Home ஆசிரியர் தலையங்கம் இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்

 இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்

நெருக்கடிப் பொருளாதார நிலையிலும் தமிழர்களை அந்நியப்படுத்தும் சிறிலங்கா

வருமானமும், தமிழர்களின் பொருளாதாரப் பலத்தை படைபலம் மற்றும் படைபல ஆதரவு கொண்ட சிங்கள பௌத்த அரச பயங்கரவாதக் குழுக்கள் என்பவற்றின் வழி சிறிலங்கா அரசாங்கம் 22.05. 1972 முதல் கடந்த அரை நூற்றாண்டாகத் திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியாக அழித்து வருவதும், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பைத் தாங்கிநின்ற ஈழத் தமிழர்களின் மனித வளமும், மூலவளங்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படக் காரணமாகி, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணமாக விளங்குகின்றன.

பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் மூலம் எந்த மலையகத் தமிழர்கள் பிரித்தானிய இலங்கையின் உலகப் பொருளாதாரச் சந்தையின் கடும் உழைப்பாளர்களாகப் பிரித்தானியாவின் திறைசேரிக்கு நிதிவளமளித்தார்களோ, அந்த மலையகத் தமிழர்கள் இன்று அவர்களின் ஆற்றல்களில் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்களாக்கப்பட்டுள்ளமை, இப்பொருளாதார நெருக்கடிக்கான மற்றொரு காரணம். முஸ்லீம்களது பங்களிப்புக்களும் மறுக்கப்பட்டமை இன்னொரு காரணம்.

தமிழர்களதும் தமிழ்பேசும் மக்களதும்  சுதந்திரமான பொருளாதாரப் பங்களிப்பு 1921ம் ஆண்டு முதல் நூறாண்டுகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள படைபல அரசியலால் தடுக்கப்பட்டு வந்ததின் உச்சமாக இன்று நான்கு சக்கரங்களில் மூன்று சக்கரங்கள் பழுதடைந்த வண்டியாக விழுந்து கிடக்கிறது. வண்டியை திருத்தவென வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சக்திகளும் நாட்டின் மூலவளத்தையும், மனிதவளத்தையும் தமதாக்குவதற்கான திட்டங்களையே சூழ்நிலையின் பலவீனங்களைப் பயன்படுத்தி முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் சந்தைப் பொருளாதாரத்தில் இறக்குமதிக்கு இன்னொரு நாட்டிடம் கையேந்திப் பிச்சை வாழ்வு வாழும் நிலையால் தேசிய வருமான இழப்பும் இறைமை இழப்பும், சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆற்றலுமற்ற அரசாக இலங்கையின் இன்றைய அரசு உலக அரங்கில் காட்சியளிக்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் இறைமை இழப்பில் இருந்து சீனா தங்களைப் பாதுகாக்குமென்ற நம்பிக்கையில் சீனாவின் உலகப் பொருளாதார வல்லாண்மை யாக்கத்திற்கு இலங்கைத் தீவை தளமாக்கிய மகிந்த, கோத்தபாய சகோதர ஆட்சியாளர்கள் இன்று சிவப்புத்துண்டை தங்கள் தம்பி பசில் ராசபக்ச மூலம் கழுவித் துவைத்து சிவப்புக் கழுகுப்படமாக தோளில் போடப் படாதபாடுபடுகின்றனர். ஆனால் இந்திய சந்தைப்பலத்தைத் தாண்டி எந்த உலக நாடும் தான் விரும்பியவாறு இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு ஆயத்தமாகவில்லை. இதனால் நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இந்தியாவிடமே சரணடைய வேண்டிய ஒரே நிலையில் இன்று இலங்கையுள்ளது.

இதனை தனது சந்தைப் பெருக்கத்திற்கான பலமான அடித்தளமாக இந்தியா தனது இன்றைய கடன் உதவிகளாலும் பொருள் உதவிகளாலும் விரைவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. சீனா இதனை அமைதியாக அனுமதித்து, தனது ஆசிய ஒருமைப்பாட்டின் வழியாக இன்றைய உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்கான ஆசியக் கோட்டையை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறது. ரஸ்சிய உக்ரேன் நேரடி மோதல் ரஸ்யா – சீனா – இந்தியா என்னும் ஆசியாவின் மூன்று முக்கிய நாடுகளையும் ஆசியக் கோட்டையைப் பலப்படுத்துதல் என்ற காலத்தின் தேவையுள் நெருக்கமாக்குவது இயல்பான வொன்றாகவே உள்ளது.

இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சிறிலங்கா, இந்த மூன்று நாடுகளும் தமக்குள் முரண்பட முடியாத இக்காலகட்டத்தில் இந்தியாவைத் தன்னை பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவிக்கும் சக்தியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியாவும் தெற்காசியாவின் பொருளாதாரத்தின் நுழைவாயிலாகவும் இந்துமா கடலின் மேலாண்மைச் சக்தியாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு இலங்கையைத் தனது கைகளுக்குள் இலங்கையுடனான இறைமைப் பகிர்வினைப் பொருளாதாரத்தில் ஆழப்படுத்துவதன் வழி செயல்படுகிறது.

இந்தப் புதிய சூழலில் சிறிலங்காவின் அரச அதிபர் கோட்டபாய ராசபக்ச தன்னையும் பிரதமராக உள்ள தனது அண்ணா மகிந்தாவையும், அமைச்சர்களான பசில் ராசபக்ச. பந்துல குணவர்த்தன, ஜோன்சன் பெர்ணான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரமேஸ் பத்திரன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்,  அரசஅதிபரின் செயலாளர் காமினி செனரத், திறைசேரிச் செயலாளர் எஸ் ஆர் அட்டிக்கல, பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார ஆகியோரை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழுவில் ஒரு தமிழரோ அல்லது மலையகத் தமிழரோ அல்லது முஸ்லீம்களோ இடம்பெறாதவாறு தனிச்சிங்களக் குழுவாக கோட்டபாயா நியமித்து, இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல தமிழ்பேசும் இனங்களையே அந்நியப்படுத்தியுள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் தனது புதிய அரசியலமைப்பின் நாட்டு நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி அமைப்பாக நெருக்கடி நிலையிலும் சிங்கள பௌத்தத்திற்கே நாடு சொந்தம் என்னும் வகையில் இந்த நியமனங்களைச் செய்து, சிங்கள பௌத்த நாடு சிறிலங்காவெனக் கோட்டபாய உறுதி செய்துள்ளார். தமிழரின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய அடிக்கடி வேண்டுகோள் விடுக்கும் இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசும் இதனையேற்று டொலர்மழை பொழிவதை இலக்கால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் தங்களது சமுக மூலதனங் களையும் புத்திஜீவிப் பலத்தையும் ஒருங்கிணைத்து தங்களை உலகச் சந்தையில் ஆற்றலுள்ள பொருளாதார சமூகமாக நிலைநிறுத்துவதன் வழி தங்களைத் தாயக மக்களுக்கான பேரம்பேசும் சக்தியாக உயர்த்திக் கொண்டாலே புதிய பொருளாதார சூழலில் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இயலுமென்பதே இலக்கின் உறுதியான எண்ணம்.

Exit mobile version