Tamil News
Home செய்திகள் பாதுகாப்பற்ற நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்;விளைவுகளுக்கு அரசே பொறுப்பு

பாதுகாப்பற்ற நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்;விளைவுகளுக்கு அரசே பொறுப்பு

“எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும், கம்பனிகளும் ஏற்கவேண்டும்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.

பதுளை ஹாலிஎல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி இன்று கதைக்கப்பட்டாலும் அவர்களுக்கான உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்டுவருகின்றன. 1000 ரூபாவில் கூட இறுதியில் ஏமாற்றமே ஏற்பட்டது.

இன்று கொரோனா நிவாரணத் திட்டங்களிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரச திட்டங்கள் தோட்டத் தொழிலாளர்களை சென்றடையவில்லை.

சுகாதார நடைமுறைகள் தொடர்பில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது. சில தோட்டங்களுக்கு நான் நேற்று விஜயம் மேற்கொண்டேன்.

தொழிலாளர்களுக்கு இன்னும் முகக்கவசம் வழங்கப்படவில்லை. எவ்வித சுகாதார ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படாமலேயே கம்பனிகள், வேலை வாங்கிக்கொண்டிருக்கின்றன.

´கொரோனா´வின் தாக்கம்பற்றி எமது சொந்தங்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை. வாழ்வாதாரத்துக்காக நாட் சம்பளம் கிடைத்தால்போதும் என வேலைக்குசெல்கின்றனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நோய் பரவுமேயானால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும், பெருந்தோட்டக் கம்பனிகளும் ஏற்கவேண்டும். அதேபோல் தொழிலாளர்கள் தமக்கான பாதுகாப்பு குறித்து தாமாக சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.

கொரோனா ஒழிப்பு திட்டம் தொடர்பாக அரசாங்கத்துக்கு கோடி கணக்கில் பணம் வந்து குவிந்துள்ளது. அந்த பணம் எங்கே? அந்த நிதியைப் பயன்படுத்தி பெருந்தோட்டத்துறையின் சுகாதாரம் கட்டியெழுப்படவேண்டும். கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்துக்குள் மலையகத்தையும் உள்வாங்குங்கள்.

பெருந்தோட்டத்துறையில் 2 லட்சத்து 43 ஆயிரம் 720 பேர் வேலைசெய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் 5000 ரூபா வழங்கப்படவெண்டும். ஆனால், 5000 ரூபாவிலும், நிவாரணத் திட்டங்களிலும் பாகுபாடு காட்டப்படுகின்றது. தொழிற்சங்க அரசியல் நடத்தப்படுகின்றது. சில அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர். முறைப்பாடுகள் குவிந்தவண்ணமுள்ளன. மக்களுக்காக நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராகவுள்ளேன்.” – என்றார்.

Exit mobile version