Tamil News
Home செய்திகள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சவாலானதும் சிக்கலானதும் ஆகும் – ரணில் விக்கிரமசிங்க

மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சவாலானதும் சிக்கலானதும் ஆகும் – ரணில் விக்கிரமசிங்க

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது மிகவும் சிக்கலான விடயம் என்பதுடன் சவால் மிக்கதுமாகுமென ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில், கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“எம்.சி.சி. ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெறவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தற்போது இல்லாமல் போயுள்ளன. மிலேனியம் சவால் பணிப்பாளர் சபை இதனை உத்தியோகப்பூர்வமாகவே அறிவித்து விட்டது. கடனற்ற வெறும் நிதி உதவியான 89 பில்லியன் ரூபா இலங்கைக்கு இனி கிடைக்காது.

குறித்த எம்.சி.சி ஒப்பந்தததுக்கான கால எல்லை நீடிக்குமாறு ஏற்கனவே இரு முறை கோரப்பட்டது. மூன்றாவது முறையும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. ஆனால், தாங்கள் நிராகரித்து விட்டதாகவே தற்போது அரசாங்கம் கூறும். எவ்வாறாயினும் அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்துக்கு தீர்க்கமான காலப்பகுதியாக அமையும்.

எனவே, புதியதொரு பயணமொன்று நாம் செல்ல வேண்டியதுள்ளது. எம்முடன் இருப்பவர்களைப் பாதுகாத்தும் எம்மைச் விட்டு சென்றவர்களைக் கைவிட்டும் செல்ல நாம் தயாராக வேண்டும். கடந்த காலங்களை நினைத்து வேதனைப்படுவதால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எனவே அனைத்திற்கும் தயாரானவர்களாக இருக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலில் புதிய முகங்களை போன்று பழைய முகங்கள் பலவும் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும். தேர்தலுக்கு செலவிட வேட்பாளர்களிடம் பணமிருக்காது. அத்துடன் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது சிக்கலான சவால்மிக்கதான விடயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version