Home ஆய்வுகள் மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ்

மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ்

77 மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி - வல்வை ந.அனந்தராஜ்இந்திய அரசின் அடாவடித் தனங்களுக்கு எதிராக இரண்டு சாதாரண அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீரை மட்டுமே அருந்தி, 31 நாட்கள் ஒரு துண்டு உணவு கூட அருந்தாது நோன்பிருந்து, சாவடைந்த அன்னை பூபதியின் நினைவுநாளான இன்றைய நாள் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்“ என்று உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகின்றது.

மட்டக்களப்பு கிரானில், 1932 இல் பிறந்த கணபதிப்பிள்ளை பூபதியம்மா, இந்திய இராணுவம் தமிழீழ தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலப் பகுதியில், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராகத் தீரமுடன் இயங்கி வந்ததால், மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் அவரது பெயர் புகழ்பெற்று விளங்கியது.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் பாரிய யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் எதிராக வடக்குக் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சாத்வீகமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொணடிருந்தன.

தமிழ் மக்களுக்கு எதிராக, இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டக்களப்புத் தமிழ் மக்கள் திரண்டெழுந்தபொழுது, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அன்னையர் முன்னணி தோற்றம் பெற்றது. அந்தவகையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுககக்கூடிய பாரிய விருட்சமாக அன்னையர் முன்னணி வளர்ந்து வந்ததைக் கண்ட இந்திய இராணுவத் தளபதிகள் அந்த அமைப்பைத் தடைசெய்வதற்கும், அதில் செயற்பட்டுக் கொண்டிருந்த பெண்களைக் கடத்திக் கொண்டு செல்வதற்கும் பல முயற்சிகளை எடுத்துவந்தனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில், பலமுனைகளில் அறவழிப் போராட்டங்களை நடத்துவதற்கு மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி தீர்மானித்தது. இந்த அறவழிப் போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் அவர்கள் இந்திய அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இவை இரண்டுமே சாதாரண மனிதாபிமானம் மிக்க கோரிக்கைகளாகவே இருந்ததாகச் சர்வதேச அமைப்புகளே அந்தநேரம் சுட்டிக் காட்டியிருந்தன. அதில், ஆகக் குறைந்த கோரிககைகளாக,

1. இந்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை நிறுத்துவதற்கான யோசனையாக, தமிழீழ விடுதலைப் புலிகளுடன், உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. இந்திய இராணுவத்தின் கோரப்பிடியில் இருந்தும் தமிழ் மக்களைக் காக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் குதிப்பதற்காக பல நூற்றுக் கணக்கான பெண்கள் முன்வந்தனர். இவ்வளவு பெருந்தொகையான பெண்கள் அறவழிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக வந்ததைக் கண்டதும், அன்னையர் முன்னணியினரின் போராட்ட உத்வேகம் மேலும் அதிகரித்தது. இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இவ்வளவு பெண்கள் துணிவுடன் களத்தில் இறங்கியதால் இதற்கான சரியான முடிவை எடுக்க முடியாத நிலையில் இருந்த அன்னையர் முன்னணி இறுதியில் குலுக்கல் முறையில் யாராவது ஒருவரைத் தெரிவுசெய்து சாத்வீகப் போராட்டக் களத்தில் இறக்குவது என்று முடிவெடுத்தது.

இந்தத் தெரிவின் மூலம் முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அன்னம்மா டேவிட் அவர்கள் 1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் அவரது உண்ணா நோன்புப் போராட்த்தைக் கண்டு அச்சமடைந்த இந்தியப் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்த அன்னம்மா டேவிட் அவர்களைத் திடீரெனக் கடத்திச் சென்றதால், அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அன்னையர் முன்னணியினரின் முதலாவது சாத்வீக முயற்சியே தோல்வியைத் தழுவியபோதும், அன்னையர் முன்னணியினர் தொடர்ந்தும் தமது முயற்சியை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் தான் பூபதியம்மாள் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரையான உண்ணா நோன்பினை ஆரம்பித்தார். அன்னம்மா டேவிட் அவர்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரம் பூபதி அம்மாளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டதுடன், பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

“நான் எனது சுயவிருப்பின் பேரில் உண்ணா விரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டே சாகும் வரையான உண்ணா நோன்பினை ஆரம்பித்தார். இவர் நீர் மட்டும் அருந்தி சாகும்வரையான உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கியதும், இடையிடையே பல தடவைகள் தடங்கல்களை இந்திய இராணுவத்தினர் மேற்கொண்டனர். அவரையும் கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அன்னை பூபதி இருந்த மேடையைச் சுற்றிவர ஆயிரக்கணக்கான பெண்கள் சூழ்ந்து நின்றதால், இந்தியப் படையினரின் முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனால் உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பத்துப் பிள்ளைகளில் சிலரையும், இந்திய இராணுவம் கைதுசெய்தது.

இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அன்னை பூபதி உறுதியாக இருந்ததால், அவரது சாத்வீகமான போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட இரண்டு அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினால், தான் சாகும் வரையான உண்ணாநிலைப் போரட்டத்தை நிறுத்துவதாக இந்திய அரசுக்கு அறிவித்தபோதும், அன்னையர் முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உதாசீனம் செய்த இந்திய அரசு, அன்னை பூபதியை சாவடையச் செய்வதிலேயே குறியாக இருந்ததால், அவர் உண்ணாநோன்பினை ஆரம்பித்து, சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று மட்டக்களப்பு மாநகரின் மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் உணவே அருந்தாது உயிர் நீத்தார். அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் வானமே பிளந்து வீழ்வது போல் ஓவென்ற அழுகுரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

உண்ணாநோன்பு, உப்பு சத்தியாக்கிரகம், அந்நியரின் உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் நிராகரித்தல் போன்ற சாத்வீகமான போராட்ட வடிவங்களை உலகுக்குக் கற்றுக் கொடுத்த இந்தியாவின் முகத்திரை அன்னை பூபதியின் சாவின் பின்னர் மீண்டும் கிழித்தெறியப்பட்டது.

பிரித்தானிய அரசுக்கு எதிராக இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் உண்ணா நோன்பினை மேற்கொண்ட பொழுது, ஜனநாயக ரீதியில் அப்போது செயற்பட்ட பிரித்தானிய அரசு காந்தியைச் சாக விடாமல் காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு தடவையும் காந்தியின் கோரிககைகளை ஏற்று உடனடியாகவே நடைமுறைப்படுத்தித் தன்னை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இனங்காட்டிய பிரித்தானிய அரசின் வழியைக் கூட இந்திய அரசு பின்பற்றாதது எல்லோருக்குமே ஏமாற்றத்தைத் தந்தது.

ஆனால் அகிம்சையை உலகுக்குப் போதித்த இந்தியாவின் பிதாமகனாகக் கணிக்கப்படும் காந்தியடிகள் சாகாமலேயே உண்ணா நோன்பு இருந்து மகாத்மா என்று அழைக்கப்படும் நிலையில் சாதாரண நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாது பன்னிரு நாட்களில் உலகமே பார்த்திருக்க சாவடைந்த தியாகி திலீபனை அல்லது நீரை மட்டுமெ அருந்தி, 30 நாட்களில் சாவடைந்த அன்னை பூபதியின் மரணம், இந்திய அரசுக்குமட்டுமல்லாது, தனது சாத்வீகமான போராட்ட வடிவங்களினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மகாத்மா காந்தி அடிகளுக்குமே பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது.

Exit mobile version