Home ஆய்வுகள் பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம்

பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம்

amirthalingam பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? - பேராசிரியா் அமிா்தலிங்கம்
பேராசிரியா் அமிா்தலிங்கம்

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல்.

கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன?

பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.

அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும்.

பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா்.

கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன?

பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள்.

இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை.

இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது.

என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா?

பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது.

கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?

பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா்.

பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள்.

தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.

அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன.

இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

Exit mobile version