Home ஆய்வுகள் ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: அமைதியையும் வளர்ச்சியையும் ஒன்றுபட்டு கட்டியெழுப்புதல் இதனை ஈழத்தமிழர்கள் எவ்விதம்...

ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: அமைதியையும் வளர்ச்சியையும் ஒன்றுபட்டு கட்டியெழுப்புதல் இதனை ஈழத்தமிழர்கள் எவ்விதம் அணுகலாம்?

211 Views

சூ.யோ. பற்றிமாகரன்

ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்ற நோக்கு 1ஆம் 2ஆம் உலகப் பெரும்போர்களால்  மக்கள் அனுபவித்த துன்ப துயர வாழ்வை மீண்டும் அனுபவிக்க எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாதென்பதாக உள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் தினமான அக்டோபர் 24 இல் ஒவ்வொரு ஆண்டும் மீள்நினைந்து மதிப்பிடல் ஐக்கிய நாடுகள் சபையின் கடமைப் பொறுப்பாகவும் உள்ளது.  இதற்காக ஐக்கிய நாடுகள் தினமான அக்டோபர் 24 இற்கு முன்னதான வாரத்தை ஊடக அறிவூட்டல் வாரமாகவும், அணுவாயுதக் குறைப்பு வாரமாகவும் கொண்டாடி, அக்டோபர் 24 இல் முன்னேற்றத்திற்கான புதிய சவால்களைச் சந்திக்கத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை எவ்வாறு வளர்க்கலாம் என்னும் சிந்தனையை முன்னெடுத்தல் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டமாகத் தொடர்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த மூன்று முக்கிய சிந்தனைகளும் பின்வரும் நோக்கங்களை நடைமுறைப்படுத்த உதவியாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது நெறிப்படுத்தல் சிந்தனை:

பொதுநன்மை குறித்து எமது செயற்பாடுகளைக் கட்டமைக்கக் கூடிய வகையில் ஊடக அறிவூட்டல் என்பது, மனித சமத்துவம் சமபொருளாதாரப் பகிர்வு, இதனை நடைமுறைப்படுத்தும் அரசியற்கலை, இந்த அரசியலில் சமூகநீதி பிழைக்காது காப்பதற்கான மனித விலக்கைத் தவிர்த்து, மனித உள்வாங்கலை ஊக்குவிக்கச் சக்தியளிக்கும் ஆன்மிகப் பலம் என்பவற்றை மேலும் மேலும் பலப்படுத்திட ஒவ்வொரு மனிதனது நாளாந்த மனச்சாட்சியையும் உருவாக்குவதற்கான முக்கிய மனிதச் செயற்பாடாக உள்ளது என்பதை மனதிருத்த அழைக்கிறது.  வலுவாண்மை என்பது பிறரது நடத்தையில் செல்வாக்குச் செலுத்துவதற்கு ஒருவருக்கு இருக்கும் ஆற்றல். இந்த ஒருவரது சிந்தனையில், நம்பிக்கைகளில், மனப்பாங்குகளில், விழுமியங்களில் மற்றும் நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்துவனவாக, இன்று, திரள்நிலை ஊடகம் (Mass Media) காணப்படுகின்றது. திரள்நிலை என்ற சொல்லே மக்களை எண்ணிட இயலாத அளவுக்குத் திரளாக, பெருவெள்ளமாக அணிதிரள வைக்கும் ஊடக ஆற்றலைக் குறிக்கிறது.

ஊடகம் என்ற சொல் அகச்சிந்தனையை அகத்தை ஊடறுத்து மாற்றும் அலைக்காட்சிகளும், அலைக்கேள்விகளும், அலைக்கலைகளும் ஒவ்வொரு நாளும் தகவல்களையும், தரவுகளையும் நம்பத்தக்க முறையில் மனதுள் புகுத்தி,  ஒருவருடைய மனச்சாட்சியை உற்பத்தி செய்யும் பேராற்றலாக உள்ளன என்பதைத் தெளிவாக்குகின்றன.  இதனால் இன்றைய மனிதன் உற்பத்தி செய்யப்பட்ட மனச்சாட்சியின் உந்துதலில் தனது சிந்தனையைப் புறம் தள்ளிவிட்டுத் திரள்நிலைச் சமுதாயமாக ஊடகத்தின் பின்னே அணி திரள்கிறான் என்பது வெளிப்படையான உண்மை. ஆதலால் ஊடகம் மனித வாழ்வில் உணவு உயிருக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உயிரின் சமூக இருப்புக்கு ஊடகம் முக்கியமானதாகிறது. இதனால் ஊடக அறிவூட்டல் என்பது ஒவ்வொரு மனிதனும் ஊடகங்களின் நோக்குகள் போக்குகள் குறித்த தெளிவாக அறிவுள்ளவனாக அவன் அதனைப் பயன்படுத்தி, தன் சமூகத்தேவைகளைப் பொதுக்கருத்துக் கோளத்துள் முன்வைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாக வாழ, ஊடக அறிவூட்டப்படல் மிக மிக முக்கியம்.

ஈழத்தமிழர்கள் இன்று தங்களுக்கான தனித்துவமும், தரத்திறனும், பொறுப்புணர்வும், உண்மைத்தனமும், நேர்மைப்போக்கும், இலாபநோக்கமற்ற ஊடகத்தை உருவாக்கினாலே அவர்களது சிங்கள பௌத்த நவகாலனித்துவ சிறிலங்கா அரசின் இனஅழிப்பு அரசியலுடன் கூடிய படைபல ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான அனைத்துலகப் பலத்தைத் தமதாக்கிக் கொள்ள முடியும். இதற்கான ஊடக சிந்தனை வளர்ப்பு மையம், ஊடக அறிவினை வளர்க்கக் கூடிய ஊடக அனுபவமுள்ள ஈழத்தமிழ் ஆற்றலாளர்களால் உருவாக்கப்படல் காலத்தின் தேவையாக உள்ளது. இதற்கான மதியும் நிதியும் புலம்பதிந்த ஈழத்தமிழர்களால் ஒற்றுமையான புத்திஜீவிகள் இணைப்பாலும் சமூக மூலதன வளர்ச்சியாலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை ஈழத்தமிழ் புலம்பதிந்த சமுதாயம் உடனடியாகக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது நெறிப்படுத்தலை எடுத்து நோக்கின்:

மனித முன்னேற்றம் சந்திக்கக் கூடிய புதிய புதிய சவால்களை அவன் உருவாக்கக் கூடிய கருவிகளைக் கொண்டே அவனது மூளைவளத்தையும், உடற்பலத்தையும்  களையாது இளையாது பாதுகாப்பதன் வழி எதிர்கொள்ளல் வேண்டும் என்பதனை அது வலியுறுத்துகிறது.  எனவே இதற்கான தொழில்நுட்பப் பொறிமுறைகளை வளர்த்துக் கொள்ளல் காலத்தின் தேவையாகிறது. ஈழத்தமிழர்கள் தொழில்நுட்ப அறிவும் வாழ்நாள் முழுதும் வளர்க்கப்பட வேண்டிய கல்வி என்பதை மனதிருத்தி, தாயகத்திலும், தமிழகத்திலும், புலத்திலும் உள்ள தமிழர்களின் தொழில்நுட்பப் பேரெழுச்சியை ஒவ்வொரு துறையிலும் ஒருங்கிணைத்து தமிழர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான உலக மையமொன்றை நிறுவுதன் வழி இதனை இலகுபடுத்த இயலும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது நெறிப்படுத்தலை ஆராய்ந்தால்:

மனித அறிவெழுச்சி, அறிவார்ந்த அணுகுமுறைகள், அறிவியல் வளத்தைப் பெருக்குகையில் தோற்றம் பெறும் உயிர்களுக்கும், அவை உயிர் வாழ்தலுக்கான இயற்கைக்கும் பேரழிவுகளை ஒரு சில வினாடிகளுக்குள் ஏற்படுத்தக் கூடிய அணுவாயுத உற்பத்தியையும், பயன்பாட்டையும் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதாக அது அமைகிறது.  இதற்கு அணுவாயுதத்தை வளர்க்கக் கூடிய நாடுகளுக்கு இடையான போர்கள் மட்டுமல்ல, சொந்த மக்களின் பாதுகாப்பான அமைதிக்கும், வளர்ச்சிக்கும், ஆயுதபடைபலம் கொண்டு இனங்காணக் கூடிய அச்சத்தைத் தோற்றுவித்து நாட்டுக்குள்ளேயே போர் நடத்தும் அரசுக்களை ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் எடுத்து, அத்தகைய அரசுக்களை அனைத்துலகச் சட்டங்களைச் செயற்படுத்துவதன் வழி ஒழுங்காற்றல் செய்தல் வேண்டும்.

ஈழத்தமிழர்கள் இவ்விடயத்தில் சிறிலங்கா என்னும், தங்களை ஆளும் சட்டத்தகுதியை 22.05.1972 முதல் இழந்துவிட்ட செயலிழந்த அரசு என்பதைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். சிறிலங்காப் பாராளுமன்ற ஒற்றையாட்சியை ஈழத்தமிழர்கள் ஏற்கின்றார்களா என்ற அனைத்துலக கண்காணிப்புடன் கூடிய குடியொப்பம் ஒன்றின் மூலமாக மட்டுமே சிறிலங்கா தன்னை மீளவும் ஈழத்தமிழ் மக்களை ஆளும் உரிமை தனக்குள்ளதென்பதை மீள்நிரூபிக்க முடியும். தெற்காசியாவில் தொடர்கின்ற இந்த ஈழத்தமிழர்களை ஆயுதபடைபலம் கொண்டு இனங்காணக்கூடிய அச்சப்படுத்தி ஆளும் சிறிலங்கா அரசு குறித்து ஐக்கிய நாடுகள் சபை அக்கறையற்று இருக்கும் ஒவ்வொரு நாளிலும் இந்துமா கடல் அணுவாயுதப் போர் ஒன்றைச் சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்லும்.

இன்று வரை சிறிலங்காவுக்கு ஆயுத விற்பனை செய்து பணம்பண்ணும் நாடுகள் நாளை அணுவாயுதங்களையும் கொடுத்துப் பணம் பண்ண மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதிலும் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான இராணுவத்தளமாக இலங்கைத் தீவை மாற்றாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் இந்தியா ஈழத்தமிழர்கள் வழியான தனது பாதுகாப்பை உறுதி செய்யும் மூலோபாயங்களில் இருந்து விலகி சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் பௌத்த – இந்துத்துவ இணைப்பின் 2500 ஆண்டுகால மீள்புதுப்பிப்பு என்னும் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதன் வழி, சிறிலங்காவுடன் நேசஉறவு கொள்ளுதலை, இஸ்லாமியப் பேரரசை ஈரான் -பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் கூட்டுறவு வழியாக முன்னெடுத்தல் என்னும் எதார்த்த நிலை வளர்ச்சி, இலங்கையில் ஏற்படுத்தக் கூடிய எதிர்வினைகள் முறியடித்து விடும்.

இதனால் அணுவாயுதக் குறைப்பு தெற்காசியாவில் பலம்பெற வேண்டுமானால், ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையை இந்தியா கையாளும் முறை அதில் முக்கிய பங்கை வகிக்கும் என்பதைப் புலம்பதிந்து வாழும் தமிழர்கள் இந்தியாவுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தெற்காசியாவில் இருந்து மூன்றாவது உலகப் போர் மூள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான ஈழத்தமிழ் மக்களது இருப்பையும், பாதுகாப்பான அமைதியையும் உறுதி செய்யக் கூடிய தீர்வு என்பது அணுவாயுத குறைப்பு என்னும் பாதுகாப்பான உலக அமைதி என்னும் மனிதத்தேவைக்குப் பலம் அளிக்கும் ஒன்றாக அமையும் என்பதைப் புலம்பதிந்த தமிழர்கள் தங்கள் அரசுக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

1 COMMENT

  1. […] ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்ற நோக்கு 1ஆம் 2ஆம் உலகப் பெரும்போர்களால் மக்கள் அனுபவித்த துன்ப துயர வாழ்வை மீண்டும் அனுபவிக்க எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாதென்பதாக உள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் தினமான அக்டோபர் 24 இல் ஒவ்வொரு ஆண்டும் மீள்நினைந்து மதிப்பிடல் ஐக்கிய நாடுகள் சபையின் கடமைப் பொறுப்பாகவும் உள்ளது.  […]

Leave a Reply

Exit mobile version