Home செய்திகள் புங்குடுதீவு புதைகுழியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு – நண்பகலுடன் அகழ்வுப் பணி முடிவு

புங்குடுதீவு புதைகுழியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு – நண்பகலுடன் அகழ்வுப் பணி முடிவு

14 1 புங்குடுதீவு புதைகுழியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு - நண்பகலுடன் அகழ்வுப் பணி முடிவுயாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தன.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலயச் சூழலில் கிடங்கு வெட்டியபோது, மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்து விரைந்த பொலிஸார், அவ்விடத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதனடிப்படையில் இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல்துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அகழ்வின்போது பெண்ணொருவரினுடையதாகக் கருதப்படும் எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக்கூட்டுடன் செப்பு நாணயங்கள், துணி, அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டன. குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும், குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களைப் பார்வையிட்ட நீதிவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன. மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version