Home ஆய்வுகள் கொடூரக் குற்றங்களுக்கு இழப்பீட்டு வெகுமதியுடன் விடுதலை – வழிகாட்டிய விசாரணைக்குழு – பி.மாணிக்கவாசகம்

கொடூரக் குற்றங்களுக்கு இழப்பீட்டு வெகுமதியுடன் விடுதலை – வழிகாட்டிய விசாரணைக்குழு – பி.மாணிக்கவாசகம்

இலங்கையின் நீதி நியாயச் செயற்பாடுகள் நடுநிலையானவைதானா என்ற கேள்வி காலத்துக்குக் காலம் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. நீதி நியாயப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டும். பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பளிக்க வேண்டும். பாதிப்புகள் மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதும் நீதிப் பொறிமுறையின் தலையாய கடமையும், பொறுப்பும் ஆகும்.

ஆனால் நீதி நியாயம் தொடர்பிலான இந்த நியதிகளும் சாதாரண மக்களின் இவற்றுக்கான எதிர்பார்ப்பும் இலங்கையின் நீதித்துறையினால் நிறைவேற்றப்படவில்லை என்பதே வரலாறு.
அரசியல் செல்வாக்கிற்கு உள்ளாவதும், நிறைவேற்றதிகாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாய நிலைமையுமே நீதித்துறையின் பலவீனமான நிலைமைக்குக் காரணம்.

ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறை, சட்டவாக்கத்துறை, நிறைவேற்றதிகாரம் என்பன தன்னளவில் சுதந்திரமாகவும், ஒன்று மற்றொன்றில் தலையீடு செய்யாததாகவும் இருத்தல் வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பு.

ஆனால் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டதாகக் கருதப்படுகின்ற இலங்கையில் இத்தகைய பண்பியலைக் காண முடியவில்லை.

நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிச்சேவை ஆணைக்குழு, நீதிமன்றங்கள் போன்றவையே நீதித்துறையின் பிரிவுகளாகப் பொதுவாகக் கருதப்படுகின்றன. விசேடமாக நீதிமன்றங்களினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகள், தண்டனைகளின் தன்மை, பல வழக்குகளில் வழங்கப்படுகின்ற பிணை அனுமதி என்பனவும் நீதித்துறையின் சீரான செயற்பாடுகளை மதிப்பிடுவதற்குக் கருத்திற் கொள்ளப்படுகின்றது.

இலங்கையின் நீதித்துறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளும், அவைகள் நீதிமன்றங்களில் கையாளப்படுகின்ற முறையும், இந்த வழக்கு விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய சட்டரீதியான தலையீட்டுச் செயற்பாடு என்பனவும் இலங்கையின் நீதித்துறையின் நிலைமையை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

நீதிமன்றங்களுக்கு அப்பால் சில பொது விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுக்களின் விசாரணை நடைமுறைகளும், அவற்றின் பரிந்துரைகளும் நாட்டின் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்துகின்றன. இதனால் நீதித்துறையில் தலையீடு செய்வதற்காகவே இத்தகைய விசாரணை குழுக்கள் நியமிக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது.

இந்த பின்புலத்தில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் வரலாற்று நாயகனாகக் கருதப்படுகின்ற மகிந்த ராஜபக்சவின் ஆட்சித் தொடரில் அவரது சகோதரராகிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சி நிர்வாகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கமாட்டாது என்ற மன நிலைமைக்கே மக்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.

குறிப்பாக யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டி பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டைத் தட்டிக்கழித்து வந்துள்ள அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். அந்த அரசின் நீதிப் பொறிமுறை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இதன் காரணமாகவே பொறுப்பு கூறும் கடப்பாட்டில் சர்வதேச விசாரணையே வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆனால் சர்வதேச விசாரணைகளோ அல்லது சர்வதேச நீதிபதிகளையோ வழக்குத்தொடுநர்களையோ நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது. அது இலங்கையின் இறைமையை மீறுகின்ற செயல். அதுமட்டுமல்லாமல் நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடாகும் எனக்கூறி ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இணை அனுசரணை வழங்கிய பிரேரணைகளையும், சர்வதேச விசாரணையையும், அது சார்ந்த செயற்பாடுகளையும் மறுத்துரைத்துரைத்து வருகின்றனர். ஏற்கனவே ஐ.நாவின் பிரேரணைக்கான இணை அனுசரணையில் இருந்து ஜனாதிபதி கோத்தாபாய அரசு தன்னிச்சையாக விலகியிருக்கின்றது.

ஆனால் நடைமுறையில் உள்ள நீதிப்பொறிமுறையின் ஊடாகவே பொறுப்பு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் நீதித்துறையினதும், நீதிப்பொறிமுறையினதும் உண்மையான நிலைமை என்ன என்பதை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணைக்குழுவின் அறிக்கை இப்போது தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

யுத்தத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுத்த மீட்பராகத் திகழ்ந்த போதிலும் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆயினும் அடுத்து வந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவருடைய சகோதரன் கோத்தாபாய ராஜபக்ச வெற்றியீட்டியதுடன், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் பொதுத் தேர்தலிலும் ராஜபக்சாக்கள் வெற்றி பெற்றனர்.

3500 கொடூரக் குற்றங்களுக்கு இழப்பீட்டு வெகுமதியுடன் விடுதலை - வழிகாட்டிய விசாரணைக்குழு -	பி.மாணிக்கவாசகம்
இந்த மீள்வருகையுடன் அவர்களது இராணுவ முனைப்பு மிக்க ஆட்சி முன்னரிலும் பார்க்க வீறுகொண்டு நடைபோடத் தொடங்கியிருக்கின்றது. தங்களைத் தேர்தலில் தோல்வியடையச் செய்த நல்லாட்சி அரசாங்கம் தமக்கு உறுதுணையாக செயற்பட்டவர்களையும் ஆதரவாகச் செயற்பட்டவர்களையும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கியது எனக்கூறி, அதனை விசாரிப்பதற்காக ஆணைக்குழு ஒன்றை, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நியமித்தார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவுக்குப் பணித்திருந்தார்.

பணி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் உப்பாலி அபேரட்னவின் தலைமையில் பணிஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக்க ஆகிய மூவரடங்கிய அந்த ஆணைக்குழு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தனது விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி இருந்தது.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து 1971 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 198 விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை, மூன்று தொகுதிகள் அடங்கிய 2043 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்றது. இந்த அறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இரகசியமாக சமூக வலைத்தளங்களில் கசிந்து தென்னிலங்கை ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றது.


நல்லாட்சி அரசாங்கத்தில் மிகமோசமான குற்றச் செயல்கள் என்றும் மிக மோசமான போர்க்குற்றச் செயல்கள் என்றும் மிக மோசமான ஊழல் செயற்பாடுகள் என்றும் கருதப்பட்ட சம்பவங்கள் நிகழ்வுகள் விடயங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய பொலிஸ் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இந்த விசாரணைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டிருந்த ராஜபக்சாக்களின் உறவினர்கள் மற்றும் வேண்டியவர்களாகிய படைத்தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் அனைவரையும் எந்தவித குற்றச்சாட்டுக்களுமின்றி விடுதலை செய்யுமாறு இந்த ஆணைக்குழு தனது விசாரணைகளின் அடிப்படையில் பரிந்துரை செய்திருக்கின்றது.

இதற்கமைய பல கொடூரமான குற்றச் செயல்களைப் புரிந்த கொலையாளிகள், போர்க்குற்றவாளிகள், கடத்தல்காரர்கள், நிதி மோசடி செய்தவர்கள் என பலருக்கு அரசு இழப்பீட்டுத் தொகையைப் பரிசாக வழங்கி, அதற்கான குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்டு, வழக்குகளும் முடிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

 ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கடத்தப்பட்டு, கப்பம் பெற்று கொலையுண்டமை, இலங்கைக் கடற்படை உயரதிகாரி ஒருவரின் தலைமையில் 11 மாணவர்கள் கொழும்பில் கடத்தப்பட்டமை, சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை, முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை ஊடகவியலாளர்களான உப்பாலி தென்னக்கோன், கீத் நோயர் ஆகியோர் மீதான தாக்குதல்கள் என்பன போன்றவை தொடர்பிலான வழக்குகளிலேயே இத்தகைய நீதி நிலைமை நிலவுகின்றது.

இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசேட கவனம் செலுத்தி புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவுள்ள தருணத்தில் நீதிமுறைமைக்கு நேர்முரணான வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது பாகுபாடான அரசியல்மயப்பட்ட பரிந்துரைகளைக் கொண்ட இந்த அறிக்கை வெளியாகியிருக்கின்றது.

இது ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் இராணுவ போக்கிலான ஜனநாயக விரோத ஆட்சிமுறை நடவடிக்கைகளுக்கு அப்பட்டமான சாட்சியமாக அமைந்திருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், முற்றிலும் இராணுவ நலன்சார்ந்த வழித்தடத்திலான நீதிப்பொறிமுறைச் செயற்பாட்டையும் இது துலாம்பரமாக்கி உள்ளது.

 மோசமான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்டு நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பொறுப்பு கூறப்படும், நீதியும் நியாயமும் வழங்கப்பட முடியும் என்ற யதார்த்தத்தை உறுதிப்படுத்துவதாக இந்த அறிக்கை அமைந்திருக்கின்றது.

 

Exit mobile version