Tamil News
Home செய்திகள் தமிழ்த் தரப்பை ஐக்கியப்படுத்தும் ரெலோவின் முயற்சியை வரவேற்கிறோம் -சுரேஷ்

தமிழ்த் தரப்பை ஐக்கியப்படுத்தும் ரெலோவின் முயற்சியை வரவேற்கிறோம் -சுரேஷ்

மாகாணசபை முறைமையைக் காப்பதற்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்மையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது அறிக்கையை வரவேற்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

அவரது ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

அண்மையில் ரெலோவின் பேச்சாளர் பதின்மூன்றாவது திருத்தத்தையும் மாகாணசபையையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார். ரெலோவின் பேச்சாளர் என்ற அடிப்படையில் அது ரெலோவின் கருத்தாகவே கொள்ளப்படும்.

1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈபிஆர்எல்எவ், ஈஎன்டிஎல்எப் இணைந்து இணைந்த வடக்கு-கிழக்கு மகாணசபையை உருவாக்கினோம். 1990ஆம் ஆண்டு மாகாணசபை கலைக்கப்பட்டு 2009ஆம் ஆண்டுவரை யுத்தம் நீடித்தது. யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அர்ப்ப சொற்ப சலுகையான மாகாணசபை உரிமைகளைப் பறிக்கின்ற அதேசமயம், புதிய அரசியல் சாசனத்தினூடாக மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்கின்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

மாகாணசபை முறைமையை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக கொண்டுவந்தது என்ற அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் உடனடியாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதையும் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளதாத தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பல தரப்புகள் கையில் இருப்பவற்றைக் கோட்டை விட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில், மாகாணசபையைக் காப்பாற்ற முற்படுவது வரவேற்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் ரெலோவின் இந்த முன்முயற்சி வரவேற்கத்தக்கது. கடந்த காலத்தில் 13ஆவது திருத்தம் என்பதே தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்குப் போதுமானதல்ல. ஆகவே அது ஏற்புடையதுமல்ல அதனை தும்புத்தடியால்கூட தொடுவதற்கு நாங்கள் தயாரில்லை என்ற அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களது கருத்துகள் அமைந்திருந்தன. அதே கருத்தினை ரெலோ கொண்டிருந்தாலும்கூட, இன்று தனது நிலையை மாற்றிக் கொண்டதானது கூரிய அவதானத்திற்குரியது.

ஆனால் இது வெறும் ஊடக அறிக்கையையும் தாண்டி இதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. அதற்கான முயற்சிகளை எடுத்து, தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேசி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய கடமைகளை ரெலோ தரப்பினர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிரசுக் கட்சியின் மேலாதிக்கம் காரணமாகவும் தன்னிச்iயான செயற்பாட்டின் காரணமாகவும் கூட்டமைப்பிற்கென புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ அல்லது ஒரு யாப்போ இல்லாமல் ஒழுங்கற்ற போக்கைக் கைக்கொண்டு செயற்பட்டது. தமிழரசுக் கட்சியினர் அங்கத்தவக் கட்சிகளை ஒதுக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கே குந்தகமாக விளங்கினர். தனது தன்னிச்சையான முடிவுகளை அங்கத்துவக் கட்சிகள் ஏற்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர். இவர்களது தன்னிச்iயான முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்தது.

தமிழரசுக் கட்சியின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுககு; கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய நீங்களும் உறுதுணையாக இருந்து வந்திருக்கிறீர்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய கட்சிகளுடனும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் பேசி அவற்றை ஒருங்கிணைப்பதனூடாகவே நீங்கள் கூறிய மாகாணசபை முறைமையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மாகாணசபைக்கான அதிகாரங்கள் போதாதென்பதை நாம் அதன் ஆரம்ப காலத்திலிருந்தே கூறி வருகின்றோம். சமஷ;டி அரசியலமைப்புமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கும் மாற்று கருத்து கிடையாது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், சிங்கள பௌத்த மேலாதிக்கமானது தமிழர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி, எந்தவித அதிகாரமுமற்ற ஒரு சிறுபான்மையினராக வாழ வேண்டும் என்ற ஒரு நிலையில், உள்ளவற்றைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. எனவே இன்றைய காலத்தின் தேவை கருதி, அவசிய அவசரம் கருதி வெறுமனே அறிக்கையோடு மட்டும் நிற்காமல் ரொலோ இதயசுத்தியுடன் முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Exit mobile version