Home செய்திகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன் – சிகிச்சையளிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கடிதம

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன் – சிகிச்சையளிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கடிதம

santhan உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன் - சிகிச்சையளிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கடிதமதிருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று சிறை கைதிகள் உரிமைகள் மையம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், சாந்தன், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு திருச்சி சிறப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால், அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும்.

சிறுநீரக பாதிப்பால் சாந்தனின் கால்கள் வீங்கியுள்ளன. கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களாக அவருக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. அவர் உயிருக்கு போராடுகிறார் என்பதால் அவரை காப்பாற்ற வேண்டும் என்று சிறை கைதிகள் உரிமைகள் மையம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளது.

சாந்தன் என்று அறியப்பட்ட சுதேந்திரராஜா இலங்கையை சேர்ந்தவராவார். இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் உட்பட 7 பேருக்கு இந்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுமார் 30 வருட சிறை தண்டனையின் பின்னர் தமிழ்நாடு அரசின் பொது மன்னிப்பில் கடந்த 2022 நவம்பரில் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், அவர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப் பட்டுள்ளார். இலங்கை வருதற்காக அவர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். எனினும், அவருக்கு கடவுச் சீட்டு வழங்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Exit mobile version