Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா தொற்று- டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா?

கொரோனா தொற்று- டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அக்டோபர் 1ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனால் கடந்த வெள்ளியன்று ஃப்ளோரிடாவில் நடக்க இருந்த பிரசார கூட்டம் இரத்து செய்யப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதில் இந்த தனிமைப்படுத்தல் நிச்சயமாக ஒரு தாக்கம் செலுத்தும். ஆனால் அதிபர் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா அப்படி தள்ளி வைக்கப்பட சாத்தியம் உள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

அமெரிக்க சட்டங்களின்படி நான்காண்டுகளுக்கு ஒரு முறை நவம்பரில் முதல் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும். அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் முடிவு செய்ய முடியும். அதிபரால் முடிவு செய்ய முடியாது.

இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். செனட் சபை ஒப்புதல் அளித்தாலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் இதற்கான ஒப்புதல் கிடைப்பது மிகவும் கடினம்.

ஒருவேளை தேர்தலைத் தள்ளி வைப்பதற்கு இரண்டு அவைகளும் ஒப்புக் கொண்டாலும் கூட அமெரிக்க சட்டங்களின்படி அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே. அதன்படி 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நற்பகலில் டிரம்பின் அதிபர் பதவி தானாகவே முற்றுப்பெறும். இந்தத் தேதியை மாற்ற வேண்டுமானால் அதற்கு அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

அதற்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அல்லது மூன்றில் இரண்டு பங்கு மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்பின்பு நான்கில் மூன்று பங்கு அமெரிக்க மாகாண அரசுகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே இதற்கும் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

நன்றி பிபிசி

Exit mobile version