Home செய்திகள் அரசியல் விவாதங்களில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முன்னுரிமை பெறவேண்டும் – ஐங்கரநேசன்

அரசியல் விவாதங்களில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முன்னுரிமை பெறவேண்டும் – ஐங்கரநேசன்

Ayngaranesan 01 அரசியல் விவாதங்களில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முன்னுரிமை பெறவேண்டும் - ஐங்கரநேசன்காலநிலை மாற்றம் சகல தொழில் துறைகளையும் மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளிகள் தங்கள் தொழில் வாய்ப்புகளை இழந்து வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவைபற்றி அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ சிந்திப்பதாக இல்லை. உழைப்பாளர் தினப் பொதுக் கூட்டங்கள் வெற்று அரசியல் கோசங்களாலேயே நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை மாறவேண்டும். அரசியல் விவாதங்களில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முன்னுரிமை பெறவேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக் கூட்டம் நேற்று கொக்குவில் பொற்பதி அறிவாலயத்தில் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பூமி நாளுக்குநாள் சூடேறிக் கொண்டிருக்கிறது. கடந்த 173 ஆண்டுகால வானிலை வரலாற்றில் 2023 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கின்றது. பூமியின் வெப்பநிலை கைத்தொழில் புரட்சிக்காலத்தில் பூமி கொண்டிருந்த வெப்பநிலையைவிட 1.5 பாகை செல்சியஸ் அளவால் மட்டுமே உயரலாம் எனச் சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். பூமியைச் சூடுபடுத்தும் எமது நடவடிக்கைகளை நாம் உடனடியாகக் கட்டுப்படுத்தாவிடில் பூமியின் வெப்பநிலை வெகுவிரைவில் இந்த எல்லையைக் கடந்துவிடும். மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த வெப்ப உயர்வு இதுவரையில் எந்த அரசியல்வாதியையும் உலுக்கியதாகத் தெரியவில்லை.

நாம் காலநிலை மாற்றத்தின் பாதகங்களை ஏற்கனவே வெப்ப அலைகளாகவும், குறுகிய நாளில் கொட்டித் தீர்க்கும் அடைமழைகளாகவும் அனுபவிக்கத் தொடங்கி விட்டோம். காலநிலை மாற்றத்தால் ஒரு புறம் விவசாயம் பொய்த்துப் போக, இன்னொருபுறம் கடலில் மீன்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இன்று தென்னைகளைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் படையெடுப்பும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றுதான். ஆனால், இவற்றையெல்லாம் தற்செயலான, தனித்தனியான நிகழ்வுகளாகவே நம்மில் பெரும்பாலானோர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை ஒன்றுடனொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும் அளவுக்குச் சமூகம் சூழல் சார்ந்து இன்னும் போதிய அறிவூட்டப்படவில்லை.

இந்திய உச்ச நீதிமன்றம் காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் அடிப்படை மனித உரிமை என்று அண்மையில் தெரிவித்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் விஞ்ஞாபனங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான தமது திட்டங்களைக் கட்சிகள் அறிவிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியுள்ளது. ஐனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுள்ள இலங்கையில் எந்தவொரு வேட்பாளரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான இனநீதியை முன்வைக்கப் போவதில்லை. சூழல் நீதிக்கேனும் மதிப்பளித்துத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்த வாக்குறுதிகளையேனும் இடம்பெறச் செய்வதற்குத் தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version