Home ஆய்வுகள் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் – மட்டு.நகரான்

பண்ணையாளர்களுக்கு ஆதரவாக இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் – மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான போராட்டம் 87நாட்களையும் கடந்துசென்றுகொண்டிருக்கின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனையில் கால்நடை பண்ணையாளர்கள் காலம்காலமாக தமது கால்நடைகளை கொண்டு பராமரித்த பகுதியை தெற்கினை சேர்ந்த குடியேற்றவாசிகள் அத்துமீறி அபகரித்து அங்கு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் தமது கால்நடைகளை பராமரிக்கும் பகுதியை மீட்டுத்தந்து தமது கால்நடைகளை அச்சமின்றி பராமரிக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்;டக்களப்பில் தொடர்ந்து பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த போராட்டத்தினை கால்நடை பண்ணையாளர்கள் மட்டுமே முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கான ஆதரவு தளங்கள் என்பது மறைந்துசெல்வதை காணமுடிகின்றது.

bodha mailaththanai பண்ணையாளர்களுக்கு ஆதரவாக இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் - மட்டு.நகரான்இவ்வாறான நிலையில் மயிலத்தமடு,மாதவனை தொடர்பில் தவறான விடயங்களும் பரப்பபட்டுவருகின்ற நிலையில் இந்த போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படாமல் போராட்டம் பண்ணையாளர்களின் போராட்டமாக மட்டும் முன்னெடுக்கப்படுவதானது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பதே கேள்வியாகவுள்ளது.

எவ்வாறாயிலும் மயிலத்தமடு,மாதவனையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பது வெறுமனே நாங்கள் பண்ணையாளர்களின் போராட்டமாக கடந்துசெல்வது என்பது கிழக்கு மாகாணத்தின் இருப்பிற்கும் தமிழ் தேசியத்திற்குமான ஆபத்தாகவே அது அமையும். அண்மையில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள் ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்துகள் பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது குறித்த பகுதியில் திவிலப்பொத்தானை என்ற கிராமம் யுத்ததிற்கு முன்பாக இருந்ததாகவும் அங்கு சிங்கள குடும்பங்கள் வசித்ததாகவும் பின்னர் யுத்ததின்போது அவர்கள் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் மீண்டும் அதிகளவானோர் குடியேறவந்த நிலையிலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

எனினும் இந்த கருத்துகளை முற்றாக மறுத்துள்ள பண்ணையாளர்கள் திவிலப்பொத்தானை என்ற கிராமம் மயிலத்தமடு,மாதவனைக்கு அருகில் உள்ளதாகவும் அங்கு சிங்கள மக்கள் வசித்துவரும் நிலையில் இப்பகுதியில் திவிலப்பொத்தானைக்கு எந்த தொடர்பும் இல்லையெனவும் தெரிவிக்கின்றனர்.அத்துடன் திவிலப்பொத்தானை என்ற கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் இல்லையெனவும் அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்த விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மயிலத்தமடு,மாதவனைக்கு அருகில் திவிலப்பொத்தனை என்ற கிராமம் இருக்கின்றது அங்கு சிங்கள மக்கள் வசிக்கின்றார்கள்.அவர்களுக்கும் இங்கிருக்கின்ற சிங்கள அத்துமீறிய குடியேற்றக்காரர்களுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லையெனவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அவ்வாறான கிராமம் ஒன்று இருந்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லாத நிலையில் தெற்கில் இனவாத அரசியல்வாதிகள் பரப்பிவரும் போலி கருத்துகள் போன்று கிழக்கில் உள்ள ஆளுனர் தெரிவித்துள்ள கருத்தும் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் குறித்த பகுதியில் சட்ட விரோத குடியேற்றவாசிகளைக்கொண்டுவந்து அவர்களுக்கு குடியேறுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட நிலையில் அதற்கு எதிரான பலமான எதிர்ப்பினை மட்டக்களப்பு மக்கள் வெளிப்படுத்தினார்கள்.2012ஆம் ஆண்டு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றம் செய்யப்பட்டபோது அன்றைய கிழக்கு மாகாண விவசாய அமைச்சராகயிருந்த கி.துரைராஜசிங்கம் அவர்கள் மகாவலி அதிகாரசபையின் ஊடாக நடவடிக்கையெடுத்து அங்கிருந்த சட்ட விரோதகுடியேற்றக்காரர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில் இன்றைய கிழக்கு மாகாண ஆளுனரின் கருத்துகள் என்பது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி நிற்கின்றது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரின் கருத்தினை ஒத்ததாக தற்போதைய ஆளுனர் தெரிவித்த கருத்துகளும் உள்ளதன் காரணமாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மயிலத்தடு பண்ணையாளர்களின் பிரச்சினை குறித்து ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோது அது தொடர்பில் பதிலளிப்பதிலிருந்து அவர் நழுவிச்சென்ற விடயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் ஒரு தமிழ் கட்சியின் தலைவர்,தமிழ் ஆளுனராகயிருந்துகொண்டு நேர்மையற்ற சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதுபோன்று கருத்துகளை தெரிவிப்பது என்பது அவரும் சிங்கள தேசியவாததத்தின் எடுபிடிகளாகவே உள்ளார் என்பதை நிரூபித்துள்ளது.

இவ்வாறான நிலையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது சிங்கள இனவெறியர்களினால் தொடர்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தாங்கள் போராட்டம் நடாத்தி 87 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் 80க்கும் மேற்பட்ட பசுக்களை இழந்துள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்தார். நீதிமன்ற கட்டளையொன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அந்த கட்டளையினை நடைமுறைப்படுத்த காவல்துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லையெனறும் அவர் தெரிவித்தார்.

“சட்ட விரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்தவும் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர்.

கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் குறித்த தாக்குதல்களை நடாத்துவோர் குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்றுமுறைப்பாடுகளை செய்தால் தமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லையெனவும் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வந்துமுறைப்பாடுகளை செய்தால் பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்குவதன் காரணமாக அவர்கள் மனநோயிக்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தலைவர் நிமலன் தெரிவிக்கின்றார்.

அவ்வாறானால் இவர்களின் இந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவது யார் என்ற கேள்வி எழுகின்றது.அண்மையில் குறித்த பண்ணையாளர்களின் போராட்ட இடத்திற்குவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் குறித்த பண்ணையாளர்களால் எதுவும் செய்யமுடியாது.சட்ட விரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுவது கடினம்.

 

அவர்களை எதுவும் செய்யமுடியாது.நீங்கள் போராட்டத்தினை முடித்துவிட்டு தொழிலைப்பாருங்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.அவ்வாறானால் இவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மாவட்டத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படமுடியாதவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கான உரிமைகளைப்பெற்றுக்கொடுக்கமுடியும் எனவும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இவ்வாறான நிலையில் பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் என்பது வெறுமனே பண்ணையாளர்களின் போராட்டமாக மட்டும்பார்க்காமால் தமிழ் தேசியத்தினை சிதைக்கும் செயற்பாடாக பார்க்கவேண்டும். கிழக்கில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் வடகிழக்கில் தமிழர்தாயகத்தின் இருப்பிற்கான பெரும் ஆபத்தாக நோக்கப்பட்டு வடகிழக்கு இணைந்த செயற்பாடுகள் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாயதேவையாகவுள்ளது.

 

Exit mobile version