Tamil News
Home செய்திகள் ‘எம்மை பயமுறுத்தி அடக்க முடியாது. முடிந்தால் செய்து பாருங்கள்’ – ரவூப் ஹக்கீம்

‘எம்மை பயமுறுத்தி அடக்க முடியாது. முடிந்தால் செய்து பாருங்கள்’ – ரவூப் ஹக்கீம்

சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து எம்மை அச்சுறுத்த முடியாது. அதற்கு நாங்கள் அச்சப்  படப்  போவதில்லை. முடிந்தால் செய்து காட்டுங்கள். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2ம் நாளாக இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் 19ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள்  தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஆற்றிய உரையில், “அரசாங்கம் அமைத்திருக்கும் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் 11 பேர் கூட்டாக தெரிவித்திருக்கின்றனர். இது சாதாரண விடையமல்ல. அதே போன்று அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அரசாங்கத்தில் இருக்கும் சிலருக்கு கடந்த காலத்தில் நீதிமன்ற தீர்ப்பினால் தண்டனை அனுபவிப்பதை இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தீர்த்துக் கொள்ளக்கூடாது. அதற்கு மாற்று வழிகள் இருக்கின்றன. நீதி மன்றங்களுக்கு சென்று தங்களது நியாயத்தை முன்வைக்கலாம்.

மேலும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களினால் அரசியல் பழிவாங்கல்கள் இரண்டு தரப்பினாலும் ஏற்பட்டிருப்பதாக வலலாற்றில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

இது புதிய விடயமல்ல. ஆனால் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகும் அரச அதிகாரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பல அரச அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதன் தேவை என்ன? இந்த நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றது.

சட்டமா அதிபரே இது தொடர்பாக தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். வழக்கு விசாரணை செயயும் நீதிபதிகளையும் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றது. அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் நாட்டில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கும் போது அது எதற்கு என அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நாம் பேசும் போது, மஹிந்தானந்த அளுத்கமகே எம்மை பார்த்து ஏன் பயமா என கேட்டு பயமுறுத்த பார்க்கின்றார்.

எம்மை பயமுறுத்தி அடக்க முடியாது. முடிந்தால் செய்து பாருங்கள். அன்று ஜே.ஆர்,செய்த நடவடிக்கையால் இறுதியில் ரணில் மக்களிடம் மன்னிப்புக் கோரினார். அவ்வாறான பயங்கரமான விடயங்களை மேற்கொள்ளத்தேவையில்லை. அதற்காக நாங்கள் பயப்படவும் மாட்டோம் முடிந்தால் செய்து பாருங்கள் என்றார்.

Exit mobile version