Tamil News
Home செய்திகள் இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: வைத்தியசாலை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: வைத்தியசாலை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளதை அடுத்து நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் வைத்திய சாலை பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய சேவை அத்தியாவசிய சேவையாக உள்ளமையால் வைத்திய சாலை பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலரிடம் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் பல தரப்பினரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன், பல இன்னல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களாக பெருமளவானோர் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்து நிற்கின்றனர். அதனால்,  வைத்தியசாலை பணியாளர்களும் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையிலேயே  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா, மாவட்ட செயலரிடம் “வைத்திய சாலை பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version