Home ஆய்வுகள் உலக மையநீரோட்ட ஊடகங்களை புரிதல் -ந.மாலதி

உலக மையநீரோட்ட ஊடகங்களை புரிதல் -ந.மாலதி

மையநீரேட்ட ஊடகங்கள் சில நாடுகளையும் அதன் தலைமைகளையும் மோசமாக சித்தரித்து வந்ததும் வருவதும் கண்கூடு. மையநீரோட்ட ஊடகங்களை பற்றி புரிதல் இல்லாமல் இவற்றை தொடர்ச்சியாக வாசிப்பவர்களும் இவை பரப்புரை செய்யும் கருத்துக்களுக்கு அடிமையாகுவார்கள் என்பதும் கண்கூடு.

இம்மையநீரோட்ட ஊடகங்கள் பொய் தகவல்கள் பரப்பினார்கள் பரப்புவார்கள் என்பதும் இதை ஆழமாக வாசிப்பவர்களுக்கு தெளிவாக தெரியும். இராக்கில் சதாம் ஹூசேன் இராசயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்ற பரப்புரையையும், அவரை போர்குற்றவாளி என்று தூக்கிலிட்டதையும், இன்று இராக் நாட்டின் நிலைமையையும் நாம் மறக்கலாகாது. லிபியாவின் கடாபி பற்றி வந்த அவதூறுகளையும் அவர் படுமோசமாக கொலை செய்யப்பட்டதையும் இன்றைய லிபியாவின் நிலமையையும் நாம் மறக்கலாகாது.

இன்றும் இதே ஐ-அமெரிக்கா உலகெங்கும் இராணுவ தளங்கள் அமைப்பதில் கண்ணாக உள்ளது. எங்கெல்லாம் நல்ல அரசுகள் இல்லையோ, அவர்களை அணைத்து, அவர்களை “நமது கெட்டவர்களாக” கொண்டாடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் ஐ-அமெரிக்காவை எதிரியாக பார்த்த இந்தியாவும் இன்று ஐ-அமெரிக்காவின் இராணுவ கூட்டாளியாக மாறி வருகிறது. இந்தியாவின் தலைமையில் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நாம் படிக்க வேண்டியது.fi aa உலக மையநீரோட்ட ஊடகங்களை புரிதல் -ந.மாலதி

இம்மையநீரோட்ட ஊடகங்கள் ஈழத்தமிழர்களின் ஆயுத போராட்ட காலத்தில் அவர்களைப் பற்றி தொடர்ச்சியாக மோசமாக சித்தரித்து வந்ததும் அதற்கு பல தமிழர்களும் தமிழர் அல்லாதவர்களும் அடிமையாகிதும் தெரிந்ததே. இறுதியில் என்ன நடந்தது இப்போது நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஈழத்தமிழர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இனியும் ஈழத்தமிழர் இந்த மையநீரோட்ட ஊடகங்கள் பரப்பும் கருத்துக்களுக்கு அடிமையாகாமல் இருப்பதுதான் இங்கு முக்கியமானது.

முக்கியமாக இலங்கை தீவில் உயிர்த்த ஞாயிறு தாக்குலும் அதன் அடியொற்றி தொடரும் ஐ-அரெிக்கா தலையீடுகளும் தரும் தெளிவை தமிழர் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத்தான் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்த தலையீடுகள் தொடர்கின்றன. இதுதான் உண்மையாக இருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரண்டாம் உலக போருக்கு பின்னரான ஏனைய ஐ-அமெரிக்க தலையீடுகளை பற்றி வில்லியம் பிளம் என்பவர் எழுதிய “நம்பிக்ககை கொலை” என்ற நூலையொட்டி இப்பத்தியில் முன்னர் வந்த ஒரு தொடரும் இதற்கு ஆதாரம். நோம் சொம்ஸ்கியும் இதையேதான் “பரப்புரை மாடல்” என்ற நூலில் முதலில் விரிவாக விளக்கினார்.

இத்துணை ஆதாரங்கள் இருந்தும் உலகின் பெரும்பான்மை மக்கள் மையநீரோட்ட ஊடகங்களின் கருத்துக்களுக்கு அடிமையாக இருப்பதை எவ்வாறு புரிந்து கொள்ளலாம். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். அதிகார மையங்களுக்கு மனிதர் இயற்கையாகவே ஈர்க்கப்படுவது இதில் முதன்மையான காரணம். இது இன்றைய மையநீரோட்ட ஊடகங்களுக்கு மட்டுமல்ல, காலம் காலமாக மனிதர்கள் வாழ்ந்த பலவிதமான வாழ்க்கை முறைகளிலும் இதுதான் நடந்தது.

மனிதர்களை ஆட்டுவது பொருளாதார சுயநலத்திற்கும் அப்பால் அதிகார ஆசையே என்று பல தசாப்தங்களுக்கு முன்னர் பெட்ரன்ட் ரஸ்சல் எழுதிவிட்டார். அதிகாரத்தை அடைய முடியாதவர்கள் அதிகாரம் உள்ளவர்களை அண்டி வாழ்வார்கள்.

இவ்விடயத்தில் மனிதகுரங்கின வகைகளை ஆய்வு செய்பவர்கள் சொல்வதையும் தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளது. மனித குரங்கின வகைகள் பற்றிய ஆய்வுகளை ஆங்கிலத்தில் primatology என்று குறிப்பிடுவார்கள். மனிதர், சிம்பன்சி, பொனொபோ, கொரில்லா மற்றும் ஒராங்குட்டான் என ஐந்து வகையான மனிதகுரங்கின வகைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

இவற்றின் பரிணாம வளர்ச்சியின் காலங்களையும் இவற்றின் மரபணுக்களையும் அவதானித்து  மரபணுக்களில் மனிதருக்கு ஒரேயளவாகவும் நெருக்கமாகவும் இருப்பது சிம்பன்சியும் பொனோபோவும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். மனிதகுரங்கினங்கள் எல்லாம் மனிதரைப் போலவே சமூகமாக வாழ்பவை. சிம்பன்சி ஆணாதிக்க சமூகமாகவும் பொனொபோ பெண்ணாதிக்க சமூகமாகவும் வாழ்கின்றன. சிம்பன்சி பற்றி ஆய்வாளர்கள் பல காலமாக ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார்கள். சிம்பன்சி சமூக அரசியலில் ஆண்களுக்கு அதிகாரம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்காக கொலைகளும் இடம்பெறும்.

மனிதருக்கும் அவ்வாறே என்றுதான் பல காலமாக நம்பி வந்தார்கள். ஆனால் மனிதக்குரங்கினங்களில் மனிதர் போல ஏனையவை உலகளாவிய தொடர்புகளுடனும் தங்குநிலைகளிலும் வாழவில்லை. இன்றைய மனித இனத்தின் உலகளாவிய வாழ்க்கை முறை புதியது. இருந்தாலும் மனித ஆண்களுக்கு அதிகாரத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக பொனோபோக்கள் சமூகம் பெண்களின் கூட்டொருமையில் தங்கியிருக்கிறது. மனித இனம் பொனொபோக்கள் போலும் வாழமுடியும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

டேவிட் ஸ்லோன் வில்சன் (David Sloan Wilson) என்ற பரிணாம உயிரியல் (Evolutionary Biology) ஆய்வாளர் வேறொரு கோணத்தில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை மரபணுக்களின் பரிணாமத்துக்கு அப்பாலும் மேலும் விரிவக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

மனிதர்கள் சிறு மானிட சமூகங்களாக மேலும் பரிணாமம் அடைந்திருக்கின்றன என்பது இவர் வைக்கும் கோட்பாடு.

இவற்றில் ஒத்துழைப்பு அதிகமுள்ள சமூகங்களே பாதுகாப்பாக இருந்ததால் ஒத்துழைப்பை போற்றும் சமூகங்களே பரிணாமாத்தில் வெற்றிபெற்றுள்ளன. இதுவே சமயங்கள் உருவாக காரணம். ஆரம்ப காலத்தில் சமயங்கள் ஒத்துழைப்பை வளர்த்தன. இதனால்தான் சமயங்கள் அன்று மானிட பரிணாமத்தின் இருந்துள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயம் ஆரம்பிப்பதற்கு முன்னர், தோன்றிய பரிணாமம். அப்போது மனிதர்கள் சிறு சமூகங்களாகவே வாழ்ந்தார்கள். கடைசி 10,000 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உருவான மனித சமூக மாற்றங்கள் ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்ட சமூகத்தை புரட்டிப்போட்டுள்ளது.

இன்றைய உலகின் இனவழிப்புகளுக்கும், அருவருப்பான ஏற்றத்தாழ்வுகளுக்கும், சூழல் அழிவுக்கும் இந்த அண்மைய 10,000 ஆண்டு மாற்றங்களே அடிப்படை. மனித சமூகங்கள் சிறு குழுக்களாக ஒத்துழைத்து வாழும் ஒரு உலகளாவிய வாழ்க்கை முறை உருவாகினால்தான் இத்தீமைகளிலிருந்து மாற்றங்கள் கிடைக்கும். ஒருவழியில் பார்த்தால் விடுதலைப்புலிகள் உருவாக்கிய சமூகமும் இத்தகையதாகதான் இருந்தது.

மையநீரோட்ட ஊடகங்கள் பரப்பும் கருத்துக்களுக்கு மக்கள் ஏன் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை வேறொரு வழியிலும் புரிந்து கொள்ளலாம். சார்பு கோட்பாடு (Dependency Theory) உலக நாடுகளை நான்கு பிரிவுகளாகவும் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மக்களை அதிகார வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என இரண்டு பிரிவுகளாகவும் பார்க்கிறது. நான்கு பிரிவிலும் உள்ள அதிகார வர்க்கம் மையநீரோட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மேற்குலக உழைக்கும் மக்களும், புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உட்பட,  மையநீரோட்ட பொய்களால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

வளரும் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் தான் உலகத்தில் மிகவும் பெரும்பான்மையானவர்கள். இவர்கள் தான் இக்கருத்துக்களால் அதிக தீமைக்கு உள்ளாகிறார்கள். இந்த மக்களும் மையநீரோட்ட பொய்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விடயம். ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைவிட முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சரி. இது எப்படி என்று நாம் கேட்கலாம்.

வளரும் நாடுகளில் உள்ள மக்கள் தங்களுக்கு அண்மையில் உள்ள அதிகார வார்க்கத்தின் சுயநலத்தையும் கூட ஓரளவு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்களின் நலன்கள் சேர்ந்தே பாதுகாக்கப்படுகின்றன என்பதும் மேற்குலக அதிகார வர்க்கம் வளரும் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக இயங்குகின்றன என்பதையும் தான் இந்த உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களும் ஐநாவும் கூட அதிகார வர்க்கம் சார்ந்தே இயங்குகின்றன என்பதை இந்த உழைக்கும் மக்கள் புரிந்து கொள்வதில் தான் பிரச்சனைகள் உள்ளன. இந்த சர்வதேச அமைப்புக்களின் தலைமைகளும் மேற்கூறிய மையநீரோட்ட கருத்துக்களை எதிர்ப்பதில்லை என்பதிலிருந்து இவற்றின் போக்கை நாம் ஊகிக்க வேண்டும். ஆனால் இவ்வமைப்புக்கள் உழைக்கும் ஏழை மக்களின் நலன்களுக்காக இயங்குகின்றன என்ற கருத்து உழைக்கும் மக்களின் மனதில் வேரூன்றியுள்ளது என்பதுதான் பிரச்சனை. இவ்வமைப்புக்களும் தங்களுக்கு கிடைக்கும் நிதியின் பலத்தை கொண்டு உழைக்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன.

அண்மையில் புலம்பெயர் தமிழ் பள்ளி ஒன்றில் ஒரு நிகழ்வுக்காக ஒரு ஈழத்து மீனவர் பாடலை யூரியூப்பில் தேடினார்கள். கிடைத்த வீடியோ பாடல் முல்லைத்தீவில் ஒரு பாடசாலை பிள்ளைகள் பாடியது. இப்பிள்ளைகள் அமர்ந்திருந்த அரங்கின் பின் கட்டியிருந்த பனரில் கொட்டை எழுத்துக்களில் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஏராளமான அரசசார்பற்ற நிறுவனங்களும் பனரில் குறிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த பனரில் தமிழ் மொழி மருந்துக்கும் இல்லை. காலம் காலமாக காலனியாளர்கள் காலனி நாட்டினரை அடிமைகளாக கையாண்டதையே இது நினைவுக்கு கொண்டு வருகிறது. அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் யாருடைய நலனுக்காக உழைக்கின்றன என்பதை இதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

அதிகாரத்தை அண்டி வாழும் மனித இயற்கைக்கும் அப்பால், அறிவியல் வளர்ச்சியிலும் இன்று சமநிலை இல்லாமையும் உழைக்கும் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மையநீரோட்ட ஊடகங்கள் பற்றிய விழிப்புணர்வு உழைக்கும் மக்களுக்கு தேவை. அதற்கான மக்களின் அறிவை வளர்ப்பது மாற்றத்திற்கான முதலாவது படி.

இதை உணர்ந்து உழைக்கும் மக்களின் கல்வியை முன்னெடுத்தவர்களில் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போலோ ஃபிராரி முதன்மையானவர். மையநீரோட்ட ஊடகங்களை புரிந்து கொண்டால், உழைக்கும் மக்கள் கைகோர்ப்பதில்தான் மாற்றம் வரும் என்ற முடிவுக்கு உழைக்கும் மக்கள் வருவார்கள். அப்போதும் ஐ-அமெரிக்கா பார்த்துக்கொண்டு இருக்காது. விழிப்புணர்வு உள்ள குழுமங்களை தேடி அழிக்கும். விடுதலைப்புலிகளை அழித்தது போல.

இவ்வாக்கத்தில் பல ஆய்வாளர்களின் கருத்துக்கள் மேலோட்டமாக தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. அதிகாரம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பெட்ரன்ட் ரஸ்சல் (Betrand Russel), primatogy ஆய்வாளர்களின் பெண்கள் கூட்டொருமையில் இயங்கும் பொனொபோக்கள், David Sloan Wilson ஆய்வாளரின் சிறிய மானிட சமூகங்களும் ஒத்துழைப்பும், லத்தீன் அமெரிக்காவில் தோன்றிய சார்புக்கோட்பாடு, வில்லியம் பிளமின் ஐ-அமெரிக்கவின் “நம்பிக்கை கொலை” பற்றியவையே இவை. இவற்றையும் விட நவதாராளவாதம் பற்றிய அறிவும் முக்கியமானது. அதுபற்றியும் நோம் சொம்ஸ்கி உட்பட பலரின் கருத்துக்கள் இப்பத்தியில் முன்னர் எழுதப்பட்டுள்ளன.

 

Exit mobile version