Tamil News
Home உலகச் செய்திகள் உடல்களை எரிக்க இடமில்லை: இந்தியாவில் தொடரும் அவலம்

உடல்களை எரிக்க இடமில்லை: இந்தியாவில் தொடரும் அவலம்

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 10 ஏக்கர் நிலத்தில் கூடுதலான தகன சுடுகாடுகள், உடல்களை அடக்கம் செய்வதற்கென இரண்டு அடக்க இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஓக்சிஜன் தட்டுப்பாட்டு மரணங்கள்,  மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் சிகிச்சையின்றி இறப்பவர்கள் என்று டெல்லியில் கொரோனா இறப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால் உடல் அடக்க இடுகாடு மற்றும் சுடுகாடுகளில் பிணங்கள் வரிசையாகக் காத்திருக்கும் காட்சி உலகை உலுக்கி வருகின்றன.

இந்நிலையில், சுடுகாடுகளில் உடல்களை எரிப்பதற்காக   உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். வரும் நாள்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுவதால் தற்காலிகத் தகன மேடைகளை அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடங்கள், பூங்காங்கள், காலி மைதானங்கள் போன்றவற்றில் தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

டெல்லியின் சராய் காலே கான் மயானத்தில் 27 புதிய தகன மேடைகள் கட்டப்பட்டுள்ளன. அருகில் உள்ள பூங்காவில் மேலும் 80 தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் தகவலின்படி,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 உயர்ந்துள்ளது.   உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version