Tamil News
Home செய்திகள் இந்தியா, ஜப்பான் உதவியுடன் கொழும்பு துறைமுக அபிவிருத்தி

இந்தியா, ஜப்பான் உதவியுடன் கொழும்பு துறைமுக அபிவிருத்தி

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான் உதவியுடன் சிறிலங்கா அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் முக்கியமான இடத்தை கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் பகுதி வகிக்கவும்,   தெற்காசியாவைச் சுற்றி கடல் போக்குவரத்தை அதிகரிக்கவும் மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் முடிவு செய்தன.

பாதை மற்றும் அணைத் திட்டத்தைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் இவ்வேளையில், ஜப்பான் தனது சுதந்திர மற்றும் திறந்த இந்தோ – பசுபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் மூலோபாயத்தை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்கை வகிக்க விரும்புகின்றது என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் மூன்று நாடுகளும் கையெழுத்திடும் என்றும், எதிர்வரும் மார்ச் மாதம் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாரிய கொள்கலன் கப்பல்கள் நுழையும் வகையில் இந்த முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக மூன்று நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Exit mobile version