Tamil News
Home செய்திகள் சமய காரணங்களுக்காக வைத்திருக்கும் நிதியை மக்களுக்கான நிவாரணங்களுக்காக வழங்கவேண்டும்.

சமய காரணங்களுக்காக வைத்திருக்கும் நிதியை மக்களுக்கான நிவாரணங்களுக்காக வழங்கவேண்டும்.

சமய காரணங்களுக்காக வைத்திருக்கும் நிதியைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ்சால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு வணக்கஸ்தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்களிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இன்று வணக்கஸ்தலங்களில் நடைபெற வேண்டிய வருடாந்த திருவிழாக்கள் பூஜைகள் ஆராதனைகள் வழிபாடுகள் அனைத்தும் கொரோனாவின் நிமித்தம் ஸ்தம்பிதமாகியுள்ளன.

யார் யாரை இந்த வைரஸ் அடுத்துத் தாக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இந்த நிலையில் சமயச் சடங்குகளுக்காகப் பயன்படவிருந்த நிதியனைத்தும் செலவு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

அதே நேரம் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய குடும்பத் தலைவர்கள் மற்றும் தலைவிகள் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பலருக்கு தத்தமது ஊர்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல குடும்பங்கள் அடுத்த வேளை சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கின்றனர்.

பலர் பட்டினியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு தத்தளித்து வருகின்றனர்.

கோயில்களில் திருவிழாக்கள் செய்ய இருந்த உபயகாரர்கள்; வணக்கஸ்தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று பட்டினியால் வாடும் பல வறிய குடும்பங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

ஓரிரு வாரங்களுக்கேனும் பயன்படுத்த கூடிய உலர் உணவுப் பொதிகளை சமய காரணங்களுக்காக வைத்திருந்த தமது நிதியைப் பயன்படுத்தி அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க முன்வர வேண்டும் என சி.வி.விக்னேஸ்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version