Tamil News
Home செய்திகள் நேபாளம், பங்களாதேஷ் சிறீலங்காவுக்குக் கொடுத்த அதிர்ச்சி! வாக்கெடுப்பில் நடுநிலை?

நேபாளம், பங்களாதேஷ் சிறீலங்காவுக்குக் கொடுத்த அதிர்ச்சி! வாக்கெடுப்பில் நடுநிலை?

ஜெனிவாவில் ஆசிய நாடுகளின் ஆதரவு தமக்குக் கிடைக்கும் என சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நம்பிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நிலைப்பாடு சிறீலங்காவுக்குக் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, தம்மால் வெற்றிபெற முடியாது என்பதை சிறீலங்கா தெரிந்திருக்கின்ற போதிலும், அண்டை நாடுகளான ஆசிய நாடுகளின் ஆதரவைத் தக்கவைப்பதற்கான பகிரத இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் நோபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது, “பிரேரணை எவ்வாறிருந்தாலும், இந்தியாவின் ஆலோசனையைப் பெற்றே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்” என இரு நாடுகளின் பிரதிநிதிகளும் சிறீலங்காவுக்குத் தெரிவித்திருக்கின்றார்கள்.

சிறீலங்கா இராஜதந்திர மட்டத்தில் இது அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தியா வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற முடிவை எடுத்துவிட்டது. இந்த நிலையில் நேபளம், பங்களாதேஷ் ஆகியனவும் அதே நிலைப்பாட்டை எடுத்தால் அது சிறீலங்காவுக்கு பாரிய பின்னடைவாக இருக்கும். நெருங்கிய நட்பு நாடுகளின் ஆதரவைக் கூட பெற முடியவில்லை என்பது ஒரு இராஜதந்திரத் தோல்வியாகவே கருதப்படும்.

Exit mobile version