Home செய்திகள் யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிப்பு -புதிய தகவல்களுடன்…

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிப்பு -புதிய தகவல்களுடன்…

யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

WhatsApp Image 2021 01 08 at 10.43.59 AM யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிப்பு -புதிய தகவல்களுடன்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இன்று இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

 அங்கு மேலும் இரண்டு நினைவுதூபிகளை இடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களும், மாணவர்கள் தரப்பும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ்  மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி 2019இல் மாணவர்களினால் அமைக்கப்பட்டது.

இதேபோல, 2018இல் அமைக்கப்பட்ட பொங்கு தமிழர் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி என மேலும் இரு நினைவு தூபிகள் அந்த வளாகத்தில் உள்ளன.

இந்த நிலையில், இலங்கை போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபிகள் விளங்கி வந்த நிலையில், அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் முகங்களை முழுமையாக மூடிய இராணுவ அணி மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று அச்சுறுத்துகின்றது.

https://www.facebook.com/watch/live/?v=421687645549360&ref=watch_permalink

அத்துடன் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை தொடர்கின்றது.

பல்கலையின் முன் எண்ணிக்கையில் மிக குறைவானவர்களே எதிர்த்து குரல்கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.

நீதிமன்ற உத்தரவை பெற்று, யாழ் பல்கலை வளாகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. மேலும் பல்கலைகழகத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி வெளிவாயில் பூட்டப்பட்டுள்ளது. அதன் நிர்வாகமும் மாணவர்களை உள்நுழைய அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அந்த பிரதேச மக்கள், மாணவர்கள், வெளியிட மக்கள், அரசியல் தரப்பினர் அங்கு குவிந்து வருகிறார்கள்.

Exit mobile version