Tamil News
Home செய்திகள் சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற மூவர் கைது.

சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற மூவர் கைது.

இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் இலங்கை செல்லும் திட்டத்துடன் இலங்கை சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பதாக தமிழக கடலோர காவல் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலயடுத்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நடத்திய சோதனையில் 3 இலங்கை அகதிகள் பிடிபட்டனர்.

விசாரணையில், இலங்கை, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வரசுனன் (30), யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த அருள் வசந்தன் (42) வவுனியா மாவட்டதை சேர்ந்த மயூரான் (28) ஆகிய மூவரும் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு அகதிகள் முகாம்களில் வசித்து வந்தாகவும், தனுஸ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கள்ளதோணியில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த தமிழக கடலோர காவல் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் காவல் துறையினர் விசாரணையின் போது தாங்கள் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தங்களது உயிர்களை காப்பாற்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தற்போது இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து இலங்கைக்கு சட்டவிரோதமாக திரும்பி செல்ல ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கை அழைத்து செல்ல இலங்கை மன்னாரை சேர்ந்த நந்தா என்பவரிடம் தலா 1 லட்சம் என 3 லட்சம் ரூபாய் இலங்கை பணம் பிடிபட்டவர்களின் உறவினர்கள் கொடுத்துள்ளதாகவும் தனுஸ்கோடி பகுதியை சேர்ந்த ஏஜென்ட் சதீஸ் என்பவர் தனுஸ்கோடியில் இருந்து படகில் அனுப்பி வைக்க ராமேஸ்வரம் வர சொன்னதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருகிறது. எனவே பிடிபட்ட மூன்று பேரும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ராமேஸ்வரம் வந்தனாரா என்ற கோணத்தில் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர்களிடமிருந்து இந்திய பணம் மற்றும் பாஸ்போர்ட் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கி கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version