Tamil News
Home ஆய்வுகள் ஆப்கானிஸ்தானில் யாரை ஆதரிப்பது,யாரை எதிர்ப்பது? அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஆப்கானிஸ்தானில் யாரை ஆதரிப்பது,யாரை எதிர்ப்பது? அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை மொழியாக்கம்: ஜெயந்திரன்

அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை. ஆப்கானிஸ்தான்-யாரை ஆதரிப்பது திணறும் அமெரிக்கா: காபூல் விமான நிலையத்தில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமிய தேசத்திற்கு நெருக்கமானவர்களால் ஆப்கானிஸ்தானில் படுகொலைகளும் அழிவுகளும் மேலும் ஏற்படுத்தப்படாமல் தடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு,  இவ்வாறான மிகச் சிக்கலானதும், கடினமானதுமான போராட்டத்துக்கு அவர்களுக்கு உண்மையாகவே உதவிக்கரம் நீட்டக்கூடிய தரப்பினர் தலிபான்களே என்பது புலனாகின்றது.

இஸ்லாமிய தேசம் கொரசான் மாகாணம்  (Islamic State Khorasan Province (ISKP) – இந்தப் பெயர் உண்மையில் தற்போதைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பெரும் பகுதியைக் குறிப்பிட ஆரம்ப காலத்து இஸ்லாமிய பேரரசுகள் பயன்படுத்திய ஒரு பெயர் ஆகும். அந்தப் பெயர் கொண்ட இந்த அமைப்பு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பு நடக்கும் வரை ‘தோல்வியடைந்து விட்ட ஒரு அமைப்பாகவே’ இந்த அமைப்பு கருதப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த அமைப்பு ஒரு சில வெற்றிகளைப் பெற்ற போதிலும்,தலிபான்கள் மிகக் கடுமையாகப் போராடியதன் காரணத்தினால் ஈட்டப்பட்ட வெற்றிகள் அனைத்தையும் அவர்கள் பின்னர் இழந்து விட்டார்கள். போராட்ட களத்தினுள் ஒரு புத்தம் புதிய குழு நுழைவதை, அதுவும் அதிருப்தியடைந்த முன்னாள் தலிபான் கட்டளை அதிகாரிகள், பாகிஸ்தானியர்கள், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு குழு நுழைவதைத் தலிபான்கள் அறவே  விரும்பவில்லை.

தலிபான்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் காரணமாகவும், அமெரிக்க, மற்றும் ஆப்கான் அரசுகள் முன்னெடுத்த தாக்குதல்களின் காரணமாகவும், கிழக்கு ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த ஐஎஸ்கேபி நிலைகுலைந்தது. அப்பிரதேசத்தில் குறித்த அமைப்பு கொண்டிருந்த செல்வாக்கு நன்றாகக் குறைக்கப்பட்டு, ஈற்றில் வடகிழக்கு மாகாணத்தின் முன்னணிப் பிரதேசமான கூனாரில் (Kunar) உள்ள இரண்டு பள்ளத்தாக்குகளில் அவர்களில் பிரசன்னம் மட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும், இந்த வருடத்தில் இந்த அமைப்பின் மீது தலிபான்கள் பல தாக்குதல்களைத் தொடுத்த போதிலும், இந்தத் தளங்களிலிருந்து ஐஎஸ்கேபியை முற்றாக வெளியேற்ற தலிபான்களால் இயலவில்லை. வேறு பிரதேசங்களில் தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தலிபான்களுக்கு தற்போது இல்லாததன் காரணத்தால், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் கூடுதலான படைகள்  ஈடுபடுத்தப்பட்டு, மிக விரைவில் அவர்கள் முற்றாகவே அழிக்கப்படலாம்.

ஐஎஸ்கேபி அமைப்புக்கு இது ஒரு பாரிய அடியாக இருக்கின்ற போதிலும் அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கடமான சூழலை இது கோடிட்டுக் காட்டுகின்றது. ‘எனது எதிரியின் எதிரி எனது நண்பன்’ என்ற விதியே ஆப்கானில் இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆப்கானில் உள்ள எந்த சக்திகளுக்கு அமெரிக்கா எதிர்காலத்தில் ஆதரவு வழங்கப் போகின்றது என்பது இதிலே தான் தங்கியிருக்கிறது.

ஆப்கானிலே தமது செல்வாக்கைத் தக்க வைப்பதற்குத் தேவைப்படுகின்ற வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க, யார் முன்வருகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, யாரை அவர்கள் ஆதரிக்கப் போகின்றார்கள் யாரை அவர்கள் எதிர்க்கப் போகின்றார்கள் என்பது தங்கியிருக்கிறது. ஆனால் ஐஎஸ்கேபி அமெரிக்காவின் எதிரி என்றால் தலிபான்கள் அமெரிக்காவின் நண்பர்களா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

அமெரிக்கா, தலிபான்கள், இரு சாராருக்குமே ஐஎஸ்கேபி எதிரி என்பது கண்கூடாகத் தெரிகிறது. வளைகுடாவில் இருக்கின்ற வகாபி (Wahabi) வகை இஸ்லாம் சமயத்தவர்களதும், ஒசாமா பின்லேடன் போன்ற உலகளாவிய பார்வையைக் கொண்டவர்கள் போன்றவர்களினதும் செல்வாக்குகளுக்கு உட்பட்ட சலாவி ஜிகாதிவாதிகளின் (Salafi-jihadist) கடும் போக்கான கொள்கைகளை ஐஎஸ்கேபியினர் பின்பற்றுகிறார்கள்.

இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய கலிபேற்  (caliphate) என அழைக்கப்படும் முஸ்லிம் இராச்சியம் (nation of Islam) ஒன்றை நிறுவுவதே அவர்களது இறுதி இலக்கு ஆகும். ஐஎஸ்கேபி இன் கொள்கையைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய நாடு ஒவ்வொன்றும் தமது சொந்த வரையறைகளை இந்த இராச்சியத்தினுள் இழந்து விடும். தலிபான்களது மிதவாதக் கொள்கையின் காரணமாகவும் மேற்குலகுடன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் காரணமாகவும், தமது இஸ்லாமியக் கொள்கைகளை ஏற்கனவே கைவிட்டுவிட்டு விட்டவர்களாகத் தலிபான்களைக் கருதுகின்ற ஐஎஸ்கேபியினர், தேசியவாதிகளாகவே அவர்களை நோக்குகின்றனர்.

அமீரகம்

இனவாத, வகுப்புவாத ஈடுபாடுகளை ஓரளவு கொண்டிருந்த போதிலும்,  நாடிய அரசில் (nation state) தாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை தலிபான்கள் ஒருபோதுமே மறைக்கவில்லை. ஆப்கானின் எல்லைகளுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் எந்தவிதமான பயங்கரவாதத் தாக்குதலிலும் அவர்கள் தொடர்புபட்டிருக்கவில்லை. ஒரு இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்குவதும் அவர்களது இலக்கு அல்ல. அமீரகம் (emirate) என்று அழைக்கப்படும் அரசுக்காகவே அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் உருவாக்க முயல்கின்ற ஒன்றிணைந்த இஸ்லாமிய வல்லரசுடன் (unified islamic super power) ஒப்பிடும் போது இது மிகக் குறைவான முன்மொழிவு ஆகும்.

ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் ஐஎஸ்கேபியின் தலைமையால் வழங்கப்பட்ட 20 மில்லியன் டொலர்களினால் புத்தூக்கம் பெற்ற அந்த அமைப்பு, தலிபான்களில், இடைப்பட்ட நிலையில் இருக்கும் தலைவர்களைப் படுகொலை செய்வது அவர்களது தாக்குதல்களின் முக்கிய இலக்காக அமைந்திருக்கிறது. அமெரிக்காவை எதிர்ப்பதும் அத்துடன் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களாகத் திகழுகின்ற தலிபான்களே அங்கு முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கான தனிச்சூத்திரதாரிகள் என்ற பார்வையை மாற்றுவதுமே, காபூல் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் முக்கிய நோக்கமாகும்.

ஐஎஸ்கேபி அமைப்பை ஆழமாக அறிந்தவர்களைப் பொறுத்தவரையில், அதாவது அவர்களது கட்டளை  அதிகாரிகளின் பெயர்களை அறிந்தவர்களுக்கு, அந்த அமைப்புக்கு நிதி வழங்குவோரை இலகுவாக அடையாளங்காண முடியும். அந்த அமைப்புக்கு ஆயுதங்களை வாங்கிக் கொடுப்பவர்களைக் கூட அவர்களால் இனங்காண முடியும். காரணம் என்னவென்றால், கடந்த சில வாரங்களாகத் தலிபான்களிடமிருந்தே அவர்கள் ஆயுதங்களை வாங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இதற்கு முற்றிலும் எதிர்மாறான விதத்தில், அமெரிக்கா தனது புலனாய்வு வலையமைப்புகளையும் ஆயுதங்களையும் செயலிழக்கச் செய்து, தனது பணியாளர்களை வெளியேற்றி, ஆப்கானில் தமக்கு உதவியவர்களுக்கு ஒன்றில் அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கியிருக்கிறது; அல்லது அவர்களைப் பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அதிபர் பைடனின் வார்த்தையில், “அது தற்போது வெளியே இருந்து கொண்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளும் தமது ஆற்றலை நம்பியிருக்கிறது.”

ஆனால் ஆப்கானுக்கு அருகில் உள்ள நாடுகள் எதுவுமே இந்த முயற்சியில் அமெரிக்காவுக்கு உதவ ஆர்வமற்று இருப்பதையே அவதானிக்க முடிகிறது. தூரத்தில் இருந்து கொண்டு ஆப்கானில் புலனாய்வை மேற்கொள்ளும் அமெரிக்காவின் ஆற்றலுக்கு ஒரு வரையறை உண்டு. களத்திலே நின்று கொண்டு தகவல்களை வழங்குகின்ற புலனாய்வாளர்களின் செயற்பாட்டுடன் இதனை ஒருபோதுமே ஒப்பிட்டுவிட முடியாது.

இது இப்படியிருக்க, பன்னாட்டு அங்கீகாரத்தை தாம் எதிர்பார்ப்பதாக  தலிபான்கள்  வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனை அடைவதற்கு, தமது அடிப்படையான கொள்கைகளுடன் சமரசம் செய்ய எவ்வளது தூரம் அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது, இரு சாராருக்கும் எதிராக இருக்கும் ஒரு பொது எதிரியை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் ஒருவர் ஒருவருக்கு ஒத்துழைப்பை வழங்கும் வாய்ப்பு நிச்சயமாகச் சாத்தியமானதாகவே தெரிகின்றது.

இரகசிய புலனாய்வுப் பரிமாற்றம் இதில் ஒரு முக்கிய விடயமாகும். எடுத்துக்காட்டாக தலிபான்கள் வழங்குகின்ற புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, உயர்மட்டத்தில் இருக்கின்ற ஒரு ஐஎஸ்கேபி கட்டளை அதிகாரியைக் கொல்வது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் ஓர் ஒழுங்கு ஆகும்.

பாதுகாப்பு அதிகாரிகள், 7000 மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு, மனிதாபிமானம் அற்ற இப்படிப்பட்ட ஓர் அரசுடன் இவ்வாறான உடன்படிக்கைகளை முன்னெடுப்பதில் பொதிந்திருக்கும் அறநெறித்தன்மை தொடர்பான கேள்விகளுக்கு விடை காண்பது என்பது மிகச் சவாலான விடயமாகும். ஒரு குறிப்பிட்ட நாட்டில் நிலைகொண்ட பின்னர் அந்த நாட்டை விட்டு ஒரு கட்டத்தில் வெளியேறும் போது, அதற்குப் பின்விளைவுகள் உண்டு என்பதையும் அக்குறிப்பிட்ட நாட்டின் செயற்பாட்டு நடைமுறைகளுக்கான விதிமுறைகளை அங்கு வாழும் மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்பதையும் அமெரிக்கா தற்போது மிகத் தெளிவாகவே கண்டுணர்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது தொடர்பாக மிகக் கடினமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு வோஷிங்டன் தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.

நன்றி: த காடியன்.கொம்

Exit mobile version