Home ஆய்வுகள் ”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில்...

”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II)

இந்நூல் 470 பக்கங்களையும் 56 அத்தியாயங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாட்டில் ஐ-அமெரிக்க இராணுவமும் சிஐஏயும் செய்த தலையீடுகளை விபரிக்கின்றது. இவ்விடயத்தைப்பற்றிய மிகச்சிறந்த நூல் இதுவென்று நோம் சொம்ஸ்கி சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர் இந்நூலில் சொல்பவற்றிற்கான ஆதாரங்களையும் உசாத்துணையாக சேர்த்திருக்கிறார். 2003இல் வெளியிடப்பட்ட இந்நூலில் 1994 வரையான சம்பவங்கள் விபரிக்கப்படுகிறது. அக்காலத்திற்குப் பின்னர் ஆப்பானிஸ்தானிலும் இராக்கிலும் லிபியாவிலும் இடம்பெற்றவைகளையும் இன்னும் பலவற்றையும் இதில் நிச்சயமாக சேர்க்கலாம். இந்நூலிலுள்ள சில அத்தியாயங்களின் சுருக்கம் ஐந்து பகுதிகளாக தொடரும்.

பூகோளத்தை, அதாவது இன்றைய பூகோள அரசியலை, அறிவதற்கு இரு பிரிவினர் பற்றி நாம் தெரிந்திருக்க வேணும். ஒன்று உலகெங்கும் போராடும் மக்கள் பற்றியது. மற்றையது வல்லாதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் பற்றியது. இவையிரண்டுமே நாம் வழமையாக தகவல்கள் தேடும் இடங்களில், ஊடகங்களானாலும் சரி கல்வி நிறுவனங்களானாலும் சரி, கிடைப்பதில்லை. கிடைத்தாலும் திரிபு செய்யப்பட்டே கிடைக்கின்றன.

காரணம் இத்தகவல்கள் கிடைக்கும் இடங்கள் வல்லாதிக்க சக்திகளின் ஆளுமையிலேயே இயங்குகின்றன. ஒரு தேடலினூடாவே உண்மையை அறிய வேணடியுள்ளது. மேலும், அருமையாக கிடைக்கும் இவ்வாறான உண்மை தகவல்கள் தமிழ் மொழியில் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. தேடலினூடாகவும் கூட இவற்றை தமிழ் மொழியில் பெற்றுக் கொள்வது சிரமம். தமிழருக்கு முக்கியமாக தெரிய வேண்டிய வல்லாதிக்க சக்திகள் என்றால் அவை ஐ-அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, இவற்றின் சக்திக்கு இன்று கீழ்படியும் ஐநாவும்.ff ”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” - தமிழில் ந. மாலதி

ஐ-அமெரிக்கா தனது பேரசை தக்க வைக்க மற்றைய நாடுகளின் விவாகாரங்களில் பல வகையான மோசமான தலையீடுகள் செய்வதை ஐ-அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாட்டு மக்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஐ-அமெரிக்காவின் நடவடிக்கைகளின் மோசடியை இம்மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்காளா என்பது கேள்விக்குறியே. இம்மக்கள் இதை முழுமையாக உள்வாங்கி அதனடிப்படையில் தமது அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதிலிருந்து இதை ஊகிக்கலாம்.

ஐ-அமெரிக்காவின் மோசடியை முழுமையாக அறியாமல் இருப்பது மட்டும் தான் இதற்கு காரணமல்ல. ஐ-அமெரிக்காவின் நடவடிக்கைகளை வெளிக்கொணருவது தனிப்பட்டரீதியில் ஒருவருக்கு தீமை தரும் என்ற பயமும் அதில் உண்மை இருப்பதுவும் இன்னுமொரு காரணம்.

ஐ-அமெரிக்க தலையீடுகளின் நீண்ட வரலாறு – பாகம்-1

சீனா 1945-1960: மாவோ உளக்கோளாறு உடையவரா?

இவ்வத்தியாயம், மாவோவின் தலைமையிலான சீனப் கம்யூனிசப் புரட்சிக் காலத்தில் ஐ-அமெரிக்காவின் இராணுவ தலையீடுகளை விபரிக்கிறது”மாவோ உளக்கோளாறு உள்ளவர் என்று தொடர் பரப்புரை செய்த ஐ-அமெரிக்கா அவருடைய புரட்சியை அழிப்பதற்காக சியங்-காய்-சேக் என்பவரை தனது அடியாளாக வைத்திருந்தது.

 கம்யூனிஸ்டுகளுடன் போரிடுவதற்கு இவருக்கும் இவரது ஆட்களுக்கும் ஐ-அமெரிக்கா பெரும்தொகையான உதவிகளைச் செய்தது.”. ஏழைச் சீன மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் ஆதரவு வழங்கினார்கள். தமது தரப்புக்கு தோல்வி வருவதை அறிந்து கொண்ட ஐ-அமெரிக்கா சியாங்கையும் அவனது ஆட்களையும் தாய்வானுக்கு விமானத்தில் ஏற்றி இறக்கினார்கள். இதற்கு முதல் தாய்வானை இதற்காக ஆயத்தம் செய்வதற்கு அங்கிருந்த 28,000 மக்களை கொலை செய்தார்கள். பிற்காலத்தில் கொரியா போரின் போது ஐ-அமெரிக்கா சீனாவின் மேல் கிருமிகளை பரப்பினார்கள். ஆசிரியரின் ஒரு பந்தி,

”1952 ஜளவரியிலிருந்து மார்ச் வரை சீனாவின் வட-கிழக்கு பகுதியிலும் கொரியா மேலும் ஐ-அமெரிக்கா கிருமிகளையும் கிருமிகள் காவிய பூச்சிகளையும் பெரும் தொகையாக விமானத்திலிருந்து போட்டார்கள் என்ற செய்தியை சீனா பெருமுயற்சி எடுத்து பரப்பியது. இதற்கான சாட்சியாக அவ்விமானங்களை ஓட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட 38 கைப்பற்றப்பட்ட விமானிகளின் வாக்குமூலங்களை காட்டியது.

இவ்விமானிகள் இந்நடவடிக்கை பற்றி மிக ஆழமான தொகையான விபரங்களை சொன்னார்கள். அதாவது எம்மாதியான குண்டுகள், பூச்சிகள், கிருமிகள் போடப்பட்டன என்றெல்லாம் சொன்னார்கள். அதே நேரத்தில் இக்கிருமிக் குண்டுகளினதும் அதிலிருந்த பூச்சிகளதும் படங்களும் வெளியிடப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில், சுவீடன், பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, பிரேசில், சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் கொண்ட ஒரு சர்வதேச விஞ்ஞான குழுஅமர்த்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக சீனாவில் ஆய்வுகள் நடத்திய பின்னர் இக்குழு பல படங்களுடன் 600 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அவர்களின் முடிவு: 

 கொரியா, சீனா நாட்டு மக்கள் ஒரு கிருமி போராயுதத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.  இவை ஐ-அமெரிக்காவின் படைகளால் செய்யப்பட்டன. இதற்கு பல விதமான முறைகள் கையாளப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில ஜப்பானியர்கள் இரண்டாம் உலக போரின் போது உருவாக்கியவை போலத் தெரிகிறது.

மேலே இறுதியாக சொல்லப்படுவது ஜப்பானியர்கள் சீனாவின் மேல் 1940 இலிருந்து 1942 வரை தொடுத்த கிருமிப்போரை குறிப்பிடுகிறது. இதற்கு பொறுப்பாக இருந்த ஜப்பானிய விஞ்ஞானிகளை ஐ-அமெரிக்கா 1945 இல் கைது செய்தது. இவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பட்டு பதிலுக்கு கிருமிபோர் பற்றிய தொழில்நுட்பத்தை ஐ-அமெரிக்கப் படைதுறை ஆய்வு மையத்திலுள்ள விஞ்ஞானிகளிடம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது. சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வுக்காலத்தில் இது சீனாவுக்கு தெரிந்திருந்தது.

வாக்குமூலம் கொடுத்த ஐ-அமெரிக்க விமானிகள் சீனாவால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் பிளம் குறிப்பிடுகிறார். அத்துடன் பிடல் கஸ்ரவின் கியூபா உட்பட வேறுபல இடங்களில் ஐ-அமெரிக்கா இராசாயன போர் தொடுத்தது பற்றியும் இங்கே பிளம் குறிப்பிடுகிறார்.

பாகம் 2 தொடரும் …

 

Exit mobile version