Tamil News
Home செய்திகள் மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் வரவேண்டும் என்றே குறிப்பிட்டேன் – சுமந்திரன்

மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் வரவேண்டும் என்றே குறிப்பிட்டேன் – சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வரும் மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர் என தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள் தான் இருக்கின்றன. ஒன்று – இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றிய தீர்மானங்களினால் எங்களுக்குப் பெரிய நன்மையாக ஏதும் வந்து விடவில்லை. அதனால் இனிமேல் இதையே முன்கொண்டு நடத்துவதில் அர்த்தமில்லை. ஆகையினால் இதிலும் காட்டமான, தீவிரமான நடவடிக்கை அவசியம். அதற்கு உதாரணமாக – முன்மாதிரியாக – சிரியாவிலும், மியன்மாரிலும் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறைகளைக் காட்டி, ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது – இந்த விவகாரம் ஒரு சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஒரு புதுத் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும். இது இரண்டும்தான் அதில் உண்டு, அதில் காலநீடிப்பு என்றோ, கால அவகாசம் என்றோ, அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றுவது என்றோ எதுவுமேயில்லை.

ஆனால், இவர்கள் இருவரும் நான் அப்படி ஒரு பிரேரணை வரைவைத்தான் முன்வைக்கின்றேன் என்று வேண்டுமென்றே விமத்தனமான, பொய்யான பிரசாரம் ஒன்றை முன்வைக்கின்றனர். அதுதவறு” என்றார் எம்.ஏ.சுமந்திரன்.

Exit mobile version