Home ஆய்வுகள் தமிழர்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் இலஞ்சம் தலைவிரித்தாடுகின்றது – மட்டு.நகரான்

தமிழர்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் இலஞ்சம் தலைவிரித்தாடுகின்றது – மட்டு.நகரான்

புதியவருடம் பிறந்திருக்கின்றது. ஆங்கில வருட பிறப்பு தினத்தன்று மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகத்தில் காலையில் ஊழியர்கள் வருட ஆரம்ப உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்குவந்த ஒப்பந்தகாரர் ஒருவர் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் தலா 20ஆயிரம் ரூபா வீதம் கடித உறையில் வைத்த வழங்கியுள்ளார்.

ஒரு அலுவலக நேரத்தில் அதிலும் முக்கிய அரச அலுவலகத்தில் அதுவும் மட்டக்களப்பில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதானது இந்த நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு இலஞ்சம் எவ்வாறு தலைவிரித்தாடுகின்றது என்பது வெளிப்படையாக தெரிவிக்கின்றது.

batti rda தமிழர்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் இலஞ்சம் தலைவிரித்தாடுகின்றது - மட்டு.நகரான்கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றினை திசைதிருப்பும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் அரசாங்கத்தினாலும் அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையினராலும் திட்டமிட்ட மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியம்,உரிமைசார்ந்த விடயங்களிருந்து தமிழர்களை திசைதிருப்பும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முன்னெடுப்புகளுக்கு பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முற்றுமுழுதான அதிகாரத்துடன் செயற்படுமான நிலைமையினை சிங்கள பௌத்தபேரினவாத சக்திகள் முன்னெடுத்துவருவதை காணமுடிகின்றது.

யுத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் ஒட்டுக்குழுக்களைக்கொண்டு தமிழ் தேசியத்திற்கு சார்பாகவும் தமிழர்களுக்கு சார்பாகவும் செயற்படுவோரை படுகொலைசெய்யும் பணிகளை முன்னெடுத்த அதேதரப்பினர் அதே நபர்களைக்கொண்டு இன்று கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த முன்னெடுப்புகளை நாங்கள் இலகுவாக கடந்துசெல்லமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.காரணம் இந்த நிலைமையானது எதிர்காலத்தில் கிழக்கின் இருப்பு பாரியளலான கேள்விக்குட்படுத்தும் செயற்பாடாகவேயிருந்து வருகின்றது.இந்த நிலைமை களையப்படவேண்டுமானால் இது தொடர்பான விழிப்புணர்வு கிழக்கில் முன்னெடுக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் கிழக்கின் மீட்பர்களாக பிள்ளையான்,வியாழேந்திரன் ஆகியோரை புலம்பெயர்ந்துவாழும் கிழக்கினை சேர்ந்த சிலரும் கிழக்கில் வாழும் சிலரும் இவர்களை இன்னும் நம்புவது என்பது கிழக்கில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான அறியாமையாககூட இருக்கலாம்.

கடந்தகாலத்தில் இவர்கள் கிழக்கில் மேற்கொண்ட செயற்பாடுகளே இன்று கிழக்கில் தமிழர்களின் இருப்புகள் கேள்விக்குட்படுத்துவதற்கான ஏதுவான காரணம் என்பதை கிழக்கில் உள்ள தமிழர்களும் புலம்பெயர்ந்துள்ள கிழக்கினை சேர்ந்தவர்களும் உணரவேண்டும்.

பிள்ளையான் போன்றவர்கள் வெறுமனே கிழக்கில் தமிழர்களின் இருப்பு தொடர்பில் இளைஞர்களை உணர்ச்சிவசப்படச்செய்யும் வகையிலான கருத்துகளை முன்வைக்கின்றார்களே தவிர அவர்களிடம் கிழக்கினை மீட்பதற்கோ அல்லது பாதுகாப்பதற்கோ எந்தவித திட்டங்களும் இல்லை.அவர்கள் பேரினவாதசக்திகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளையே அதிகளவில் முன்னெடுப்பார்கள்.

அத்துடன் தமிழர்களின் இருப்பினை விட தங்களின் இருப்பினையே அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

இந்தவேளையில் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை ஆயுதங்களாக கொண்டே இவர்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.அதற்கான காரணம் தமிழ் தேசிய அரசியலில் முஸ்லிம்களும் தமிழர்களும் கிழக்கில் இணைந்து பயணிக்கும்போது அது சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து தொடர்ச்சியாக ஏதோவொரு தரப்பினை தமிழர்களிலும் முஸ்லிம்களிலும் வளர்க்கப்பட்டே வருகின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் வளர்க்கப்பட்டவரே பிள்ளையானாகும். இன்று மொட்டுக்கட்சியில் வெற்றிபெற்ற வியாழேந்திரனுக்கு வழங்காத அதிகாரங்கள் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டுள்ளது.இலங்கையில் எந்த அமைச்சருக்கும் வழங்கப்படாத அதிகாரங்களும் நிதிகளும் மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றால் இது தொடர்பில் சிந்திக்கும் திறன்கொண்ட மனிதர்கள் இலகுவில் இதன் சூத்திரத்தினை விளங்கிக்கொள்வார்கள்.

இதில் சிறப்பு என்னவென்றால் தமிழர்களிடம் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் பற்றி தமிழர்களிடமும் இவர்கள் மாறிமாறி பிரசாரங்களை முன்னெடுத்து அவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தினாலும் இந்த இரண்டு தரப்புகளும் இணைந்தே பயணிக்கும்.வெளியில் அவர்களுக்கு எதிரியாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் இவர்கள் மத்தியிலான தொடர்பு என்பது மிகவும் அதிகமானது.

பிள்ளையான் 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையில் முதலமைச்சராக எடுத்துக்கொண்ட காலப்பகுதியில் பொது மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்தபோதும் ஹிஸ்புல்லாவுடன் நெருங்கிச்செயற்பட்ட பிள்ளையான் அவருக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான காணியை பெற்று;ககொடுக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தார்.

இதேபோன்று வாகரை பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர்களிடம் பணத்தினைப்பெற்றுக்கொடுத்து பெருமளவு காணிகளை வழங்கினார்.சிலர் முதலமைச்சருக்கு காணி அதிகாரம் இல்லை,அவரால் எப்படி வழங்கமுடியும் என்று கேள்வியெழுப்புகின்றனர் ஆனால் அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களை பூரண கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து தனது தனி;ப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்துவந்தார்.

இவற்றினையெல்லாம் நான் இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்னால் காலம்காலமாக இவ்வாறானவர்களை பயன்படுத்தி தமிழர்கள் மத்தியில் பிளவினையும் மோதல்களையும் ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிளவுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி தமிழ் தேசியத்திற்கும் தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குமான நியாயமான வெளிப்பாட்டை இல்லாமல்செய்வதற்கு மிகவும் தந்திரமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இதற்காகவே பிள்ளையானுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றது.இன்று கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டு மாவட்டத்தில் செலவு செய்வதற்கு பாரியளவிலான நிதிகளும் வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக வீதி அபிவிருத்திக்கு என பாரியளவிலான நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை தங்களுக்கு சார்பான ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்டு பாரியளவில் தரகுப்பணம் பெறுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் இந்த செயற்பாடுகள் என்பது தமிழ் மக்கள் மத்தியிலிருக்;கும் விடுதலை உணர்வினை இல்லாமல்செய்து சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை முன்னெடுத்துவருகின்றது.சிங்களவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழக்கூடாது என்ற சிந்தனையிலேயே கிழக்கில் பலவிதமான செயற்பாடுகளை சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்றது.அதன்காரணமாகவே மயிலத்தமடு,மாதவனை போராட்டத்தினை சிங்கள அரசு கவனத்தில் கொள்ளாத நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றிற்கான முக்கியமான காரணமாக இன்று தமிழ் தேசிய அரசியலில் உள்ள முரண்பாடுகளையும் குறிப்பட்டேயாகவேண்டும்.வடக்கில் செல்வம் அடைக்கலநாதனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டால் ஏதோவொரு வகையில் அங்குள்ள தமிழ் தேசியம்சார்ந்தவர்கள் சக்திகள் அவற்றினை கையாளும் நிலைமை காணப்படுகின்றது.

ஆனால் கிழக்கில் தமிழ் தேசிய சக்திகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகள் என்பது பிள்ளையான் போன்றவர்களை வளர்த்துவிடும் செயற்பாடாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை இன்று அரச தரப்பு கிழக்கில் சிறப்பாக பயன்படுத்திவருகின்றது. இதேபோன்று தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளும் கிழக்கில் தமிழர்களின் இருப்பிற்கான கேள்விக்குறியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் என்பதை தமிழ் தேசிய கட்சிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இலங்கை அரச தரப்பு இங்குள்ள அரசதரப்பு அரசியல்வாதிகளுக்கு அனைத்துவிதமான அதிகாரங்களையும் வழங்கி அனைத்துவிதமான சட்டவிரோத செயற்பாடுகளையும் கண்டும்காணாமல் இருக்கின்றது என்றால் சிங்கள அரசுக்கு கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் எந்தளவுக்கு வழங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிகின்றது.

ஆனால் இவை எவையும் உணராத வகையில் தமது கட்சி அரசியலையும் தேர்தல் அரசியலையும் முன்னிறுத்தி முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஒருபோதும் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்காது. இதனை எதிர்காலத்தில் உணர்ந்துசெயற்படவேண்டும்.

Exit mobile version