Home ஆய்வுகள் இஸ்ரேல் சந்திக்கப்போகும் தந்திரோபாய வெற்றியும் மூலோபாயத் தோல்வியும் – வேல்ஸில் இருந்து அருஸ்

இஸ்ரேல் சந்திக்கப்போகும் தந்திரோபாய வெற்றியும் மூலோபாயத் தோல்வியும் – வேல்ஸில் இருந்து அருஸ்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 60 நாட்களை கடந்தும் தொடர்கின்றன. ஒக்டோபர் 7 ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலினுள் மேற்கொண்ட தாக்குதலில் 300 இராணுவத்தினரும் 1200 பொதுமக்களும் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் வான் மற்றும் தரைத்தாக்குதல்கள் 7 நாட்கள் இடைநிறுத்தப்பட்டபோதும் தற்போது மீண்டும் தொடர்கின்றது.

முதலில் வடக்கு காசா பகுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தற்போது தெற்கு நோக்கி திரும்பியுள்ளது. காசா நகரப்பகுதியில் இருந்து 162 ஆவது படையணியும், கிழக்கு பகுதியில் இருந்து 36 ஆவது படையணியும் தாக்குதல்களை கடந்த திங்கட்கிழமை (4) ஆரம்பித்துள்ளன.

கடந்த இரண்டு மாதங்கள் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் இதுவரையில் 17,000 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7212 பேர் சிறுவர்கள் எனவும், 4885 பேர் பெண்கள் எனவும் அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது. 45,616 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 8963 பேர் சிறுவர்கள். மேலும் 7800 பேர் காணாமல் போயுள்ளனர், அவர்களில் 4700 பேர் பெண்கள்.

அங்கு 286 சுகாதாரத்துறை பணியாளர்களும், 80 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 60 சமரில் 30,000 படையினரை கொண்ட ஹமாஸ் அமைப்பின் படையில் 5000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என வொசிங்டன் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் சில நூறு படையினரே கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், இஸ்ரேலின் தரப்பில் தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 85 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பிரித்தானியாவை சேர்ந்த 19 வயதான படைவீரரும் அடங்கியருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தாம் மேற்கொண்டுவரும் கெரில்லா தாக்குதல்களில் 30 இற்கு மேற்பட்ட கவசவாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக அல்குசாம் பிரிகேட் தெரிவித்துள்ளது.

இரு தரப்பும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. காசா பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் ரெல் அவிவ் பகுதியில் வீழ்ந்து வெடித்ததால் பொதுமக்களின் இருப்பிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் வான் தாக்குதல்களினால் பல கட்டிடங்கள் அழிவடைந்துள்ளன. மேலும் இந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் இஸ்ரேல் மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை குண்டு ஒன்றை எப்-16 விமானத்தில் இருந்து வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூகவலைத்தளங்களில் கிடைக்கப்பெற்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் வீசப்பட்ட குண்டு ஸ்பைஸ்-2000 எனப்படும் 900 கிலோ எடையுள்ள குண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

bomb இஸ்ரேல் சந்திக்கப்போகும் தந்திரோபாய வெற்றியும் மூலோபாயத் தோல்வியும் - வேல்ஸில் இருந்து அருஸ்இஸ்ரேலிய தயாரிப்பான இந்த குண்டு எப்-15, எப்-16, மிராஜ்-2000 மற்றும் எஸ்யூ-30 ஆகிய விமானங்களில் இருந்து வீசப்படக்கூடியது.

அதேசமயம், இதுவரையில் வீசப்பட்ட குண்டுகளின் அளவு இரண்டு அணுக்குண்டுகளுக்கு சமன் என அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தற்போது மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் தந்திராபாய ரீதியில் இஸ்ரேலுக்கு ஒரு வெற்றியை கொடுத்தாலும், நீண்டகாலத்தில் அது மூலோபாயத் தோல்வியை கொடுக்கும் என பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லெயிட்ஸ் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.

அதாவது காசாவில் கொல்லப்படும் பொதுமக்கள் தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை தீர்ந்துவிட்டதாகவே இதனை கருத முடியம். இந்த விவகாத்தில் இஸ்ரேலுக்கும் பிராந்திய நாடுகளுக்குமிடையில் சிக்கி நசிபடுவதாகவே அமெரிக்கா உணர்கின்றது.

இதனிடையே, பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் கலவரங்களில் ஈடுபடுபவர்களுக்கு அமெரிக்காவுக்கான நுளைவு அனுமதி வழங்குவது தடை செய்யப்படும் என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டன் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நுளைவு அனுமதி தடை செய்யப்படும். வன்முறைகளை தடுப்பதற்கு இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது தொடர்பில் நான் பலஸ்தீன அதிகாரிகளுடனும் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கிளிங்டன் நிர்வாகம் மேற்கொண்ட நுளைவுஅனுமதி தடைகளுக்கு பின்னர் தற்போதே அமெரிக்கா தடைகளை கொண்டுவந்துள்ளது. இதுவரை இஸ்ரேலிய படையினர் மேற்கு கரையில் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் நூற்றக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பலஸ்தீன துதரகத்தின் தூதுவர் குசாம் செம்லற் தெரிவித்துள்ளார். இது ஒரு சரியான நடவடிக்கை. ஆனால் சட்டவிரேத குடியேற்றவாசிகள், அவர்களுக்கு நிதி வழங்குபவர்கள், ஆதரவு தரும் அமைப்புக்கள் ஆகியவற்றையும் அமெரிக்கா தடை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐ.நாவின் மனிதாபிமான இணைப்பாளரான லைன் கெஸ்ரிங்கிற்கான நுளைவு அனுமதியை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது. காசாவின் நிலை மிகவும் மோசமாக வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையே இந்த தடைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

கேஸ்ரிங்கை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கைகளை பார்க்கும்போது தற்போதைய மோதல்கள் ஒரு பிராந்திய மோதலாக மாறுவதை தடுப்பதற்கு மிகவும் தீவிரமாக செயற்படுவதாக தெரிகின்றது.

ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் புதன்கிழமை(6) ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு திடீரென மேற்கொண்ட பயணமும் தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியை அதிகமாக்கியுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் பூட்டீனின் பயணத்தில் முக்கிய பேசு பொருளாக இருக்காம் என்று கருதப்படுவதால் பேர் பிராந்தியத்திற்குள் விரிவடைவதை அமெரிக்கா விரும்பவில்லை என தெரிகின்றது.

அதேசமயம், இஸ்ரேலின் முன்றாவது மிகப்பெரும் துறைமுகமான எய்லற் துறைமுகம் மூடப்படுவதாக குளோப்ஸ் என்ற இஸ்ரேலின் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த துறைமுகத்தின் முடக்கம் என்பது இஸ்ரேலிய கப்பலகளின் பயணப்பாதையை அதிகரிக்கலாம். அது அதிக செலவீனங்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

கப்பல்கள் மீது ஏமன் படையினர் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்களே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. புதன்கிழமையும்(6) இந்த துறைமுகத்திற்கு மேலாக ஏமனின் குரூஸ் ஏவுகணைகளை இஸ்ரேலிய படையினர் இடைமறித்து தாக்கியதாக அல் அரபியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட யுனிரி எக்ஸ்புளோரர் என்ற கப்பல் கடுமையாக சேதமடைந்ததாகவும், மற்றொரு கப்பல் மீதும் தாக்குதல் இடம்பெற்றதாகவும் இஸ்ரேலிய படைத்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அவற்றை காப்பாற்ற சென்ற அமெரிக்காவின் கார்னி எனப்படும் டிஸ்ரேயர் கப்பல் மீதும் ஹாதிஸ் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது போர் அமெரிக்காவின் கைகளை மீறிச் சென்றுவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.

 

Exit mobile version