உயிர்களின் பெறுமதி- ஒரு இழிவான மதிப்பீடு
“பல தசாப்தங்களாக போர் நடைபெற்ற நாடுகளான ஈராக்கைப் போலவோ அன்றேல் ஆப்கானைப் போலவோ உக்ரைன் இல்லை. ஒப்பீட்டளவில் இது நாகரீகமடைந்த ஒரு ஐரோப்பிய சமூகம். இவ்வாறான போர் இப்படியான நாடுகளில் நடைபெறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை – இருப்பினும் இங்கே நான் எனது வார்த்தைகளைக் கவனமாகவே பயன்படுத்த வேண்டும்” என்று சிபிஎஸ் செய்திச் சேவையின் வெளிநாட்டுச் செய்திகளுக்கான ஊடகவியலாளரான சாளி தகாத்தா கடந்த வாரம் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு எதிராக இணையத்தில் பலர் தமது கண்டனங்களை வெளிப்படுத்தவே, ஊடகத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்தவரான தகாத்தா உடனடியாக மன்னிப்புக் கோரினார். பெப்ரவரி 24ம் திகதி தனது பாரிய அளவிலான ஆக்கிரமிப்பை உக்ரைனில் ரஷ்யா ஆரம்பித்த பின்னர், உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பேரினவாதக் கண்ணோட்டத்தில் சித்தரித்தவர்கள் பலரை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
உக்ரைன் நாட்டின் முன்னாள் சட்டமாதிபதி ஒருவருடன் பிபிசி ஒரு செவ்வியை மேற்கொண்டது: “நீலநிறக் கண்களையும், பொன்னிறத் தலைமுடியையும் கொண்ட ஐரோப்பிய மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதைப் பார்க்கும் போது நான் மிகவும் வேதனையடைகிறேன்” என்று அந்தச் செவ்வியில் அவர் தெரிவித்ததைக் காணமுடிந்தது. அவரது கருத்து தொடர்பாகக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக “உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று பிபிசி ஊடகவியலாளர் மிகவும் மட்டமாகப் பதிலளித்திருந்தார்.
உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமல்ல அவர்களது மகிழுந்துகள் கூட எங்களது மகிழுந்துகள் போன்றே காட்சியளிக்கின்றன என்ற விடயத்தையே அவர் வெளிப்படுத்துகிறார். உக்ரைன் மக்கள் மீது நாம் இரக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறான மலினமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
“நாங்கள் ஒரு போதுமே நினைத்துப் பார்த்திருக்காத விடயங்கள் தற்போது அந்த மக்களுக்கு நிகழ்ந்திருக்கின்றன. இது தற்போது தான் அபிவிருத்தி அடைந்து வருகின்ற மூன்றாம் உலக நாடு அல்ல. இது ஐரோப்பா என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று போலந்து நாட்டிலிருந்து செய்திகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்து ஐரிவி (ITV) ஊடகவியலாளர் கருத்துத் தெரிவித்தார். இவர்களது கருத்தைப் பார்க்கும் போது, அபவிருத்தியடைந்து கொண்டு வருகின்ற மூன்றாம் உலக நாடுகளில் போர் நிகழ்வது சர்வசாதாரண விடயம் என்று இவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. (2014 இலிருந்து நேரடியான போர் உக்ரைனில் நடைபெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களும் அங்கே நடைபெற்றன).
“எல்லா வகையிலும் எங்களைப் போன்றே அவர்கள் இருக்கிறார்கள். அது தான் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்துகொண்டிருக்கிறது. உண்மையில் உக்ரைன் ஒரு ஐரோப்பிய நாடு. அங்குள்ள மக்கள் எங்களைப் போன்றே நெற்பிளிக்சைப் (Netflix) பார்க்கிறார்கள். இன்ஸ்ரகிராம் (Instagram) கணக்குகளை வைத்திருக்கிறார்கள். சுயாதீனமாக நடத்தப்படும் தேர்தலில் வாக்களிக்கிறார்கள். தணிக்கை செய்யப்படாத நாளிதழ்களைப் படிக்கிறார்கள். எங்கேயோ தொலை தூரத்தில் போரிலே துன்புறுகின்ற மிகவும் வறிய மக்கள் தொடர்பாக நாங்கள் இங்கு பேசவில்லை” என்று டெலிகிராபின் பத்தி எழுத்தாளரான டானியல் ஹனன் (Daniel Hannan) தெரிவித்தார்.
இவ்வாறான செய்திக் குறிப்புகள் என்னை மட்டும் பாதிக்கவில்லை. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற அரபு மற்றும் மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சங்கமும் இவ்வாறான செய்தி அணுகுமுறை தொடர்பாக தமது கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். ‘நாகரீகமடையாதவர்கள்’ என்று ஏதாவது ஒரு சமூகத்தையோ அன்றேல் நாட்டையோ அழைப்பதையோ அல்லது பொருண்மிய காரணங்களைக் காட்டி போரை நியாயப்படுத்துவதையோ அமேஜா முற்றிலும் நிராகரிக்கிறது மட்டுமல்லாமல், அது தொடர்பான தனது கண்டனத்தையும் பதிவு செய்கிறது.
உண்மையில் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, தென் ஆசியா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் துன்பகரமான நிகழ்வுகளை மிகவும் இயல்பானதாகக் காண்பிக்க முயல்கின்ற மிகவும் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கின்ற ஒரு மனப்பான்மையையே இவ்வாறான ஊடக வர்ணனைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஊடகங்களின் இவ்வாறான செய்தித் தொகுப்பு வழங்கல்கள் இம்மக்களை அவமதிக்கின்ற ஒரு செயற்பாடு என்பது மட்டுமன்றி போரில் இந்த மக்கள் சந்திக்கும் துன்பதுயரங்கள் சாதாரணமானவை, எதிர்பார்க்கப்பட வேண்டியவை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன” என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.
செய்திகளை இவ்வாறான பக்கச்சார்பான, இனவாதம் நிறைந்த முறையில் வழங்குகின்ற ஊடக அணுகுமுறைகள் தொலைக்காட்சித் திரைகளையும் நாளிதழ்களையும் கடந்து, அரசியலுக்குள்ளும் ஊடுருவுகின்றது என்னும் உண்மை இன்னும் வேதனையைத் தருவதாகும்.
முஸ்லிம் மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் வந்த போது, அவர்களைக் கூடாதவர்களாகக் காட்டி, இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் கூறியவர்கள் இன்றோ, அகதிகள் தொடர்பாக வேறொரு அணுகு முறையைக் கையாள்வதை அவதானி க்கக் கூடியதாக இருக்கிறது. “ரஷ்யாவின் தாக்குதல்களிலிருந்து உயிர் பிழைப்பதற்காகத் தப்பிச்செல்வோர் போலந்து அரசின் ஆதரவைப் பெறமுடியும்” என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மாறியுஷ் கமின்ஸ்கி (Mariusz Kaminiski) அண்மையில் தெரிவித்ததன் மூலம் இந்த அணுகுமுறை தெளிவாகின்றது. இது இவ்வாறிருக்க, போலந்து நாட்டுக்கு இட்டுச் செல்லும் எல்லைகளைக் கடக்க முயல்கின்ற நைஜீரிய மாணவர்கள் தடுக்கப் படுவதாக நைஜீரிய அரசு முறையிட்டிருக்கிறது. இம்மாணவர்களில் சிலர் போலந்து நாட்டுக்குள்ளும் பிரச்சினைகளைச் சந்தித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
“தேவை ஏற்படின் நிச்சயமாக அகதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று ஆஸ்திரிய நாட்டின் அதிபரான காள் நெஹாமர் (Karl Nehammer) தெரிவித்திருக்கிறார். அதேவேளை, ஆப்கான் நாட்டைச் சேர்ந்த அகதிகளைத் தமது நாட்டில் குடியேற்றுவது தொடர்பாக, அந்த நேரத்தில் ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சராக பதவி வகித்த இதே காள் நெஹாமர் மிக இறுக்கமான அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். ஏற்றுக்கொள்ளப்படாத ஆப்கான் அகதிகள் மீண்டும் தலிபானின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஆப்கானுக்குள் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். “ஆப்கானையும் உக்ரைனையும் ஒப்பிட முடியாது. இங்கு அயல்நாட்டுக்கு உதவுவது தொடர்பாக நாங்கள் பேசுகின்றோம்” என்று ஆஸ்திரிய தொலைக்காட்சிக்கு அவர் தெரிவித்திருந்தார்.
அயல்நாடுகள் தமது அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு உதவுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் தான் என்று நீங்கள் கருதலாம். உண்மையில் அடைக்கலம் கொடுப்பது என்பது ஒருவரது அண்மையில் இருக்கும் நாட்டில் வசித்தல், அல்லது தோலின் நிறம், அல்லது ஒரு தகுந்த காரணம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது என்பதை இந்த ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் முற்றிலும் மறந்துவிடுகிறார்கள். எங்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்களுக்கு, அல்லது எங்களைப் போன்று இறைவனை வேண்டுபவர்களுக்கு மட்டும் இரக்கம் காட்டுபவர்களாக நாங்கள் இருப்போமானால் போர் எப்படிப்பட்ட ஒடுக்கமான அறிவற்ற தேசியவாதத்தை ஊக்குவிக்கின்றதோ, அதே குழிக்குள் நாங்களும் விழுந்து விடுகிறோம்.
முற்றிலும் எங்களைப் போன்ற தோற்றம் உள்ளவர்கள், அல்லது எங்களைப் போன்றே உடை உடுத்துபவர்கள் அல்லது எங்களைப் போன்றே இறைவேண்டல் செய்பவர்கள் என்பதற்காக மிகவும் ஆபத்தான கட்டத்தில் உக்ரைன் மக்களுக்கு நாம் உதவி செய்ய முன்வருவோமாக இருந்தால் அல்லது அவர்களுக்கு மாத்திரம் நாம் உதவுவோமாக இருந்தால், நாங்கள் மிகவும் தவறான ஒரு காரணத்துக்காக இன்னொரு மனிதப் பிறப்புக்கு உதவ முன்வருகிறோம் என்பது பொருளாகும். இதன் மூலம் நாங்கள் நாகரீகத்துக்கு விடைசொல்லிவிட்டு காட்டுமிராண்டித் தனத்தையே தேர்வு செய்கிறோம் என்பதே பொருளாகும்.
நன்றி: theguardian.com
- சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும் இம்முறையாவது சாத்தியமாகுமா? | பி.மாணிக்கவாசகம்
- பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை: கொடுத்த விலை தெரியுமா? | ஊடகவியலாளர் கலைச்செல்வி சென்னை தமிழ்நாடு
[…] உயிர்களின் பெறுமதி- ஒரு இழிவான மதிப்பீடு “பல தசாப்தங்களாக போர் நடைபெற்ற நாடுகளான ஈராக்கைப் போலவோ அன்றேல் ஆப்கானைப் போலவோ உக்ரைன் இல்லை. ஒப்பீட்டளவில் இதுமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-173-march-13/ https://www.ilakku.org/ […]