Home செய்திகள் இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்பட்ட நினைவுத்தூபி

இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்பட்ட நினைவுத்தூபி

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த தூபியில் மீள் திறப்பு என்பது  தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்பட்ட நிலையில், மறைமுகமாக யாருடைய முகங்களும் பதியப்படாமால் ஆட்களின் பிரவேசங்கள் இன்றி திறந்துவைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த தூபியின் வரலாறு குறித்து ‘இலக்கு’ மின்னிதழ் ஊடாக சிறு தொகுப்பினை வழங்குகிறோம்.

ஆரம்பம்

images 1 இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்பட்ட நினைவுத்தூபி

நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதிருந்த மாணவர் ஒன்றியத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  பல்வேறு அழுத்தத்தின் மத்தியிலும் மாணவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மதமளவில் தூபியின் கட்டுமானப் பணிகள் முழுமையாக்கப்பட்டது.

பாதுகாப்பு தரப்பால் அழுத்தம்

குறித்த முள்ளிவாய்க்கால் தூபி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கக்கூடாது எனவும் அங்கு  மூவின மாணவர்களும் கல்விகற்பதால் அது இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறி பல்வேறு மட்டத்தில் இருந்தும் நிர்வாகத்தினருக்கும் மாணவர்களுக்கும் பல அழுத்தங்கள் அப்போது கொடுக்கப் பட்டுள்ளதாகவும், அதை நேரடியாகவே நிர்வாகத்தினர் மாணவர்களுக்கும் தெரிவித்து குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறும் கூறியுள்ளனர். இருப்பினும் மாணவர்கள் இணைந்து அதை நிறைவேற்றியிருந்தனர்

இரவோடு இரவாக இடித்தழிப்பு

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருடைய பணிப்பின் பெயரில் குறித்த தூபி 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி முற்று முழுதாக அழிக்கப்பட்டது.

தூபியை மீளமைக்க கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்

இடிக்கப்பட்ட தூபியை மீள அமைக்க அனுமதி வழங்கக் கோரி பல்கலை மாணவர்கள் 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். அவர்களுடைய போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகியது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் அழுத்தம் ஏற்பட்டது.

தூபியை மீளஅமைக்க அனுமதி வழங்கிய துணைவேந்தர்

முள்ளிவாய்க்கால் தூபியை  அதே இடத்தில் மீள அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்த துணைவேந்தர், அதற்கான அடிக்கல்லையும் 11.01.2020 அன்றைய தினம் நாட்டிவைத்து மாணவர்களின் போராட்டத்தினையும் நிறைவு செய்து வைத்தார்.

நிதி சேகரிப்பு

குறித்த முள்ளிவாய்க்கால் தூபி அழிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன்,  சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. எனவே இதனுடைய மீளமைப்பில் அனைவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என தெரிவித்து மாணவர் ஒன்றியத்தினர் குறித்த தூபியை மீள அமைப்பதற்கு பொதுமக்களிடம் நிதி கோரி அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கணக்கு இலக்கத்தையும் அறிவித்திருந்தனர்.

கட்டுமானப்பணிகளில்  குழப்பங்களும் தாமதமும்

இடிக்கப்பட்ட தூபியை உடனடியாகவே கட்டி முடிக்க வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கையாகவும் இருந்தது. இந்த நிலையில் தூபி கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினராலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

குறித்த தூபியை மேலும் மெருகூட்டுவதற்கு மாணவர்கள் விரும்பியதாகவும் அதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்ததாலும்  மாணவர்களின் கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே அமைக்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூபி வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்

ஒரு தரப்பினர் பழைய தூபியின் வடிவிலேயே புதிய தூபி அமைய வேண்டும் என தெரிவித்தனர் இன்னொரு தரப்பினர் பழைய வடிமைப்புடன் மேலும் மெருகூட்டி தூபி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். இறுதியாக புதிய வடிவமைப்பிலேயே தூபி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது வடக்கு பக்கமாக 18 அடி தூணும் கிழக்கு பக்கமாக 5 அடி தூணும் நிறுவப்பட்டது. அது வடக்கு கிழக்கை குறிக்கும் முகமாகவும் மே மாதம் 18 ஆம் திகதியை குறிக்கும் முகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 அடி தூணில் இறுதி யுத்த காட்சிகள் சுவரோவியங்களாக வரைவதற்கு மாணவர்கள் தீர்மானித்திருந்தனர். ஆனால் அது நிர்வாகத்தினரால் தடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஏற்கனவே இருந்த தூபியில் கைகளுடன் சேர்த்து செல்கள் புதைந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய தூபியில் கைகள் மாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளன செல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

சமாதான தூபிக்கே அனுமதி

பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் தூபி சமாதான தூபியாக தான் இருக்க வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே தூபி கட்டுமான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

தூபி திறப்பதில் அழுத்தம்

குறித்த தூபி மீளமைப்பதற்கான பணிகள் விரைவாக இடம்பெறுகிறது எனவும், வேறு அழுத்தங்கள் எவையும் தமக்கு தற்போது இல்லை எனவும் மாணவர் ஒன்றியத்தினர் ஆரம்பத்தில்  தெரிவித்திருந்தனர். ஆனால் இறுதியாக தூபி திறந்து வைப்பதில் மாணவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. கடந்த 23 ஆம் திகதி குறித்த தூபி துணைவேந்தரால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 21 ஆம் திகதி துணைவேந்தருக்கு இருதயத்தில் சிறு பாதிப்பு ஏற்பட்டு திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக தூபியை திறந்து வைப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

மறைமுகமாக திறந்துவைக்கப்பட்ட தூபி

இந்த நிலையில் 23 ஆம் திகதி காலை 7 மணிக்கு மாணவர்களால் குறித்த தூபி திறந்து வைக்கப்பட்டது. ஆனால் குறித்த நிகழ்வுக்கு ஊடகங்களை அனுமதிக்க வேண்டாம் என மாணவர்களுக்கு நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மறைமுகமாக திறந்துவைக்கப்பட்டது. கலந்துகொண்டவர்களின் முகங்களை மறைத்தே மாணவர்களும் ஊடகங்களுக்கு புகைப்படங்கள், காணொளிகளை அனுப்பி வைத்திருந்தனர்.

இது தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் பிரதிநிதிகளிடம் கேட்ட போது, தமது நிர்வாக காலப்பகுதியில் இந்த தூபியை திறந்து வைக்க வேண்டும் என பணிகளை ஆரம்பித்தோம். அதன் படி கட்டுமானப் பணிகளை நிறைவேற்றினோம். துணைவேந்தர் குறித்த தூபியை திறந்து வைப்பதாக இருந்தார். ஆனால் துரதிஸ்டவசமாக அது தடைப்பட்டு விட்டது. நிர்வாகத்தினால் எமக்கும் பல கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டிருந்த நிலையில். இந்த தூபியை எப்படியாவது திறந்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே எமக்கு இருந்தது. அதனடிப்படையில் திறந்து வைத்தோம் என தெரிவித்தனர்.

பல்கைக்கழகத்தில் அமைக்கப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அனாதரவான முறையில் திறந்து வைக்கப்பட்டமை கவலையளித்தாலும், இனிவரும் காலங்களில் எமது வரலாற்றை அழிக்கும்  செயற்பாடுகளை இனங்கண்டு தமிழ்இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை இளம் சமுதாயத்தினர் புரிந்து அதன்படி நடக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பு.

தொகுப்பு சோஜா

 

Exit mobile version