Tamil News
Home உலகச் செய்திகள் ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ தலைமை, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியது.

ஆனால், சுயாதீன தேர்தல் பார்வையாளர்கள், அந்த தேர்தல் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடந்ததாக கூறினார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் ஆங் சான் சூச்சீ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா விதிகளை மீறியது, உரிமம் இல்லாமல் வாக்கி டாக்கி கருவிகளை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போதைய விசாரணையை ஆங் சான் சூ ச்சீ எதிர்கொண்டுள்ளார்.

இது தவிர அவர் மீது ஊழல் முறைகேடு மற்றும் அலுவல்பூர்வ இரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை பின்னர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இராணுவ நிர்வாகம் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

இது தவிர, ஆங் சான் சூ ச்சீ மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கின் விசாரணை செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 75 வயதாகும் ஆங் சான் சூ ச்சீக்கு 14 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிலையில்,இராணுவ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் குழுக்கள் கண்டித்துள்ளன. எதிர்கால தேர்தல்களில் ஆங் சான் சூ ச்சீ போட்டியிடுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version