனாவுக்கு அமைவாக முன்னெடுப்பதற்கான புரிந்து ணர்வு உடன்படிக்கை
03. இலங்கையிலும் கார்பன் வாயுக்கள் வெளியேற்றங்களை மட்டுப்படுத்தி பசுமை வளர்ச்சியைப் பேணும் புரிந்துணர்வு உடன்படிக்கை
04. கொழும்பில் 2000 அலகுகள் வீடுகளை அமைத்தலை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி உடன்படிக்கை
05. சீனாவுக்கு இலங்கை இலவங்கப்பட்டைகளை ஏற்றுமதி செய்வதில் உள்ள பைட்டோசனிட்டரி தேவைகளின் நெறிமுறைகள் குறித்த உடன்படிக்கை
06. இலங்கையில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காட்டு வளப் பொருள்கள் மீன்பிடித்தல் வழியான சந்தைப்பொருட்கள், நீர்வாழ் உயிரினம் (கடலட்டைப் பண்ணை, இறால் போன்றவை)  என்பவற்றின் அதிக உற் பத்திக்கான ஆய்வுகள் மற்றும் இவற்றை விளைவிப்பதற்காக நிலத்தை நீரை வழமையான பயன்பாடுகளில் இருந்து தனிமைப்படுத்தல், கூடவே கால் நடைகளின் சுகாதார தேவைகள் என்பன குறித்த நெறிமுறைகள் குறித்த உடன் படிக்கை
07. இலங்கையில் பொதுக்கல்வியை சீனாவின் டிஜிட்டல் வெளித் தொழில் நுட்பத்துடன் இணைத்து மாற்றுவதற்கான சீன உதவியைப் பெறுவதற்கான பரிமாற்ற உடன்படிக்கை
08. நீரை முதலாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்கள் தொடர்பான தொழில்நுட்ப சீன இலங்கைக் கூட்டு ஆய்வுகள் விளக்க மையங்கள் செயற் பாடுகள் குறித்த சீனா-ஆய்வு மையம்-இலங்கை அரசாங்கம் இடையிலான முத்தரப்பு உடன்படிக்கை
09. சீனாவின் ஹெனானில்  உள்ள வரலாற்றுச் சிறப்புள்ள வெள்ளைக் குதிரைக் கோயிலில் இலங்கைக் கோயில் அமைத்து இலங்கை புத்த நாடென உலகுக்கு அறிவிக்கும் புத்த தூபியையும் நிறுவும் உடன்படிக்கை
10. கொழும்பு துறைமுக நகரின் 2வது கட்ட மேம்பாட்டு வேலையை தொடங்க சீனாவிடம் இருந்து 1565 பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கு துறைமுகப் பொருளாதார ஆணையகம், சைனா கார்பர் என்ஜினியரிங் கம்பெனி, பிறவுண் இன்வெட்ஸ்மென்ட் குரூப் ஹூனான் கன்ஸ்ரக்சன் இன்வெஸ்ட்மென்ட் குரூப் ஆகியவற்றுக்கு சீனாவும் இலங்கையும் அனுமதிக்கும் உடன்படிக்கை.
இந்தப் பத்துத் திட்டங்களையும் பொருளாதார கல்வி கட்டமைப்பு ஏற்றுமதி வளர்ச்சிகளுக்கென்றே இலங்கை கூறினாலும் இவை சிங்கள இறைமை தன்னை சீனாவின் அதிகாரமையத்துடன் இணைத்து இந்தியா மற்றும் அமெரிக்க அதிகார மையங்களின் இலங்கை மீதான அழுத்தங்களை எதிர்ப்பதற்கான தனது பலத்தைப் பெருக்குவதற்கான திட்டமிடல் என்பது சிறுகுழந்தைக்கும் தெளிவாகத் தெரியும்.
இலங்கையின் சிங்கள இனத்தின் இந்த தங்களின் இறைமையத் துணிவுடன்
 முன்னிறுத்திச் செயற்படும் பண்பு ஈழத்தமிழர்களுக்குத் தங்களின் இறைமையைத் துணிவுடன் முன்னிறுத்திச் செயற்படுவதில் 2009க்குப் பின்னர் இல்லாது இருப்பதுவே இலங்கையின் மூத்த குடிகளான ஈழத்தமிழர்கள் குறித்த அனைத்துலக அக்கறையின்மை தொடர்வதற்கான மூலகாரணமாக உள்ளது.
அவ்வாறே சிங்கள பௌத்த அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த அமைப் புக்களும்  ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்டு மற்றவரை அடக்குவதற்குப் பதிலாக அனைவருடனும் இணைந்து ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்களை வளர்ப்பதன் மூலம் எல்லாத் தரப்பும் எழுச்சி பெற்றுச் சிங்களத் தேசமாகத் தம்மை நிலைநிறுத்தும் தன்மை ஈழத்தமிழர்களுக்கு இல்லாமல் தமக்குள் முட்டி மோதிச் சகோதரப் பகைமைகளை வளர்த்து தேசமாக எழாது துண்டுகளாக நின்று கொண்டு தங்களுக்கு உலக ஆதரவு தேடவேண்டும் தங்களால் தாயகத்தைத் தேசியத்தைத் தன்னாட்சியை மீளுருவாக்கம் செய்ய முடியும் எனச் செயற்படும் படு முட்டாளிகளின் அரசியலால் ஈழதேச மீள் கட்டமைப்புக்கான உலகத் தமிழர்களின் கல்விப்பலத்தையோ தொழில்நுட்பத் துணையையோ  பொருளாதாரத்திற்கான சமூக மூலதனத்தையோ கடந்த 14 ஆண்டுகளாக உருவாக்க இயலாது உள்ளது.
இந்த தாயக புலத்து அரசியல்வாதிகளின் அமைப்புக்களின் ஒற்றுமையற்ற செயற்பாடுகள் ஒரு தேசத்தின் இறைமை அதன் மக்களின் ஒருமைப்பாட்டில் தங்கியுள்ளது என்ற உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறைமை இழப்பாக மாறுகிறது.  இதனால் வெளிநாடுகளில் வெளிநாட்டமைப்புக்களில் உரிமையுடன் தங்களின் வெளியகத் தன்னாட்சியின் அடிப்படையில் எங்களுக்கான தன்னாட்சியை அனுமதியுங்கள் என அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கேட்க இயலாதவர்களாக ஈழத்தமிழரைத் தங்கி வாழும் மக்களாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
வெளிநாடுகள் அமைப்புக்கள் தங்களிடம் கோரிக்கை வைக்கும் தேசமக்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மீகப் பலத்தின் அடிப்படையிலேயே அவர்களின் தன்னாட்சிக்கான தங்களின் ஏற்பினையும் உதவிகளையும், வழங்குவார்கள் என்பதால் தாயகத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின் ஒற்றுமையீனம் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினையில் அக்கறையற்றவர்களாக உலக நாடுகள் உலக அமைப்புக்கள் தம் நடவடிக்கைகளைச் சிறிலங்காவுக்கு ஆதரவாகவே வெளிப்படுத்துகின்றனர்.
இதனால்  ஈழத்தமிழர்கள் 1978 முதல் 2009 வரையிருந்த தங்களின் நடைமுறையரசின் ஆட்சிப்பரப்பில் இருந்த இறைமையும் இழந்து அமெரிக்க இந்திய வல்லாண்மைகளால் சிறிலங்காவின் சமுதாயத்தினர் என்று பேசப்பட்டுச் சிறிலங்காவுக்குள் அடக்கப்பட்டு அது வழங்கும் சிங்கள பௌத்த மேலாண்மைத் தீர்வு களுக்கு அதனுடன் பேச்சுவார்த்தைக்குத் தவமிருக்கும் சிறுமைத்தனமான அரசியலை முன்னெடுக்கும் நடை முறை எதார்த்தத்தில்  உள்ளனர்.
இதற்கான முழுப்பொறுப்பையும் தங்களுக் குள் ஒற்றுமை ஒருமைப்பாடு இல்லாது ஈழத்தமிழர் களுக்காகத் தாயகத்திலும் புலத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர் தொடர்பாக அரசியல் பேசும் அத்தனை பேரும் ஏற்றேயாக வேண்டியவர்களாக உள்ளனர் என்பதே இலக்கின் உறுதியான எண்ணம். ஒன்றுபட்டு ஒருமைப்பாட்டுடன் வேலை செய்ய மறுக்கும் ஒவ்வொருவரும் நீங்கள் யாருக்காக வேலை செய்கின்றீர்கள் என்ற கேள்விக்கு ஈழத்தமிழ் மக்களுக்குப் பதில் கூறியே ஆக வேண்டும்.
சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பின் அறி முகத்துடன் ஈழத்தமிழர்களுக்கான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டு அவர்கள் சிறிலங்கா பௌத்த சிங்களக் குடியரசின் சமுதாயம் எனச் சிறுபான்மை இனத்துக்குரிய அனைத்துலகப் பாதுகாப்பையும் கூட இழக்கும் நடைமுறை எதார்த்தம் தோன்றி விடும்.
அதன் பின்னர் எந்த ஒரு அனைத்துலக நாடோ அமைப்போ ஈழத்தமிழர்களுக்குச் சிறிலங்காவின் இறைமையை மீறி எந்த ஒரு சிறு உதவியைக் கூடச் செய்ய இயலாத நிலை உருவாகும்.
அத்துடன் இன்று தேசமக்கள் என்ற நிலையில் இருக்கையிலேயே உலகின் பல நாடுகளிலும் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை மட்டுமல்ல ஈழத்தமிழரின் அமைதிக்கு மனித உரிமைக்கு புனர்வாழ்வுக்குப் புனரமைப்புக்கு உழைப்பவர்களைக் கூட   பயங்கரவாதிகள் எனப்பட்டியல் இடப்படும் சிறிலங்காவுக்குச் சாத கமான உலகநாடுகளும் அமைப்புக்களும் நாளை ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் சமுதாயம் என்ற நிலை உருவான பின்னர் ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் சிறிலங்காவிடமே அனைத்தையும் பெற்று வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்திப்பைச் செய்வார்கள் என்பது வெளிப்படையான ஒன்று.
எனவே இந்த அபாயகரமான அரசியல் சூழ்நிலையிலாவது ஈழத்தமிழ் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றுபடுங்கள். உலகின் அதிகார மையங்களுக்குச் சிறிலங்காவை எந்த அளவுக்கு தேவையோ அதனை விட பலமடங்கு ஈழத்தமிழர் களது தாயகத்திலும் உலகெங்கும் உள்ள மனித வலுவும் மூலதனப் பலமும் கல்வித் தொழில்நுட்ப அறிவும் ஆற்றலும், தாயக இயற்கை வளமும் இந்துமாக்கடல் முக்கியத்துவமும் உலகின் பாது காப்பான அமைதிக்குத் தேவை என்ற உண்மையை எல்லா உலக அதிகார மையங்களுக்கும் வெளிப்படுத்துங்கள். உங்களுக்குள் தேவையற்ற மோதல்களை விடுத்து தேசத்தை மீளுருவாக்கும் இப்பணியில் அனைத்து ஈழத்தமிழர்களையும் அர வணையுங்கள் இணையுங்கள். அப்பொழுதுதான் உலக ஆதரவின் மூலம் ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆதரவு ஈழத்தமிழர்களுக்குக் கிட்டும் என்பதே இலக்கின் இறுதியும் உறுதியுமான எண்ணம். இனி ஒரு நிமிடம் கூட வீணடியாதீர்கள். ஒன்றுபட்டால் சமூக பொருளாதார அரசியல் ஆன்மீக உலகில் ஈழத்தமிழரால் செய்ய இயலாதது எதுவுமில்லை என்பதை மனதிருத்தி தேசமாக எழுங்கள்.
இலக்கின் இந்த ஆசிரிய கடிதத்திற்கான சிந்தனைகள் பிறப்பதற்கு தகவல் தளமாக விளங்கிய வீரசேகரி மின்னிதழில் 30.10.2023 இல் விஸ்ணுவால் வெளியிடப்பட்ட  ஆர் ராம் எழுதிய “கனவுத் திட்டத்தை மீளமைத்தது சீனா” என்ற கட்டுரைக்கு ‘இலக்கு’ தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

Exit mobile version