Home செய்திகள் மயிலத்தமடுவுக்கு மூன்று நாடுகளின் துாதுவா்கள் விஜயம் – நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனா்

மயிலத்தமடுவுக்கு மூன்று நாடுகளின் துாதுவா்கள் விஜயம் – நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனா்

3 7 3 மயிலத்தமடுவுக்கு மூன்று நாடுகளின் துாதுவா்கள் விஜயம் - நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனா்மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தியுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 174 நாட்களாக தங்களது மேய்ச்சல் தரை நிலங்களை அத்து மீறிய பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளிடம் இருந்து மீட்டு தருமாறு கோரி போராட்டம் நடத்திவருகின்றனர். பண்ணையாளர்களின் கோரிக்கைகளுக்கு மூன்று நீதிமன்றங்களின் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான தீர்வை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார், இது குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடங்கி பேசப்பட்டது ஆனால் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் மேற்படி விவகாரம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மூன்று நாட்டின் தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடியது முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

அதுவும் இலங்கையின் நல்லிணக்கம், மீள்நிகழாமை பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வரும் தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து நாட்டு தூதுவர்கள் பண்ணையாளர்களை சந்தித்தமை எதிர்காலத்தில் இந்த பிரச்சினை இலங்கைக்கு சர்வதேச ரீதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஜஸ்டின் பிளோட், ஜப்பான் தூதுவர் மிஷ்கோசி கிடாகி, தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்லி எட்வின் சாள்க் ஆகியோரே நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது பண்ணையாளர்களையும் சந்தித்திருந்தனர்.

Exit mobile version