Home ஆய்வுகள் சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன்வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்?

உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதுடன் நாடு மிகப்பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (10) வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உக்ரைனில் ஏற்பட்ட அழிகளின் மதிப்பு 100 பில்லியன் டொலர்கள்.

இதுவரை ஏறத்தாள 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பது தொடர்பில் ஐரோப்பிய நாடுகளிடம் முறுகல்களும் ஏற்பட்டுள்ளன. போரை தூண்டிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியா அகதிகளை ஏற்கமறுப்பதும் விவாதப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

களமுனையை பொறுத்தவரையில் இரு தரப்பும் சேதங்களை சந்தித்து வருகின்றன. முதல்நாள் போரில் உக்ரைன் வான்படை மற்றும் வான் எதிர்ப்பு படையினர் கடுமையான இழப்புக்களை சந்தித்த போதும், அவர்களின் எஞ்சியிருந்த தாக்குதல் விமானங்களும் இந்த வாரம் அழிவைச் சந்தித்துள்ளன.

கடந்த 5 ஆம் நாள் சைரோமோர் பகுதியில் இடம்பெற்ற வான் மோதலில் உக்ரைனின் நான்கு எஸ்யூ-27 தாக்குதல் விமானங்கள் ரஸ்யாவின் எஸ்யூ-35 விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் பெப்ரவரி மாதம் 25 ஆம் நாள் தலைநகர் கிவ்விக்கு மேலாக வைத்து ஒரு எஸ்யூ-27 விமானம் ரஸ்யாவின் எஸ்-400 ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன், உக்ரைன் படையினரும் தமது ஒரு எஸ்யூ-27 விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருந்தனர். அதே தினம் மேலும் ஒரு எஸ்யூ-27 விமானத்துடன் விமானி ஒருவர் ரூமேனியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

வான் சண்டையில் எஸ்யூ-27 விமானம் வீழ்த்தப்பட்டது இதுவே முதலாவது சம்பவமாகும், வான்சண்டையில் இதுவரையில் வீழ்த்த முடியாத இந்த விமானத்தை ரஸ்யாவின் எஸ்யூ-35 விமானமே வீழ்த்தியதாக கூறப்பட்டாலும், ரஸ்யா அதனை உறுதிப்படுத்தவில்லை. 130 கி.மீ தொலைவில் வைத்து எதிரி விமானங்களை அழிக்கும் எஸ்யூ-27 விமானத்தை 400 கி.மீ தொலைவில் வைத்து எதிரி விமானங்களை அழிக்கும் எஸ்யூ-35 விமானம் தனது ஆர்-37எம் வானிலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணையினால் அழித்துள்ளது. இந்த சமரில் உக்ரைன் வான்படையின் எம்.ஐ-8 உலங்குவானூர்தி, எஸ்யூ-25 தாக்குதல் விமானம், எகிப்து மற்றும் உக்ரைன் தயாரிப்பான பைரக்டர் வகை ஆளில்லாத தாக்குதல் விமானமும் (Bayraktar TB2) அழிக்கப்பட்டிருந்தது.

ரஸ்யாவும் தனது முன்னணி விமானங்களில் ஒன்றான எஸ்யூ-34 வகை விமானத்தை இழந்திருந்தது. சாதாரண ஏவுகணைகளால் வீழத்த முடியாத இந்த விமானம் எவ்வாறு வீழ்ந்தது என்ற ஆச்சரியம் ரஸ்ய படையினரிடம் ஏற்பட்டிருந்தது.

எனினும் மனிதர்களால் தோளில் வைத்து ஏவப்படும் ஸ்ரிங்கர் வகை ஏவுகணைகளை ஒன்று அல்லாது பலவற்றை ஒரு தடவையில் ஏவியதன் மூலம் எஸ்யூ-34 விமானத்தின் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த நிலையில் ஒரு ஏவுகணை விமானத்தை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, கொல்மேல் வான்படை தளம் மீது கடந்த மாதம் 24 ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலில் 3 எஸ்யூ-27 விமானங்கள் அழிவடைந்திருந்தன.

அதேசயம், உக்ரைன் வான்படையினரின் மிக்-29 விமானங்களும் பெருமளவில் வான்படை தளங்களில் வைத்தும், வானில் வைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

37 மிக்-29, 12 எஸ்யூ-24, 17 எஸ்யூ-25,  32 எஸ்யூ-27 தாக்குதல் விமானங்களை கொண்ட உக்ரைன் வான்படையில் தற்போது சொற்பமான விமானங்களே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் வான்படை மற்றும் வான் எதிர்ப்பு பலத்தை 90 விகிதமாக குறைத்துவிட்டதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கடந்த வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது.

அதனை உறுதி செய்வது போலவே அண்டைய நாடுகளிடம் இருந்து தாக்குதல் விமானங்களை கோரியுள்ளது உக்ரைன், முதலில் போலந்து, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் விமானங்களை கொடுக்க முன்வந்தபோதும், பின்னர் அவை பின்னடித்துவிட்டன. விமானங்களை வழங்குவது ரஸ்யாவுடன் நேரிடையான போருக்கு வழிவகுக்கும் என அவை நம்புகின்றன. ரஸ்யாவும் அவ்வாறே எச்சரித்திருந்தது.

ஆனால் விமானங்களை வழங்குமாறும் தாம் அதற்கு மாற்றீடாக எப்-16 விமானங்களை தருவதாகவும், அமெரிக்கா போலந்துக்கு அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், தன்னால் நேரிடையாக கொடுக்க முடியாது ஆனால் ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின் நேட்டோ வான்படை தளத்தில் விமானங்களை ஒப்படைக்கிறேன் அதனை அமெரிக்காவே நேரிடையாக உக்ரைனுக்கு வழங்கலாம் என போலந்து தெரிவித்ததை தொடர்ந்து அமெரிக்கா அதில் இருந்து பின்வாங்கியுள்ளது.

இந்த திட்டம் நிறைவேறியிருந்தால் உக்ரைன் வான்படை 52 மிக்-29 ரகம் மற்றும் 8 எஸ்யூ-25 ரக விமானங்களை பெற்றிருக்கும். ஆனால் அது களமுனையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் ரஸ்யாவின் எஸ்-400 தரையில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள் மற்றும் வான்போரில் திறமைவாய்ந்த எஸ்யூ-35 ரக தாக்குதல் விமானங்கள் உக்ரைனின் வான்பரப்பை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. எஸ்-400 ஏவுகணை ஒரு தடவையில் 80 இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது.

மேற்குலக நாடுகள் வழங்கிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் உக்ரைன் படையினர் வசம் உள்ள கனரக பீரங்கிகள் மூலமும், துருக்கி வழங்கிய ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலமும் ரஸ்யாவின் தரைப்படை கணிசமான இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

எனினும் ஐரோப்பாவில் மிகப்பெரும் தாங்கி படையணியை கொண்ட உக்ரைனினால் ஒரு நேரிடையான மரபுவழிப்போரை நடத்த முடியவில்லை என்பது களநிலமையின் யதார்த்தத்தை மேற்குலக ஊடகங்களின் பிரச்சாரத்தை புறந்தள்ளி எடுத்துக் காண்பித்துள்ளது. சமர் ஆரம்பிக்கும்போது அவர்களிடம் 850 இற்கு மேற்பட்ட வாகனங்களைக் கொண்ட கவசப்படையணி இருந்தது.

தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள தமது படைத் தளங்களை இழந்த பின்னர் பாதுகாப்பான மேற்கு பகுதியில் இருந்து தமது வான்படை மற்றும் வான்எதிர்ப்பு படையினரை வழிநடத்திவந்த உக்ரைன் படையினரின் தளங்கள் மீதும் ரஸ்யா தனது தாக்குதலை கடந்த வெள்ளிக்கிழமை (11) ஆரம்பித்துள்ளது.

லுற்ஸ்க் பகுதியில் உள்ள வான்படைத் தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தினமும் 50 ஏவுகணைகளையே ரஸ்யா பயன்படுத்துவதுடன், அதனை முக்கிய இலக்குகளை அழிப்பதற்கே பயன்படுத்துகின்றது.

தொடர்ந்து இடம்பெறும் போரில் உக்ரைன் தனது முக்கிய தளங்களையும், ஆயுதங்களையும் இழந்து வருவதுடன், ஒரு கெரில்லா போர் முறைக்கு படிப்படியாக சென்றுவருகின்றது. உக்ரைன் கடற்படையினரிடம் இருந்த முதன்மை தாக்குதல் கப்பலையும் (Hetman Sahaidachny, the only frigate) அவர்கள் தாமே அழித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கருங்கடலில் இந்த கப்பல் ரஸ்யாவின் கைகளில் கிடைப்பதை தடுப்பதற்கே அதை மேற்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், மேற்குலகம் வழங்கும் இலகுரக வானெதிர்ப்பு ஆயுதங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தின் பொதுமக்களின் வான்போக்குவரத்திற்கு ஆபத்தானதாக வருங்காலத்தில் மாறலாம் என ரஸ்யா இந்த வாரம் எச்சரித்திருந்த நிலையில், உக்ரைன் படையிரின் எஸ்-300 ஏவுகணை ரூமேனியாவின் இரு வான்படை விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மிக்-21 வரை விமானமும், ஐ.ஏ.ஆர்-330 பூமா வகை உலங்கு வானூர்தியும் அழிந்ததுடன் 14 படையினரும் கொல்லப்பட்டிருந்னர்.

இந்த பத்தி எழுதப்படும் போது பெலாரூசிஸ் இருந்து கிவ்வி நோக்கி தரித்து நின்ற ரஸ்யாவின் 65 கி.மீ நீளமான தொடரணி தமது தாக்குதல் நிலையிடங்களுக்கு சென்று விட்டதாகவும், ரஸ்ய படையினர் தலைநகருக்கு 9 மைல்கள் தொலைவில் வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே அடுத்த சில தினங்கள் உக்ரைன் சமரில் ஒரு திருப்புமுனையான நாட்களாக இருக்கப்போகின்றது.

Exit mobile version