Tamil News
Home செய்திகள் குடியுரிமையை பறிப்பார்கள் என்பதற்காக ஒருபோதும் நான் அஞ்சவில்லை – சரத் பொன்சேகா

குடியுரிமையை பறிப்பார்கள் என்பதற்காக ஒருபோதும் நான் அஞ்சவில்லை – சரத் பொன்சேகா

எதிர்க் கட்சியை அடக்கி நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால் அதை மக்கள் தோற்கடிப்பர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக எம்மை அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் ஊடாக எமது குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கைளை முன்னெடுக்கின்றது. குடிமை உரிமைகள் பறிக்கப்பட்ட அனுபவம் எங்களுக்கு உள்ளது. சிவில் உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை இழக்க நாங்கள் பயப்படவில்லை. கடந்த காலங்களில் அதை எதிர்கொண்டோம்.

நாட்டில் இடம் பெற்ற ஊழல் மோசடிகளை எதிர்த்து மக்கள் 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மக்கள் ஆணைக்கு அமைய நாமும் செயற்பட்டோம். நல்லாட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு நாள் மட்டுமே கூடியது.

ஆனால் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது பழிவாங்கும் கருத்தை உருவாக்கியுள்ளது. ஆகவே, இது தொடர்பான தொடர்புடைய ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும். எதிர்க்கட்சியை அடக்கி நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால் அதை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version