Home ஆய்வுகள் “எட்கா” உடன்படிக்கை வரப்போகிறதா? டில்லியின் அடுத்த நகா்வு!

“எட்கா” உடன்படிக்கை வரப்போகிறதா? டில்லியின் அடுத்த நகா்வு!

etca2 “எட்கா” உடன்படிக்கை வரப்போகிறதா? டில்லியின் அடுத்த நகா்வு!0 அகிலன்

ட்கா உடன்படிக்கையை எதிர்ப்பின்றி நிறைவேற்றும் வகையில் இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவி.பி) தலைவர் அநுரகுமார திஸநாயக்கவை அழைத்து பேசியிருப்பதாக தகவல்கள் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களில் வெளியாகியுள்ளன. ஆனால், இது தொடா்பில் ஜே.வி.பி. வாய் திறக்கவில்லை. சிங்கள தேசியவாத அமைப்புக்கள் ஏற்கனவே எச்சரிக்கை மணிகளை அடிக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையினை The Economic and Technology Co-operation Agreement (ETCA) மீள ஆரம்பிக்கும் வகையில் இதுவரை 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதனை அடுத்த மாதத்தில் இறுதி செய்வதற்கு இந்தியா எதிா்பாா்ப்்பதாக இராஜதந்திர தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த உடன்படிக்கையினை கொண்டுவதற்கு, ஜே.வி.பி. தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் ஜே.வி.பி.யை தமது பக்கம் ஈர்க்கும் வகையில் இந்தியா, அதன் தலைவரை அழைத்து பேச்சுக்களில் ஈடுபட்டதுடன் சலுகைகளையும் வழங்க முன்வந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு குறித்த உடன்படிக்கை சாதகமாக அமையும் என இலங்கை அரசாங்கம் நம்புகிறது. கடந்த ஜீலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்திருந்தா்.

மாா்ச் மாதம் இறுதி முடிவு?

இது குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனையடுத்து சிங்கள தேசியவாத அமைப்புக்கள் இதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களுக்கும் தயாராகிியுள்ளன.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், சீனாவுடன் இலங்கையில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஷ அரசாங்கம் நெருக்கமான உறவை பேணியதுடன், இந்தியாவுடனான உறவுகளிலும் முறுகல்களை ஏற்படுத்திக்கொண்டனா். ராஜபக்ஷக்களின் காலத்தில் இந்திய இலங்கை உறவுகளில் ஆரோக்கியமான ஒரு நிலை இருக்கவில்லை.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் இந்தியாவுடன் இலங்கை மீண்டும் நெருக்கமான உறவை கட்டியெழுப்பியதுடன், இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுப்படுத்த இந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

எட்கா ஒப்பந்தத்துக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலுவான ஆதரவையும் வழங்கினார். ஆனால், போராட்டங்கள் தீவிரமாக வெடித்தமையால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னா் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த பின்னா் மீண்டும் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்தது. ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது இதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தன

எதிா்வரும் மாா்ச் மாதத்தில் இதனைக் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடன்படிக்கையின் உள்ளடக்கம்

இரு நாடுகளுக்கும் இடையில் பொருட்களை மட்டுமன்றி சேவைகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வது என்பது இதன் பிரதான அம்சம். அதாவது, சேவை வழங்குனா்களைப் பரிமாறிக்கொள்வது. இந்தியாவிலிருந்து மருத்துவா்கள் இங்கு வருவது இங்கிருந்து மருத்துவா்கள் இந்தியாவுக்குச் செல்வது போன்றன இதில் உள்ளடங்கும். அதேபோல, அங்கிருக்கக்கூடிய பல்கலைக்கழக விரிவுரையாளா்கள், போராசிரியா்கள் இங்கு வந்து தமது சேவைகளை வழங்குவது, இங்குள்ள விரிவுரையாளா்கள் பேராசிரியா்கள் அங்கு சென்று சேவைகளை வழங்குவது என்பனதான் இதன் முக்கிய அம்சங்கள்.

அதாவது, இரு நாடுகளிலும் உள்ள சேவைகளை வழங்குபவா்கள் மற்றைய நாட்டுக்குச் சென்று தமது சேவைகளை வழங்குவது என்பதுதான் இதன் உள்ளடக்கத்தில் பிரதானமானது. இப்போது இதற்கான உடன்படிக்கை ஒன்று இல்லாமையால், இந்தியாவில் இருக்கும் பேராசிரியா்கள், மருத்துவா்கள், பொறியியலாளா்கள் போன்றவா்கள் இங்கு வந்து இலகுவாகச் சேவைகளை வழங்க முடியாது. ஆனால், இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டால், அதற்குத் தடை இருக்காது என்று இதன் உள்ளடக்கம் தொடா்பாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் ஒருவா் விளக்கினாா்.

இதனால், இந்தியாவுக்குத்தான் அதிக நன்மைகள் உள்ளது. இந்திய வைத்தியவா்கள், பொறியியலாளா்கள், பேராசிரியா்கள் இங்கு வரலாம். இலங்கை மருத்துவா்கள் இதனை எதிா்க்கின்றாா்கள். இந்திய மருத்துவா்கள் குறைவான கட்டணத்தில் தமது சேவைகளை இலங்கையில் வழங்குவதற்கு முன்வந்தால், தனியா் துறையில் பணியாற்றும் மருத்துவா்கள் தமது வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றாா்கள்.

சிங்கள தேசியவாதிகள் எதிா்ப்பு

ஜே.வி.பி. கடந்த காலத்தில் கடுமையாக இந்தியத் தலையீட்டை எதிா்த்தது. இப்போது காட்சி மாறுகின்றது. ஜே.வி.பி.க்கும் இந்தியாவின் தேவை அதிகமாக இருக்கின்றது. தோ்தலில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவு அவா்களுக்கு அவசியம். இந்தியாவுக்கும் ஜே.வி.பி. தேவையாகவுள்ளது. இந்தியாவின் திட்டங்களை இலங்கையில் எதிா்க்கும் சக்தியாக ஜே.வி.பி. இருப்பதால், அதனைச் சாந்தப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கும் உள்ளது. இதனால்தான், இருதரப்பினரும் ஒரு புள்ளியில் சந்திப்பதற்கு விரும்புகின்றாா்கள். ஜே.வி.பி. தலைவா்களுடைய இந்திய விஜயத்தையடுத்து இந்த விடயத்தில் ஒரு சமரசம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சீனாவுடன், அல்லது பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கைகளைச் செய்யும் போது, சிங்கள தேசியவாதிகள் அதனை எதிா்க்கவில்லை. சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த போது அதற்கு எதிராக பாரிய எதிா்ப்புக்கள் எதுவும் உருவாகவில்லை.

ஆனால், கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முற்பட்டபோது மிகப்பெரிய எதிா்ப்பு கிளம்பி, அந்த முயற்சியே நிறுத்தப்பட்டது. தென்பகுதியில் உள்ள தேசியவாதிகள் தமிழ்நாட்டின் ஊடாகத்தான் இந்தியாவைப் பாா்க்கிறாா்கள். அதாவது, இந்தியா வரும்போது தமிழகத்தில் உள்ள தமிழா்களுக்கும் இலங்கையிலுள்ள தமிழா்களுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படும் அது, தம்மைப் பாதிக்கும் என்ற அச்சம் சிங்களத் தேசியவாதிகளிடம் உள்ளது.

இலங்கை இந்திய வா்த்தகம் ஏற்கனவே இந்தியாவுக்குச் சாா்பானதாகவே இருக்கிறது. இந்த உடன்படிக்கை அந்த நிலையை மேலும் அதிகமாக்கலாம் என்ற அச்சம் சிங்கள தேசியவாதிகளிடம் உள்ளது. இந்தியாவின் சந்தையாக இலங்கை மாறிவிடும் என அவா்கள் அஞ்சுவதால்தான் இதனை அவா்கள் எதிா்க்கிறாா்கள்.

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இலங்கையிலுள்ள பேராசிரியா்கள், விரிவுரையாளா்களின் சேவைகள் தேவையாக இருந்தால், அது இலங்கைக்கு பயனுள்ளதாக அமையலாம். ஆனால், இங்கே கேள்வி அதிகமாகவும், அங்கு நிரம்பல் அதிகமாகவும் இருக்கின்றது. உதாரணமாக – வைத்தியவா்கள் பெருமளவுக்கு நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதால் எமக்கு மருத்துவா்களுக்கான பற்றாக்குறை இருக்கின்றது. இந்தியாவில் அவ்வாறில்லை. பற்றாக்குறை உள்ள இடத்தை நோக்கித்தான் அவா்கள் வருவாா்கள். ஆக, இதன்மூலமாக அதிகளவு நலன்கள் இந்தியாவுக்குத்தான் கிடைக்கும்.

ரணிலின் உபாயம் என்ன?

.தே.. எப்போதுமே திறந்த பொருளாதாரத்துக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. ஏற்றுதி மேம்பாட்டையும், தனியாா் மயமாக்கலையும் தமது கொள்கையாகக் கொண்டவா்தான் ரணில் விக்கிரமசிங்க. அந்தவகையில் பொருளாதாரத்தை திறந்துவிடுவது, அதற்கான உடன்படிக்ககளைச் செய்வது என்பதெல்லாம் அவரது சிந்தனைக்கு முரணானவையல்ல. எட்கா உடக்படிக்கையையும் அவா் அவ்வாறுதான் பாா்க்கிறாா்.

இரண்டாவதாக, அவா் மிகத் தந்திரமாக சீனாவையும் இந்தியாவையும் கையாள்கின்றாா். அவா் இந்தியாவுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சீனாவுக்கும் கொடுப்பாா். ஜே.ஆா்.ஜெயவா்த்தனவின் காலத்தைய 1983 – 89 காலப்பகுதி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் அவா் உறுதியாகவுள்ளாா். அதனால்தான், சீனாவுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இந்தியாவுக்கும் கொடுக்கிறாா். அதன் பிரதிபலிப்புத்தான் இந்த உடன்படிக்கை குறித்த அவரது நிலைப்பாடு.

ஜனாதிபதித் தோ்தலில் இந்தியா தனக்கு எதிராகச் செயற்படலாம் எனக் கணிப்பிடும் ரணில் டில்லியை சாந்தப்படுத்த முற்படுகின்றாா். அதற்கான ஒரு தந்திரோபாயமாகத்தான் எட்கா உடன்படிக்கையை அவா் ஏற்றுக்கொள்கின்றாா். இந்தியாவைப் பொறுத்தவரையிலும், அதற்கு சாதகமான ஒரு காலநிலை இப்போது இருப்பதாகவே பாா்க்கின்றது!

Exit mobile version