Home ஆய்வுகள் பண்பாட்டு இனப்படுகொலை என்பதற்கு வலுவான சான்று – ஜெரா

பண்பாட்டு இனப்படுகொலை என்பதற்கு வலுவான சான்று – ஜெரா

ஓர் இனத்தின் பண்பாட்டுக்கூறுகளைத் திட்டமிட்ட ரீதியில் முற்றாக அழித்தல், சிதைவுக்குட்படுத்தல், மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் பண்பாட்டு இனப்படுகொலை என வரைவிலக்கணம் செய்யப்படுகின்றது. நன்கு விழுதெறிந்த ஆலமரமொன்றை அடியோடு வெட்டுவதற்கு, முதலில், அதன் விழுதுகளை அறுப்பதைப் போன்றதே இந்தப் பண்பாட்டுப் படுகொலை. அந்தவகையில் ஓர் இனம் கொண்டிருக்கும் பண்பாட்டுக்கூறுகளான மொழி, சடங்குகள், நம்பிக்கைள், விழுமியங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் கூட்டாகவோ, ஒவ்வொன்றாகவோ அழித்தலைப் பண்பாட்டுப் படுகொலையாகக் கொள்ளமுடியும்.

Tamil conference memorial பண்பாட்டு இனப்படுகொலை என்பதற்கு வலுவான சான்று - ஜெராஅப்படி நோக்கினால், ஈழத்தமிழினத்தின் மிக முக்கிய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று அவர்கள் கொண்டிருக்கும் செழுமைமிகு தமிழ் மொழி. சிறீலங்கா என்னும் தீவு தனிச் சிங்களத் தேசமாக உருக்கொள்ளத் தொடங்கியபொழுதினில், அது மேற்கொண்ட முதற்செயற்றிட்டம், தொன்மையும் – செழுமையும் மிக்க தமிழ் மொழியை புறக்கணித்தமைதான். 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா அரசு கொண்டு வந்த தனிச்சிங்கள சட்டமானது, இத்தீவில் தமிழ் பண்பாட்டு இனப்படுகொலையைத் தொடக்கி வைத்தது. அதன் தொடர்ச்சியின் கோரமுகத்தினை 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டனர்.

எவ்வித அரசியல் கலப்புமற்று – அரசியல் நோக்கமுமற்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மாத்திரம் செயற்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமானது, தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியின் பயனால 1964 ஆம் ஆண்டிலிருந்து தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்திவருகின்றது. இதன் முதலாவது மாநாடு டில்லியில் இடம்பெற்றது. நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டு ஈழத்தின் யாழ்ப்பாண நகரில் இடம்பெற தீர்மானிக்கப்பட்டது. பேராசிரியர் வித்தியானந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவென இந்தியா, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், யப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் கலந்துகொள்ளவும், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கவும் தயாராயிருந்தனர்.

தமிழ் மொழியின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்த சிறீலங்கா அரசு இந்நிகழ்வுக்கு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வந்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழரசுக் கட்சிக்கும், அரசுக்குமிடையில் ஏற்பட்டிருந்த முரண்நிலையை சாட்டாகப் பயன்படுத்தி, மொழிசார் மாநாட்டைக் குழப்ப, நேரடியாகவும், மறைமுகமாகவும் திட்டங்களை வகுத்தது.

மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுவினர் அதற்கான அனுமதியினை சிறீலங்கா அரசிடம் கோரியபோது, “..ஜனவரியில் இடம்பெறவிருக்கும் தமிழாராய்ச்சி மாநாடு, அனைத்துலகத்தையும் தழுவியுள்ள, அனைவத்துலக மாநாடு என்பதால், அது இலங்கையின் தலைநகரிலேயே இடம்பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே அரசு அதற்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க முன்வரும்..” எனப் பதில் வழங்கினார் அப்போதைய  பாதுகாப்பு – வெளிவிவகார பதில் அமைச்சர்  லக்ஸ்மன் ஜெயக்கொடி.

பின்னர் அந்த விடயத்திலிருந்து அரசு பின்வாங்கியபோதிலும், வெளிநாட்டுப் வருகையாளர்களுக்கான வீசாவை வழங்க மறுத்துவந்தது. மாநாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் வருகையை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கட்டுப்படுத்தி, மாநாடு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வீசா அனுமதியை சிறீலங்கா அரசு வழங்கியது.

அடுத்தடுத்த சந்ததியினருக்கும் தமிழ் மொழியின் சிறப்பும், தமிழாராய்ச்சி மாநாட்டின் முக்கியத்துவமும் சென்றுசேரும் நோக்குடன் மாநாட்டுக் குழுவினர் பாடசாலை மாணவர்களுக்கான கொடிவாரத்தினை ஆரம்பித்தனர். அந்தக்  கொடியினைப் பாடசாலை மாணவர்கள் யாரும் வாங்கி அணியக்கூடாதென தடைசெய்தது சிறீலங்கா கல்வி அமைச்சு.

சமநேரத்தில் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், உள்நாட்டுப் பத்திரிகைகள் மூலமாகவும், யாழ்ப்பாணத்தில் கொலரா நோய் பரவல் அதிகரிப்பதால், நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குழுவினர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களால், பலர் தம் பதவிகளைத் துறந்துள்ளதால், மாநாடு இடம்பெறாது எனவும் பரப்புரைகளை அரசு முன்னெடுத்தது.

இந்தத் தடைகள் எதனையும் பொருட்படுத்தாமல், ஈழத்தமிழ் மக்கள் தமிழாராய்ச்சி மாநாட்டை சிறப்பிக்க திரட்சி பெற்றதை அறிந்த அரசு, தமிழ் துரோகிகளைக் களமிறக்கியது. நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலம், “தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு அறிஞர்களுக்கு வீசா வழங்கக்கூடாது. தமிழாராய்ச்சி மாநாட்டையே தடைசெய்துவிட வேண்டும்..”என முழங்கினார். அப்போதைய அரச எடுபிடியாகச் செயற்பட்டு பல்வேறு தமிழர் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த முன்னாள் யாழ்.நகர மேயர் அல்பிரட் துரையப்பா, இறுதிக்கட்ட குழப்பங்களில் ஈடுபட்டார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தையும், யாழ்.திறந்தவெளி அரங்கையும் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டுக்குழு அப்போதைய அல்பிரட் துரையப்பாவிடம் கோரியபோது, அதற்கு உடன்பட்டிருந்ததோடு, இடங்களை எடுத்துக்கொள்ளவும் அனுமதித்திருந்தார். பின்னர் மாநாட்டுக்குழுவின் தலைவர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களுடன் இடம்பெற்ற உரையாடலில், “பொதுமக்கள் அபிப்பிராயம் பற்றி நீர் எனக்குச் சொல்லுகிறீர். எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு பொதுமக்களுடன் உண்டு. நீர் இன்று வந்து, எனக்கு உபதேசம் பண்ணுகிறீர். திறந்தவெளி அரங்கு பொதுமக்களுக்குரியதாயினும், அதனை வழங்கும் அதிகாரம் எனக்குண்டு. நான் தரமாட்டேன். நீங்கள் வேறிடம் பார்த்துக்கொள்ளுங்கள்..”எனக் எக்காளமிட்டார்.

இத்தனைத் தடைகளையும் கடந்து நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு, யாழ்.நகரத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது. 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வானது 10 ஆம் திகதி முற்றவெளி அரங்கில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் திரண்டிருந்தனர். அப்போது என்ன நடந்தது என்பதை, மாணிக்கவாசகம் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த புங்குடுதீவைச் சேர்ந்த திரு.சோதிலிங்கம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“..பேராசிரியர் நயினார் முகம்மது தமிழ் மொழியையும், தைப்பொங்கலையும் சம்பந்தப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார். சனங்கள் மிக அமைதியாக இருந்து அதனை ரசித்தனர். நான் பல கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். அப்படி அமைதியாக இருந்து சனங்கள் கேட்டு ரசித்த கூட்டத்தை இதுவரை காணவில்லை..”

“..அப்போது கிழக்குப் பக்கமாக ஏதோ ஆரவாரம் கேட்டது. சனங்களை அமைதியக இருக்குமாறு நயினார் முகம்மது கேட்டுக்கொண்டார். என்ன குழப்பமாக இருக்கலாமென்று அவதானிக்க அருகே சென்றேன். பொலிஸ் வாகனம் வந்திருப்பதையும், வீதியை விட்டு சனங்கள் விலகுவதையும் கண்டேன்..”

”..இதனால்தான் அங்கு சலசலப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். வீதியை விட்டு விலகி வாகனத்திற்கு வழிவிடுமாறு சனங்களை நானும் கேட்டேன். சனங்கள் பொலிஸாரைக் கண்டு எவ்வித எதிர்ப்பும் காட்டவில்லை. அவர்கள் அங்கு ஏன் வந்தனரென்ற பதட்டநிலை காணப்பட்டது..”

“..பொலிஸ் டிரக்கின் பின் கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது. அதற்குள் மூன்று, நான்கு பொலிஸார் இருந்தனர். அவர்கள் திடீரெனக் கீழே குதித்து குண்டாந்தடியாலும், துவக்கின் அடிப்பாகத்தினாலும் சனங்களைத் தாக்கினார்கள். அதேசமயம் கூட்டத்திற்குள் பல இடங்களிலும் பொலிஸாரின் தாக்குதல் நடந்தது. அவர்கள் எப்படி அங்கு வந்தனரென்பது எனக்குத் தெரியாது. இச்சம்பவம் நிகழ்வதற்கு முன் அந்த வீதியில் வேறு எந்த வாகனமும் வரவில்லை. குழப்பமும் நிகழவில்லை.

பொலிஸ் டிராக்கிலிருந்து எந்தத் தகவலையாவது ஒலிபரப்பியதை நான் கேட்கவில்லை. தாக்குதல் திடீரென ஆரம்பமானது. துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. பொலிஸார் சுடுவதை நான் நேரில் கண்டேன். பல தடவைகள் வெடிச்சத்தங்கள் கேட்டன. அவற்றில் 45 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் நடந்ததை நான் கேட்டேன். இந்தச் சமயத்தில் மின்சாரக் கம்பி அறுத்து தொங்கியதை நான் காணவில்லை..”

”..சிதறி ஓடிக்கொண்டிருந்த பெண்களையும், பிள்ளைகளையும் பொலிஸார் துரத்தி, துப்பாக்கியின் அடிப்பாகத்தினால் தாக்கினார்கள். ஓடிக்கொண்டிருந்தவர்களின் உடைகளைப் பொலிஸார் பிடித்து இழுத்ததையும் கண்டேன். உடைகள் இதனால் உரிந்து நிலத்தில் விழுந்தன. உள்ளாடையுடனும், மேற்சட்டையுடனும் பல பெண்கள் தொடர்ந்தும் ஓடிக்கொண்டிருந்தனர்..”

“..பின் பஸ் நிலயத்தில் என்ன நடக்கிறது எனக் காணச்சென்றேன். அங்கும் பொலிஸார் சனங்களைத் தாக்கினார்கள். கண்ணீர் புதைக்குண்டுகளும் வெடித்தன..”

இந்தக் கோரப் பலியெடுப்பில் 11 தமிழர்கள் சிறீலங்கா பொலிஸாரினால் கொல்லப்பட்டனர். எவ்வித அரசியல் கலப்புமற்று, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மாத்திரம் இடம்பெற்ற இந்நிகழ்வை சிறீலங்கா அரசு படுகொலை ஒன்றின் மூலம் முடித்துவைத்தது. தமிழ் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றாகிய தமிழ் மொழி வளர்ச்சியை அழிக்கும் நோக்குடன் இடம்பெற்ற இந்தப் படுகொலையானது, இத்தீவில் தமிழ் பண்பாட்டு இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதற்கு வலுவான சான்றாகும்.

இந்த விடயத்தினை மாநாடு இடம்பெறுவதற்கு முன்பே ஆருடம் சொல்லியதைப் போல சுதந்திரன் பத்திரிகையின் ஆசியர் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது. “தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அரசு அடியோடு ஒத்துழைப்பு நல்க மறுத்து அதை நசுக்க முயலுமானால், அதன் பொருள, அரசு, தமிழ் மொழி உயர்வதை, வளர்வதை, வாழ்வதை அடியோடு விரும்பவில்லை. தமிழும் தமிழினமும் இந்நாட்டில் புகழோடு தலைதூக்கி நிற்பதை விரும்பில்லை. தமிழை ஒழித்துக்கட்டவே அது முயல்கிறது என்பதுதான்”.

ஜெரா

10.01.1974 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்)
  2. பரம்சோதி சரவணபவன் (வயது 26)
  3. வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32)
  4. ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52 – ஆசிரியர்)
  5. புலேந்திரன் அருளப்பு (வயது 53)
  6. இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்)
  7. இராஜன் தேவரட்ணம் (வயது 26)
  8. சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்)
  9. சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்)
Exit mobile version