Tamil News
Home செய்திகள் 5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மன்னார் மக்கள்

5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மன்னார் மக்கள்

மன்னார் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளிமுனைக் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, குறித்த கிராமத்தில் அமைக்கப்படவுள்ள குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்தை உடன் நிறுத்த கோரி பள்ளிமுனை கிராம மக்கள் இன்று மன்னார் மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளிமுனை கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு மத்தியில் 5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இரவோடு இரவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த 5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதனால் 5 G காந்த கதிர் வீச்சினால் சரும நோய்கள், புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குறித்த கோபுரத்தில் கமரா பொருத்தப்படுவதால், எங்களுடைய தனிப்பட்ட அன்றாட வாழ்க்கை செயற்பாடுகள் பாதிப்படையவும் வாய்ப்புகள் உள்ளது. சுற்றுப்புற சூழல் இதனால் பாதிக்கப்படுகின்றது.

குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு சுற்றுச் சூழல் அதிகார சபையின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

எனவே குறித்த 5 G தொலைத் தொடர்பு கோபுரத்தை எமது பகுதியில் அமைப்பதற்கு பள்ளிமுனை கிராம மக்களாகிய நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம்.

எனவே இதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றுக் காலை 6 மணியளவில் குறித்த பகுதியில் 5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தென்பகுதியிலிருந்து வந்த சிலர் மக்களின் எதிர்ப்பையடுத்து பணிகளை கைவிட்டு சென்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version