Tamil News
Home ஆய்வுகள் பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம் – இணைந்து குரல்கொடுக்கத் தமிழ்தேசியவாதிகள் முன்வருவார்களா? – மட்டு.நகரான்

பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம் – இணைந்து குரல்கொடுக்கத் தமிழ்தேசியவாதிகள் முன்வருவார்களா? – மட்டு.நகரான்

மட்டு.நகரான்

பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம் – இணைந்து குரல்கொடுக்கத் தமிழ்தேசியவாதிகள் முன்வருவார்களா?: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. கொரோனா காரணமாக நாடுகள் பொருளாதார நெருக்கடி, நாடு வழமை நிலைமைக்கு திரும்பாமை, இறப்பு வீதம் அதிகரிப்பு என பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்த கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன், மீளமுடியாத நிலைக்கு இலங்கையின் பொருளாதார நிலைமை சென்றுகொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்களினால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில், எதிர்வரும் 10ஆண்டுகளுக்குக் கடுமையான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீட்கமுடியும் என வல்லுநர்கள் தெரிவித்துவரும் நிலையில், அவ்வாறான செயற்பாடுகளில் கவனம் செலுத்ததாத இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களின் பகுதிகளில் எவ்வாறான சிங்களக் குடியேற்றங்களைச் செய்யமுடியும் என்ற ரீதியிலேயே சிந்தித்து செயற்படுவதைக் காணமுடிகின்றது.

இலங்கை தனது பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளமுடியாத நிலையிலும், உள்ளூர் போராட்டங்களுக்கு தீர்வினை வழங்கமுடியாத சூழ்நிலையிலும், தமிழர் பகுதிகளில் எவ்வாறான ஆக்கிரமிப்புகளைச் செய்யமுடியும் என்பதிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தி வருகின்றது.

இந்த நாட்டிலே எவ்வாறான சூழ்நிலையேற்பட்டாலும், தமிழர்கள் இந்த நாட்டில் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் மட்டும் குறியாகச் செயற்படும் இந்த அரசாங்கம், எவ்வாறு தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கப்போகின்றது என்பதை சர்வதேச சமூகம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய நிலையிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான இனவிகிதாசாரத்தினை மாற்றுவதற்காக தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைப்பதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமோ அவற்றினையெல்லாம் செய்து வருகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தமிழர்கள் அதிகளவில் உள்ள மாவட்டமாகவுள்ள காரணத்தினால், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தினை இலக்கு வைத்து அரசாங்கம் செயற்படும் நிலையினைக் காண முடிகின்றது.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியபோதிலும், இந்த நிலையானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றதன் காரணமாக இது தொடர்பில் தொடர்ச்சியாக வெளிக்கொணர வேண்டிய தேவையுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியத்தின் தேவைப்பாட்டினை உணர்த்தும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த காலத்தில் அபிவிருத்திக்காகவும், அற்ப சலுகைக்காகவும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு ஆதரவு வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இன்று வெட்கித் தலைகுனியும் வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களை கவனத்தில் கொள்ளாத நிலையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வரும் நிலையில், தங்களது சொந்தத் தேவைகளுக்காகவும், தங்களை சுற்றியுள்ள வர்களின் தேவைகளுக்காகவும் ஒரு சமூகத்தினையே படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடுகளில் மட்டக்களப்பில் உள்ள அரசாங்கம் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் கொள்ளைகள், காணி அபகரிப்புகளில் தென்னிலங்கை அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் நேரடியாக வந்து ஈடுபடும் நிலையே இருந்துவருகின்றது. அதற்கு பக்கபலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்கத்திற்கு கூஜா தூக்கும் அரசியல்வாதிகள் இருந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக காணி ஆக்கிரமிப்புகளும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ட வகையில் மிகவும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான இரகசியச் செயற்பாடுகளுக்கான இணைப்பினை பிள்ளையான் போன்றவர்கள் முன்னெடுத்து வருவதே எமக்குரிய பாரிய சவாலாக இருந்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை என்னும் பகுதியில் சுமார் 200 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்று வதற்கான செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக குரல் கொடுக்கப்பட்ட காரணத்தினால் அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.

குறித்த பகுதியில் சிங்கள மக்களுக்கு காணி இருப்பதாகக் கூறி அம்பாறை மாவட்டம், பொலநறுவை மாவட்டத்திலிருந்து சிங்களவர்கள் அழைத்து வரப்பட்டு புனானையில் உள்ள வனஇலாகா அலுவலகத்தில் காணி வழங்குவதற்கான நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சேவையான காணி திணைக்களத்தின் இலங்கைக்காக ஆணையாளர் நேரடியாக வந்து இந்த நடமாடும் சேவையினை நடத்தியுள்ளார்.

குறிப்பாக ஒரு பிரதேச செயலகர் பிரிவில் காணி தொடர்பான பிரச்சினைகள் அந்ததந்த பிரதேச செயலகத்தில் மக்கள் அழைக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் காணி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. ஒரு பிரதேச செயலகப்பகுதியில் காணி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஒரு பிரதேச செயலாளருக்கே இருக்கின்றது. ஆனால் இந்த விடயத்தில் கொழும்பிலிருந்து வந்த காணித் திணைக்களத்தின் பணிப்பாளர் சிங்கள மக்களை அழைத்து அது தொடர்பான நடமாடும் சேவையினை பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்காமல் நடத்தியதானது, இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு தனியான சட்டம் ஒன்று இருப்பதாக காட்டிக்கொள்வதாகவே இருக்கின்றது.

குறித்த பகுதியில் 1976ஆம் ஆண்டுக்கு முன்னர் 190 சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் 1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்திற்க பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றதாகவும் கூறி தங்களுக்கு அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட உறுதிபத்திரத்தினையும் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் அந்த உறுதிப்பத்திரங்கள் முழுமையான சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறான ஒரு அனுமதிப்பத்திரம் இதுவரை மாவட்ட செயலகத்தில் வழங்கப்படவில்லையென மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கையொப்பமிட்ட காணி உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கடமையாற்றியவ ருமில்லை, மாவட்டத்தைச் சோர்ந்தவருமில்லை, அவர் அம்பாறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் என இது தொடர்பில் நீண்டகாலமாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பகுதியானது நீண்டகாலமாக வனபரிபாலனத்திற்குரிய காணிகளாக அடையாளப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. 2011ஆம் ஆண்டு 178குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. திம்புலாகல பௌத்த தேரர் தலைமையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு வாகரை பிரதேச செயலகத்தில் உள்ள காணிப்பிரிவு அதிகாரிகள் சிலர் துணையாக இருந்தனர். இங்குள்ள அரசியல் வாதிகளில் எடுபிடிகள்தான் இந்த அதிகாரிகள் மூலம் சிங்களக் குடியேற்றத்திற்கு துணை போகின்றனர். அப்போது நான் பாராளுமன்ற உறுப்பினராகயிருந்த காரணத்தினால் அன்று மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலிருந்த காணி அமைச்சருடன் கதைத்து அதனை தடுத்து நிறுத்தினேன்.

2015ஆம் ஆண்டு அந்த குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது கிழக்கு மாகாண காணி ஆணையாளராக இருந்த அனுரா தர்மதாச என்பவர் அந்த குடியேற்றத்திற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தார். அப்போது ஆளுநராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோவின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அப்போது மாகாண உதவி ஆணையாளராக இருந்த சாரிகா என்னும் சிங்களப் பெண்மணி குறித்த குடியேற முற்பட்டவர்களின் ஆவணங்களைப் பார்வையிட்டு, அவை பிழையான நடவடிக்கையென்று ஆளுநரிடம் கூறி அதனை தடுத்து நிறுத்தினார். மீண்டும் அந்த திம்புலாகல பௌத்த தேரர் 2017ஆம் ஆண்டு மீண்டும் அந்த சிங்கள மக்களை குடியேற்ற முற்பட்டார், அப்போதிருந்த ஐ.தே.கட்சி காணி அமைச்சரிடம் கதைத்து அதனை தடுத்து நிறுத்தினோம்.

மீண்டும் 2019ஆம் ஆண்டும் இதே முயற்சியை குறித்த பௌத்த தேரர் முன்னெடுத்தபோது, அன்று இருந்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது அவற்றினை ஆராய்ந்து அவை போலியானது என நிராகரித்தார். குறித்த பகுதியில் சிங்கள மக்கள் 1983ஆம் ஆண்டுக்கு முன்பாக வசித்திருந்தால், அவர்கள் தொடர்பான வாக்காளர் அட்டை உட்பட ஆவ ங்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால் அவை தொடர்பான எந்த பதிவும் இல்லாமல் போலியான ஆவணங்கள் கொண்டுவரப்பட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினைச் செய்ய முனைவதாகவும், அதற்குத் தாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, கெவிழியாமடு ஆகிய பகுதிகளில் முந்திரிகைச் செய்கை என்ற நாமத்துடன் சிங்கள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தலா மூன்று ஏக்கர் காணிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முந்திரிகைச் செய்கை நடவடிக்கைகளுக்காக சுமார் 2500 ஏக்கர் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த 2500 ஏக்கர் காணிகளும் பகிர்ந்தளிக்கப் படுமானால், சுமார் 850சிங்களக் குடும்பங்களை தமிழர் பகுதிகளுக்குள் குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படும்.

எனவே கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்த அத்துமீறிய குடியேற்றங்களைத் தடுப்பதற்கு சர்வதேச ரீதியான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த தமிழ்த் தேசியமும் இணைந்து குரல் கொடுப்பதற்கு தவறி வருகின்றனர். இந்த வரலாற்றுத் தவறினை இனியும் செய்யாமல், அனைவரும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Exit mobile version